மந்திரச்சொல்
ஒரு வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவருமே சத்தம் போட்டு பேசுபவர்களாக இருக்கும்பட்சத்தில், அங்கு வளரும் குழந்தைக்கு சத்தம் போட்டு பேசுவது இயல்பாகவே தெரியும். அமைதியாகப் பேசமுடியும் என்பதே தெரியாது.
நிறைய புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கும் நண்பர்களுடன் பழகினால், நல்ல புத்தகங்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். நிறைய சினிமா பார்க்கும் நண்பர்களுடன் பழகினால் நல்ல சினிமாக்கள் பார்க்க முடியும்.
மது குடிக்கும் நண்பர்களுடன் பழகினால், எல்லோரும் மது குடிக்கிறார்கள், மது குடிப்பது தவறு இல்லை என்ற எண்ணமே தோன்றும். எனவே, ஒருவரது நடவடிக்கையை அவரது எண்ணங்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை. அவர் எப்படிப்பட்ட நபர்களுடன் பழகுகிறார் என்பதும் தீர்மானிக்கிறது. அதனால் சுற்றியிருக்கும் நபர்களைக் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
சுற்றியிருக்கும் மனிதர்களால் மனநிலை, பழக்கம், தன்னம்பிக்கை, வாழ்க்கைப் பாதை ஆகியவற்றை மாற்றிவிட முடியும். ஒருவர் தனியாக இருக்கும்போது ஒரு விதமாகச் சிந்திக்கலாம். ஆனால் தினமும் பழகும் மனிதர்கள் அவருடைய சிந்தனையை மெதுவாக மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அந்த மாற்றத்தை அவராலே உணர்ந்துகொள்ள முடியாது. அவரை அறியாமலே சுற்றியிருக்கும் மனிதர்களின் பேச்சு, பழக்கம், நம்பிக்கை, அணுகுமுறை, பயம், ஆசை போன்றவை மனதில் வேர் விட்டு முளைத்துவிடுகிறது.
எதிர்மறை மனிதர்களுடன் இருந்தால், ‘உன்னால் முடியாது’, ‘உலகத்தில் நேர்மையாக இருந்தால் முன்னேற முடியாது’, ‘வெற்றிக்கு அதிர்ஷ்டம் தேவை’ என்றெல்லாம் பேசுவார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளை தினமும் கேட்கும் ஒருவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய திறமையை சந்தேகிக்கத் தொடங்குவார்.
அதுவே, சுற்றம் மாறும்போது சிந்தனையும் மாறுகிறது. சிந்தனை மாறும்போது பழக்கங்கள் மாறுகின்றன. பழக்கங்கள் மாறும்போது வாழ்க்கையின் திசை மாறுகிறது. தன்னம்பிக்கை என்பது முழுவதும் உள்ளிருந்து மட்டும் உருவாகும் ஒன்று அல்ல. ஒருவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதில் தொடங்கி, அவரை சுற்றியிருப்பவர்களுக்கும் பங்கு உண்டு.
முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கையுடன் பேசுபவர்களுடன் பழகும்போது, முயற்சி செய்வதற்கான ஆர்வம் தானாகவே வரும். அதனால் எப்படிப்பட்ட மனதர்களுடன் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நல்ல மனிதர்கள் வாழ்க்கையை மாற்றுவார்கள்.
உயரத்தை நோக்கிச் செல்ல விரும்பினால், உயரத்தைப் பார்த்து அஞ்சாத மனிதர்களுடன் இருங்கள். வளர விரும்பினால், வளர்ச்சியைப் பற்றி பேசுபவர்களுடன் இருங்கள்.
அதேநேரம், எப்போதும் பாராட்டும் மனிதர்கள் மட்டுமே தேவையில்லை. தவறைச் சுட்டிக்காட்டி திருத்தும் மனிதர்கள் வட்டம் தேவை. விழும்போது சிரிப்பவர்களைவிட, எழுந்து நிற்கக் கை நீட்டுபவர்கள் தேவை. வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாமல் மேலும் ஊக்கம் கொட்ப்பவர்கள் தேவை. இப்படிப்பட்ட மனிதர்களுடன் பழகுவது எனர்ஜியை அதிகரிக்கும். நம்பிக்கை தரும். தோல்வியில் தளராது முன்னேற முடியும்.
வாழ்க்கையை மாற்றுவதற்கு சில நேரங்களில் புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய சிந்தனைகள், புதிய உரையாடல்களே போதுமானதாக இருக்கும். எனவே, நல்லவண்ணம் வாழ்வதற்கு நல்ல சுற்றத்தை உருவாக்குங்கள். அன்பு, நம்பிக்கை, அறிவு, முயற்சி, நேர்மை, வளர்ச்சி ஆகியவற்றை விதைக்கும் மனிதர்களுடன் இருந்தால், ஒருவரது வாழ்க்கை சிறப்பாக மலரத் தொடங்கும்.
அதற்காக நெகடிவ் மனிதர்களை வெறுக்க வேண்டியதில்லை. அவர்கள் பக்கத்தில் நிற்கத் தேவையில்லை. கொஞ்சம் விலகியிருந்தால் போதும்.
சுற்றம் நல்ல மனதை உருவாக்குகிறது. நல்ல மனம் சிறந்த பழக்கங்களை உருவாக்குகிறது. சிறந்த பழக்கங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது. எனவே, சுற்றத்தை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். வெற்றி நிச்சயம்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
