• Home
  • ஞானகுரு
  • பெண் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் இல்லீங்க

பெண் மனதை புரிந்துகொள்வது கஷ்டம் இல்லீங்க

Image

இதுவே அந்த ரகசியம்

சூரிய ஒளியில் குளித்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே வந்தான் மகேந்திரன். அவர் மனதில் ஏதோ ஒரு கேள்வி நிற்பது தெரியவே, ‘நீ கேட்க வந்ததை கேள்’ என்றார் ஞானகுரு.

‘’பெண்ணின் மனதை அறியவே முடியாது, அது ஆழ்கடல் போன்றது. பெண்ணின் மனதை கடவுளாலும் தெரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் காலம் காலமாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே, உண்மையில் பெண் அத்தனை தூரம் ரகசியமானவளா.. அப்படி அவள் மனதில் என்னதான் இருக்கிறது?’’ என்று கேட்டார்.

‘’பெண்ணின் மனதை ஆண்கள் அறிந்துகொள்ள முயற்சி செய்வதே இல்லை. அதனால் இப்படி சொல்லி தப்பித்துக்கொள்கிறார்கள்…””

‘’உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்…’’

‘’ஒரு நகர்ப்புற கதையைக் கேள்” என்றபடி கதை சொல்லத் தொடங்கினார் ஞானகுரு.

நகர்வலம் வரும்போது அழகான ஒரு பெண்ணை கண்டதும், அந்த நாட்டு அரசன் காதலில் விழுந்தான். அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். அரசனை திருமணம் முடிப்பதற்கு அந்த பெண் ஒரே ஒரு நிபந்தனை விதித்தாள்.

ஒரு பெண் ஆழ் மனதில் என்ன நினைக்கிறாள் என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள். உடனே அரசவையைக் கூட்டி மந்திரிமார்கள், புலவர்கள், அறிஞர்களிடம் அந்த கேள்விக்கான பதிலைக் கேட்டான். அத்தனை பேரும் சொல்லிவைத்தது போலவே, ‘இதற்கு அந்த கடவுளாலும் பதில் சொல்ல முடியாது’ என்று கை விரித்தார்கள்.

அரசன் சோகத்தில் ஆழ்ந்துவிட்டான். சோகத்தை மறப்பதற்காக காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றான். அரசனின் மனதில் குழப்பத்தில் இருந்த காரணத்தால், எதிரே வந்த புலியை கவனிக்கத் தவறிவிட்டான். அரசனை புலி தாக்குவதற்குள், ஒரு வேடன் பாய்ந்துவந்து புலியைக் கொன்று அரசனைக் காப்பாற்றினான்.

வேடனின் வீரத்தை அரசன் பாராட்டினான். எதிரே வந்த புலியை கவனிக்காத அளவுக்கு ஏதோ கவலையில் இருப்பது போல் தெரிகிறதே என்று வேடன் கேட்டதும், தான் விரும்பிய பெண் கேட்ட கேள்வியைச் சொன்னான். இதற்கு பதில் தெரியாமல் தவிக்கிறேன் என்று சொன்னான்.

‘’நீங்கள் தைரியமாக நாட்டுக்குச் செல்லுங்கள்… நான் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை அறிந்து வருகிறேன்” என்று வேடன் சொன்னான். உடனே சந்தோஷமான அரசன், ’அப்படி நீ விடை கொண்டுவந்தால், என் நாட்டின் ஒரு பகுதிக்கு உன்னை அரசனாக்குகிறேன்” என்று சொல்லிவிட்டு நாடு திரும்பினான்.

இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது எளிது என்று நினைத்த வேடன், காட்டுக்குள் இருந்த ரிஷி முனிவர்கள் சிலரை சந்தித்து கேட்டான். அவர்கள் எல்லோரும் தெரியாது என்றே சொல்லி திருப்பியனுப்பினார்கள். அந்த காட்டுக்குள் ஒரு சூனியக்கார கிழவி இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறான். எனவே, அவளை தேடிச் சென்றான்.

மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அந்த சூனியக்காரக் கிழவியை கண்டுபிடித்து, அந்த கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அந்த கிழவி, ‘இந்த கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். இந்த பதிலால், உன் அரசனுக்கு திருமணம் நடக்கும். உனக்கு நாடு கிடைக்கும். எனக்கு என்ன கிடைக்கும்’ என்று கேட்டாள்.

உடனே வேடன், ‘நீ கேட்பதும் நியாயமான கேள்விதான். எனக்கு நாடு கிடைத்துவிட்டால், நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்” என்றான்.

உடனே வேடனுக்கு பதில் சொன்னாள் கிழவி. ‘தன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முடிவு என்றாலும், அதை தானே எடுக்க வேண்டும் என்பதுதான் பெண்ணின் ஆழ்மனது எண்ணம்” என்று சொன்னாள்.

உடனே இந்த பதிலை வேடன் அரசனிடம் சொல்ல, அவன் மனம் விரும்பிய பெண்ணிடம் சொல்ல, அவர்களுடைய கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது. உடனே வாக்கு கொடுத்தது போலவே, தன் நாட்டின் ஒரு பகுதியை வேடனுக்குக் கொடுத்தான்.

நாட்டுக்கு அரசனாக மாறிய வேடன், வாக்கு கொடுத்தது போலவே சூனியக்காரக் கிழவியிடம் சென்றான். ‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டான்.

“நீ என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்றாள் சூனியக்கார கிழவி. வேடன் வாக்கைக் காப்பாற்றுவதற்காக அதனை மனமார ஒப்புக்கொண்டான்.

வேடன் மனப்பூர்வமாகப் பதில் சொன்னதைக் கேட்டதும், அந்த சூனியக்காரக் கிழவி, அழகான தேவதை போன்ற உருவத்துக்கு மாறினாள்.

அவள் வேடனிடம், ‘உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதாவது உன்னுடன் மற்றவர்கள் இருக்கும்போது நான் இப்படி அழகியாக இருந்தால், தனியே  இருக்கும்போது கிழவியாக இருப்பேன். அப்படி இல்லை என்றால் தனியே உன்னுடன் இருக்கும்போது அழகியாக இருக்க வேண்டும் என்றால், வெளியே வரும்போது கிழவியாக இருப்பேன். உன்னுடைய விருப்பம் எது?’ என்று கேட்டாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான், “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், முடிவை நீ தான் எடுக்க வேண்டும்” என்று, சொன்னான்.

உடனே அந்த கிழவி, “முடிவை என்னிடம் விட்டுவிட்டதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதனால், இனி எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.” என்றாள்.

இந்த கதை என்ன சொல்லவருகிறது என்பது புரிகிறதா மகேந்திரா… பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். இதுதான் அந்த ரகசியம்” என்று முடித்தார்.

ஆச்சர்யத்தில் நின்றார் மகேந்திரன்.

Leave a Comment