க்யூட் பியூட்டி
அழகு என்பது என்ன தெரியுமா? உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். உடல் ஆரோக்கியம் போலவே சரும பாதுகாப்பும் முக்கியம்.
சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கரை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம்.
அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும். இளமையோடு காட்சி தரும். சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும்.
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.
உணவுக்கு சுவை சேர்ப்பதற்கு மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் நெய்யை பயன்படுத்தலாம். முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினையில் இருந்து காப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் நெய் உதவுகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு ஈரப்பதம் அவசியமானது. போதிய ஈரப்பதமின்றி உலர்ந்த நிலையிலோ, பொலிவின்றி மந்தமாகவோ காட்சியளிக்கும் கூந்தல் அதிக சேதமடைய வாய்ப்புள்ளது.
அதேபோன்று நெய்யை கொண்டு கூந்தலுக்கும், உச்சந்தலைக்கும் மசாஜ் செய்யலாம். அது மயிர் கால்களின் செயல்பாட்டை தூண்டி, முடி வளர சாதகமான சூழலை உருவாக்கும். கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுக்கும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். நெய்யில் வைட்டமின் ஏ, இ ஆகியவை கலந்திருக்கிறது. அவை கூந்தலின் வளர்ச்சிக்கு துணைபுரியும். குளிர்காலத்தில் பொதுவாக பொடுகு பிரச்சினை தலைதூக்கும். அதற்கும் நெய் தீர்வு தரும்.
கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய் நல்ல வகையில் பயன்படுகிறது. குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
நெய்யை நன்றாக உருக்கி உச்சந்தலையில் தேய்த்தும் மசாஜ் செய்யலாம். அது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இப்படி கைக்கு அருகில் இருக்கும் பொருட்களை மட்டுமே வைத்து அழகுக்கு அழகு சேர்க்கலாம்.