ஜென் குட்டிக் கதைகள்

Image

தத்துவ முத்துக்கள்.

சின்னஞ்சிறு கதைகள் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்குபவை ஜென் ஸ்டைல். அந்த வகையில் புகழ்வாய்ந்த சில குட்டிக் கதைகளைப் பார்க்கலாம்.

பாதுகாப்பு!

ஜென்  குரு ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். திடீர் என்று நில அதிர்வு ஏற்பட்டதும் எல்லோரும் அந்த மண்டபத்தை விட்டு வெளியே ஓடினர். ஆனால் அந்த குரு மட்டும் இடத்தை விட்டு அசையவில்லை. பிறகு எல்லோரும் திரும்ப வந்து குருவிடம் கேட்டார்கள்.

அவர், ‘‘நானும்தான் ஓடினேன் நீங்கள் வேறு இடத்திற்கு ஓடினீர்கள்… நான் அதை விட பாதுகாப்பான இடத்திற்கு போனேன், அந்த இடம் என்னுள்தான் இருக்கிறது” என்றார் அந்த குரு.  

கவனம்!

ஜப்பானில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள், பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் ஆசிரியர் ஒருவரை தங்களுடைய கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.

கிராமத்திற்கு வந்த ஜென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.

கிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஜென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

ஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஜென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கீழே விழ வைத்தார். பின்பு திரும்பிப் பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்குச் சென்றவர்கள்தான். அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.

சமம்!

ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.

குரு அவரிடம், ‘‘நாம முன்பே பார்த்திருக்கோமா?’’ என்று கேட்டார்.

’’ஆம்…’’ என்றார் வந்தவர்.

’’அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றார் குரு.

அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, ‘‘நாம முன்பே பார்த்திருக்கோமா?’’ என்று கேட்டார்.

அவர், ‘‘இல்லை” என்றார்.

உடனே குரு, ‘‘அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்”  என்று அழைத்துச்சென்றார்  குரு. 

போட்டி!

ஒரு டீ கடைகாரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை டீ கடைகாரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்துவிட்டது. அப்போது மல்யுத்த வீரன் டீ கடைகாரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான். அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லாவிடில் அது பெரும் அவமானம். எனவே டீ கடைகாரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி ஜெயிக்கப் போகிறோம் என பயந்தான். அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்.

அவனது கதை முழுதும் கேட்ட அவர், ‘‘சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன?’’ என்று கேட்டார்.

’’30 நாட்கள்”  என்றான் அவன்.

’’இப்போது நீ என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டார்.

’’டீ ஆற்றுகிறேன்…” என்றான் அவன்.

‘’சரி, அதையே தொடர்ந்து செய்…” என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடைக்காரன். அப்போதும், ‘நீ இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று” என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது… அப்போதும் அதே அறிவுரைதான்.   போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடைகாரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், ‘‘நான் என்ன செய்ய வேண்டும்?’’  என்று கேட்டான்.

’’போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு…”  என்றார் துறவி.

மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.

’’வா.. முதலில் டீ சாப்பிடு…”  என்றான் கடைக்காரன்.

’’சரி…”  என்று அமர்ந்தான் வீரன். அவன் டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான். இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணிப் பார்த்தான் உடனே, ’’நான் உங்களை போட்டிக்கு அழைத்தது தவறு” என்று மன்னிப்பு கேட்டு போயே விட்டான்.  

Leave a Comment