தடைகள் அதிகரிக்கும்போது பாதையை மாற்றுங்கள், இலக்கை அல்ல.

மந்திரச்சொல்

ஒரு சாலை மூடப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் செல்ல வேண்டிய இடத்தை மாற்றிக்கொள்வதில்லை. மாற்றுப்பாதையைத் தேடுகிறோம். வேறு வழியில் சென்று குறிப்பிட்ட இலக்கை அடைகிறோம். அதே அணுகுமுறை அனைத்து முயற்சிகளுக்கும் பொருந்தும்.

ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கிறது. ஆனால் சந்தை மாறுகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறுகின்றன. போட்டியாளர்கள் புதிய உத்திகளைக் கொண்டு வருகிறார்கள். பழைய தொழில்நுட்பம் பொருத்தமற்றதாக மாற்றுகிறது.

இந்த நேரத்தில் “நாம் இப்படித்தான் திட்டமிட்டோம்; இதையே செய்வோம்” என்று பிடிவாதமாக இருப்பவர்கள் உண்டு. இன்னொரு வகையினர், “நமது இலக்கை அடையும் வழி வேலை செய்யவில்லை. எனவே வழியை மாற்றுவோம்” என்று புதிய அணுகுமுறையை மேற்கொள்வார்கள்.

இதற்கு நெட்ஃபிளிக்ஸ் சிறந்த உதாரணம். நெட்ஃபிளிக்ஸ் ஆரம்பத்தில் இன்று நாம் அறிந்த ஸ்டீரிமிங் நிறுவனமாக இருக்கவில்லை. அதன் ஆரம்ப வணிகம் டிவிடிகளை வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்பமும், மக்களின் பார்வைப் பழக்கமும் மாறத் தொடங்கியபோது, அந்தப் பழைய முறை நீண்ட காலத்திற்கு போதாது என்பதை நிறுவனம் புரிந்துகொண்டது.

அதேநேரம், தனது அடிப்படை இலக்கான அதாவது, மக்கள் விரும்பும் பொழுதுபோக்கை அவர்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்ப்பதைக் கைவிடவில்லை. ஆனால் அந்த இலக்கை அடையும் பாதையை மாற்றிக்கொண்டது. டிவிடியில் இருந்து இணையவழி ஸ்டீரிமிங்கிற்கு நகர்ந்தது. பின்னர் பிற நிறுவனங்களின் சினிமாக்கள், தொடர்கள் வழங்குவதில் மட்டும் நிற்காமல், சொந்தமாக திரைப்படங்கள் மற்றும் தொடர்களை உருவாக்கும் திசையிலும் சென்றது. இதுதான் மேலாண்மையில் முக்கியமான பாடம்.

இலக்கு நிலையாக இருக்கலாம். ஆனால் அதை அடையும் உத்தி நிலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தோல்வியும் பாதையும் ஒன்றல்ல. பலர் ஒரு திட்டம் தோல்வியடைந்தால், தாங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், “இந்த வழிமுறை தோல்வியடைந்தது” என்பது வேறு, “நமது இலக்கே தவறு” என்பது வேறு. இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவரால் மட்டுமே ஒரு நிறுவனத்தை நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

ஒரே வழியில் தொடர்ந்து செல்வது எப்போதும் விடாமுயற்சி அல்ல. சில நேரங்களில் அது பிடிவாதம். உண்மையான விடாமுயற்சி என்பது, நான் செல்ல வேண்டிய இடத்தை விட்டுவிட மாட்டேன். ஆனால் அங்கு செல்வதற்கான வழியை மாற்றத் தயங்க மாட்டேன்’ என்பதுதான். இதுதான் ஒரு நல்ல தலைவரின் மனப்பான்மை.

அதே நேரத்தில், எல்லா இலக்கையும் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதுமில்லை. சில நேரங்களில் புதிய தகவல்கள் கிடைக்கும்போது ஆரம்ப இலக்கு தவறானது என்பது தெரியலாம். அப்போது இலக்கையும் மறுபரிசீலனை செய்யலாம்.

எனவே மேலாண்மையின் புத்திசாலித்தனம் என்பது இலக்கை எப்போது காப்பாற்ற வேண்டும்? எப்போது பாதையை மாற்ற வேண்டும்? எப்போது இலக்கையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வதில் இருக்கிறது.

எனவே, ஒரு தடையைப் பார்த்தவுடன் இலக்கை விட்டுவிடாதீர்கள். இலக்கு சரியாக இருந்தால் பாதையை மாற்றுங்கள். திட்டம் வேலை செய்யவில்லை என்றால் உத்தியை மாற்றுங்கள். சந்தை மாறினால் அணுகுமுறையை மாற்றுங்கள். தொழில்நுட்பம் மாறினால் கற்றுக்கொள்ளுங்கள்.

வெற்றியாளர்கள் தடைகள் இல்லாத பாதையில் பயணிப்பவர்கள் அல்ல;
தடைகள் வந்தபோது புதிய பாதையை உருவாக்கத் தெரிந்தவர்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment