டாக்டர்.சு.முத்துச் செல்லக்குமார்
மனசுக்கு உற்சாகமளிப்பதற்கு காடு, மலை, நீர்வீழ்ச்சி என்று சுற்றுப்பயணம் செல்வது போன்று நோய் தீர்ப்பதற்கு ஊர் ஊராக அல்லது நாடு நாடாக சுற்றி மருத்துவம் செய்துகொள்கிறார்கள். இதுவே லேட்டஸ்ட் மருத்துவப்புரட்சி
பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவம் செய்ய, சிகிச்சை மேற்கொள்ள வெளி இடங்களுக்கு,வெளிநாடுகளுக்குச் செல்வதை ‘மருத்துவ சுற்றுலா’ (Medical Tourism) என்று கூறுகிறோம். இது ‘சுகாதார சுற்றுலா’ (Health Tourism) என்றும் ‘ஹெல்த் டூரிசம்’ என்றும் அழைக்கப்படுகிறது

மெடிக்கல் டூரிஸத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒருவர் சிகிச்சைப் பெற அந்த நாட்டை விட்டு வெகு தொலைவிலுள்ள மற்றொரு நாட்டிற்கு செல்வது முதல் வகை. ஒருவர் சிகிச்சைப் பெற அதே நாட்டின் மிக அருகிலுள்ள மற்றொரு நாட்டிற்குச் செல்வது இரண்டாவது வகை. ஒருவர் சிகிச்சைப் பெற அதே நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்வது மூன்றாவது வகை.
ஆரம்பத்தில் வளர்ச்சியடையாத நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் தங்கள் சொந்த நாட்டில் கிடைக்காத சிகிச்சைக்காக வளர்ந்த நாடுகளுக்குச் சென்றனர். ஆனால், இன்று யாரும் எதிர்பா்க்காதபடி வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் கூட வளரும் நாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைகளைப் பெறுகின்றனர்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் விஷயம் பொருளாதாரம். வளர்ந்த நாடுகளில் மருத்துவம் மிகமிக அதிக கட்டணமாக இருக்கிறது. இரண்டாவது காலம். வளர்ந்த நாடுகளில் பணம் கொடுத்தாலும் உடனடி சிகிச்சைக்கு வாய்ப்புகள் குறைவு. அதனாலே மெடிக்கல் டூரிசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகமாக இருக்கிறார்கல். இங்கு சிகிச்சைக் கட்டணங்கள் குறைவாக இருப்பதாலும்,வளர்ந்த நாடுகளில் சிகிச்சை செய்ய நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது இருப்பதாலும், தற்சமய சூழலில் விமான போக்குவரத்து, ஆன்லைன் சேவைகள் எளிதாக கிடைப்பதாலும் இந்த டூரிசம் சாத்தியப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வருகை தந்த நாட்டை அறிந்து கொள்ள முடியும். சிகிச்சைக்குப் பிறகு சுற்றிப் பார்க்கவும் முடியும். இதனால் தான் இந்தப் பயணம் ‘மருத்துவச் சுற்றுலா’ என்று அழைக்கப்பட்டது. உலகமயமாக்கலின் காரணமாக மருத்துவச் சுற்றுலா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது, உலகளவில் வளர்ந்து வரும் மிகப்தொழிலாக இன்று மாறிவருகிறது.
2020-ல் உலகளாவிய சுகாதார சுற்றுலாத் துறையின் மதிப்பு சுமார் 54 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2027-ல் இது நான்கு மடங்கு அதிகரித்து 207 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
பிற நாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, சுவிட்சர்லாந்து,ஸ்பெயின், இஸ்ரேல, மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் என அவற்றின் மேம்பட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக பயணப்படுகிறார்கள்
இந்தியாவும் சிறந்த மருத்துவ சுற்றுலாத் தலமாக உருவாகி வருகிறது. கடந்த காலங்களில் மருத்துவச் சுற்றுலா செய்யப்படும் நாடுகளில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. 2022-ம் ஆண்டில் 9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியது. 2026 ஆம் ஆண்டின் முடிவில் மருத்துவ சுற்றுலாவின் மூலம் கிட்டத்தட்ட 13 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன சிகிச்சைக்காக மட்டுமல்ல,பராம்பரிய சிகிச்சைக்காகவும் இந்தியாவிற்கு வரும் பயணிகள் அதிகரித்துள்ளனர். உதாரணத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை என்றால் கேரளா நோக்கி படை எடுக்கிறர்கள். மேலும் யோகா குறித்து அறிய அதிக ஆர்வம் காட்டும் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.
