ராணியைக் கைப்பற்ற சிப்பாயை இழக்கலாம்..!

வெற்றி தரும் மந்திரம்

சூழ்நிலை அல்லது மனிதர்கள் சாதகமாக இல்லாத நேரத்தில் வளைந்துகொடுப்பதுதான் புத்திசாலித்தனம். எதிர்த்து நிற்காமல் வளைந்துவிட்டோமே என்று மனதில் எதிர்மறையான எண்ணம் அல்லது வருத்தம் தோன்றலாம். ஆனால், இன்றைய சூழலில் இதுதான் நல்ல முடிவு என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ள வேண்டும். பிடிக்காத ஒரு முடிவு எடுத்துவிட்டதாக வருந்துவதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நேரம் அமையும்போது சரியான முடிவு எடுத்துவிட முடியும். இப்போது வளைந்துகொடுக்கவில்லை என்றால் இன்றைய தினம் பிரகாசமாக இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.  எதிர்கால நன்மைக்காக வளைந்துகொடுத்து போவது எந்த வகையிலும் தவறில்லை,

ஒருவகையில் இதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கை. சதுரங்க ஆட்டத்தில் எதிராளியின் ராணியை கைப்பற்றுவதற்காக நமது சிப்பாயை இழப்பது தவறு அல்ல. அப்படித்தான் வளைந்துசெல்வதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல விரும்புபவர்கள் நிச்சயம் வளைந்துகொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை விளக்குகிறது இந்த குட்டிக்கதை.

ஒரு போர்க்கப்பல் கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. எதிரே தென்பட்ட கப்பல், படகுகளை எல்லாம் விலகிச்செல்லும்படி கேப்டன் கட்டளை இட்டார். தன்னுடைய குரலுக்கு அத்தனை கப்பல்களும் பயந்து விலகிச்செல்வதை பார்த்த போர்க்கப்பல் கேப்டனுக்கு மிகுந்த சந்தோஷம். அதனால் கடலில் போர்க்கப்பல் தவிர எதுவும் நிற்கக்கூடாது என்று விரட்டிக்கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் போர்க்கப்பல் சாகசத்தை பார்ப்பதற்காக அந்த நாட்டு அதிபர் திடீரென ஒரு விசைப்படகில் கடலுக்குள் நுழைந்தார். ஒரு படகு கப்பலை நோக்கி வருவதை அறிந்த போர்க்கப்பல் கேப்டன், உடனே அந்த படகுக்கு எச்சரிக்கை கொடுத்தார். இன்னும் சில நொடிகளில் படகு திரும்பவில்லை என்றால் பீரங்கியால் சுட்டு மூழ்கடிக்கப்படும் என்று தெரிவித்தார். உடனே அதிபருடன் இருந்த அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் கப்பலை தொடர்புகொண்டு, அதிபர் வரும் படகை சுட்டுவீழ்த்துவதாக அறிவித்த கேப்டன் உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பதவி நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். அடுத்த நிமிடம் என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆம், பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக உடனடியாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் கேப்டன். இனி எந்த பயணிகளையும் துன்புறுத்தமாட்டேன் என்றும் பணிவுடன் சொன்னார்.

தேவையான நேரத்தில் பணிவு காட்டுவதும், வளைந்துகொடுப்பதும் தவறு இல்லை என்பதை அழுத்தமாக சொல்வதற்குத்தான் இந்த குட்டிக்கதை. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி திடீரென பணிந்து நடப்பதற்கும் வளைந்து கொடுப்பதற்குமான காலம் வரத்தான் செய்யும். இந்த நேரங்களில் வளைந்துகொடுப்பதுதான் புத்திசாலித்தனம். நான் நானாகத்தான் இருப்பேன், யாருக்காகவும் என் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பது வாழ்க்கையை பின்னோக்கி இழுத்துவிடும். அதனால் சில நேரங்களில் கெளரவத்தை இழக்கவேண்டி இருந்தாலும், பின்னர் மீட்டுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும்.

Leave a Comment