மந்திரச்சொல்
எல்லா தோல்விகளுக்கும் நாம் செய்த தவறுகள் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் விளைவாலும் தோல்வி வரலாம்.
நீங்கள் கடினமாக உழைத்திருக்கலாம். சரியாகத் திட்டம் போட்டிருக்கலாம். நேர்மையாக நடந்திருக்கலாம். திறமையை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம். இதுதான் வாழ்க்கையின் நிஜம். அதாவது, முயற்சி நம் கையில் இருக்கிறது. ஆனால், முடிவு முழுமையாக நம் கையில் இல்லை.
சச்சின் டெண்டுல்கர் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரும் டக் அவுட் ஆகியிருக்கிறார்கள். ஒரு போட்டியில் அவர் பூஜ்ஜியம் எடுத்ததால், அவரது திறமை பூஜ்ஜியமாகிவிடவில்லை. அவர் நன்றாகத் தயாராகி களமிறங்கலாம். முதல் பந்திலேயே அவுட் ஆகலாம். அது அவர் உழைப்பை பொய்யாக்காது.
வெற்றி என்பது முயற்சிக்கு கிடைக்கும் உத்தரவாதம் அல்ல. முயற்சி என்பது தோல்விக்குப் பிறகும் உங்களை மீண்டும் களத்தில் நிறுத்தும் சக்தி. டக் அவுட் என்பது ஒரு இன்னிங்ஸின் முடிவு மட்டும்தான். ஒரு கிரிக்கெட் வீரர் வாழ்க்கையின் முடிவு அல்ல.
தோல்வியை ஒரு நிகழ்வாகப் பார்க்காமல், நம்முடைய அடையாளமாகப் பார்ப்பதுதான் சிக்கலாகிறது. இந்த முயற்சி தோல்வியடைந்தது என்பதற்குப் பதிலாக, நான் தோல்வியடைந்தவன் என்று நினைப்பதுதான் ஆபத்தான மனநிலை.
அதனால், ஒரு தேர்வில் தோல்வி என்பதும் ஒரு தொழிலில் தோல்வி என்பதும் வாழ்க்கையின் தோல்வி அல்ல. சொந்த வாழ்க்கையிலும் சில தோல்விகள் வரலாம். காதல் முறிந்துபோகலாம். உறவு உடைந்து போகலாம். இதெல்லாம் நீங்கள் அன்புக்கு தகுதியானவர் என்பது அர்த்தம் இல்லை.
சில நேரங்களில் தோற்றதற்குக் காரணம் உங்கள் எதிரி திறமையானவர் என்பதல்ல. அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்திருக்கலாம். அவருக்கு சூழ்நிலை சாதகமாக அமைந்திருக்கலாம். அவ்வளவுதான். அதனால், வெற்றி வந்தால் அகந்தை வேண்டாம். தோல்வி வந்தால் தாழ்வு மனப்பான்மை வேண்டாம். இரண்டுமே முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை.
எனவே தோல்விக்குப் பிறகு எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்வதற்கு முன்பாக, என் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அனைத்தையும் நேர்மையாகச் செய்தேனா என்று கேளுங்கள். எல்லாம் சரியாகச் செய்தும் தோல்வி வந்திருக்கலாம். இதனால் தோல்வியாளன் என்று வருந்த அவசியமில்லை.
சில கதவுகள் நாம் தவறாக நடந்ததால் மூடப்படுவதில்லை. அந்தக் கதவு நமக்கானது அல்ல என்பதற்காகவும் மூடப்படலாம். தோல்வி வந்தாலும் மீண்டும் எழுவது தான் உண்மையான வெற்றி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
