கேள்வி : உடலின் உள்ளுறுப்புகளின் பழுதுதானே மரணத்தை ஏற்படுத்துகிறது..? உறுப்புகள் பழுதுபட காரணம் என்ன..? மரணம் பற்றிய அறிவியல் மற்றும் ஆன்மிக விளக்கம் என்ன..? – வி.சாந்தி, அரியலூர்.
ஞானகுரு :
ஏதேனும் ஒன்றிரண்டு உள்ளுறுப்புகள் பழுதடைவதால் மட்டும் மரணம் வந்துவிடுவதில்லை. ஏனென்றால் இதயத்தின் வேலையைச் செய்யும் கருவிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஒட்டுமொத்த உறுப்புகளும் வேலையை நிறுத்துவதே மரணத்துக்கு இழுத்துப் போகிறது. இதயம் துடிப்பதை நிறுத்தினாலும் மூளையின் இயக்கம் நின்று போவதையே மரணம் என்று அறிவியல் சொல்கிறது. மனிதனின் உடலுக்குத்தான் மரணம் ஆன்மாவுக்கு மரணமே இல்லை என்கிறது ஆன்மிகம். பெரும்பாலான மதங்கள் மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்வு, விசாரணை இருப்பதாகச் சொல்கின்றன.
ஆன்மா என்பதை உயிர் என்று அழைக்கிறது பெளத்தம். ஒரு அகல் விளக்கிலிருந்து இன்னொரு விளக்கு ஏற்றப்படுவதால் கிடைக்கும் வெளிச்சத்தை ஜனனம் என்றும் விளக்கு அணைந்ததும் காணாமல் போகும் வெளிச்சத்தை மரணம் என்றும் விளக்குகிறது. அதற்கு மேல் அந்த உயிருக்கு விளக்கம் கிடையாது.
உள்ளுறுப்புகளை பாதுகாப்பதன் காரணமாக மரணத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாமே தவிர, தவிர்க்கவே முடியாது. ஆகவே, மூளையால் புரிந்துகொள்ள முடியாத மரணத்தைப் பற்றி யோசிக்காமல் வாழ்வதைப் பற்றி பேசுங்கள். அதுவே நிஜம்.