இங்கு ஏற்கனவே வந்தவர்கள் அதனைக் கற்கவும் பயிற்சி செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மைசூரு ,ரிஷிகேஷ் போன்ற இடங்களில் யோகா கற்க வரும் பயணிகள் அதிகரித்துள்ளனர். ஆக மாற்று சிகிச்சை என்றாலும் அதற்கு ஒரு தடமாக இந்தியா மாறி வருகிறது.
குறைந்த செலவில் சிறந்த உலகத்தரமான நவீன மருத்துவ வசதிகளை இந்தியாவில் பெற முடியும் என்ற நம்பிக்கை வெளிநாட்டு பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. இங்கு மருத்துவச் சுற்றுலாவிற்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. நன்கு பயின்று,அனுபவம் பெற்ற சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். மருத்துவரைப் பார்க்கும் நேரம், சிகிச்சை,அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு நேரம் இந்தியாவில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுககையில் குறைவாக இருக்கிறது.
இங்குள்ள மருத்துவமனைகள்,மற்றும் மையங்கள் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் உதவுவதில்லை. நோயாளிகளுடன் வருகின்றவர்கள் தங்குவதற்கும்,அவர்கள் சிரமம் இல்லாமல் விமானம் செய்ய பயணத்திற்கும் உதவி செய்கின்றன. இதில் விசா பெறுதல்,விமான பயண டிக்கெட் பெறுதல்,விமான நிலையத்திலிருந்து அவர்களை வரவேற்று அழைத்துச் செல்லுதல்,திருப்பி அனுப்புதல் ஆகிய சேவைகளையும் மருத்துவ மையங்கள் செய்து கொடுக்கின்றன.
அரசாங்கத்தின் ‘இ-டூரிஸம்’ விசா திட்டத்தின் மூலம் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கான விண்ணப்பம் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. தமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
வெளிநாட்டு பயணிகள் அல்லது நோயாளர்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக. புற்றுநோய் சிகிச்சைக்காக குறிப்பாக ரத்தப் புற்றுநோய்கள் சிகிச்சைக்காக, இதய அறுவை சிகிச்சை மற்றும் குடல்,ஜீரண மண்டல பிரச்சனைகளைத் தீர்ப்பற்காக, எலும்பியல் பிரச்சினைகளுக்காக, இன் விட்ரோ கருத்தரித்தல்( IVF) சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகிறார்கள்
சார்க் நாடுகள், மேற்கு ஆசியா, மொரிஷியஸ்,பங்களாதேஷ், மலேசியா, நேபாளம், நைஜீரியா, இலங்கை மற்றும் ஓமன் என்று 78 நாடுகளில் இருந்து அதிக வெளிநாட்டு பயணிகளை இந்தியா பெறுகிறது. இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே,கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத், கொச்சி ஆகிய நகரங்கள் தற்சமயம் மருத்துவ சுற்றுலாவில் முன்னணியில் இருக்கின்றன.
இந்தியாவுக்கு வரும் சர்வதேச நோயாளிகளில் 40 சதவீதம் பேர் தமிழகத்துக்கு வருகிறார்கள். சென்னை, ‘இந்தியாவின் சுகாதார தலைநகரம்’ என்று போற்றப்படுகிறது. ஏனென்றால், நமது நாட்டிலேயே மருத்துவச் சுற்றுலாவுக்கு சிறந்த உள்கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த அளவில்,இங்கு வருடம் தோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனை மாநில சுற்றுலாத் துறை உறுதி செய்துள்ளது.
இந்திய மருத்துவத் துறைக்கு இது ஜாக்பாட்.