கவலையைப் பற்றி கவலையா..?

Image

நாகேஷ் தத்துவம்

எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதருக்கு கவலையும் இல்லை என்கிறார்கள், அறிஞர் பெருமக்கள். ஆம், மனிதனுக்கு கவலைகளை உருவாக்குவதே எதிர்பார்ப்புகள்தான்.

இந்த உலகில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது, எனக்கு மட்டும்தான் கவலையும் துன்பமும் அதிகம் நிகழ்கிறது என்று எண்ணுகிறீர்களா..? கவலையை விடுங்கள். உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள். சந்தோஷமாக இருப்பதாக நீங்கள் நினைக்கும் அத்தனை நபர்களும் உள்ளுக்குள் கவலையுடனே வாழ்கிறார்கள். ஏதேனும் ஒரு கணத்திலாவது கவலையை அனுபவிக்காத மனிதன் யாரும் இல்லை.

ஆனந்தமாக இருப்பவர்களும் கவலைப்படுவதுண்டு. அதாவது, ‘வாழ்க்கை இறுதிவரையிலும் இதேபோன்று மகிழ்வுடன் நிலைக்க வேண்டுமே’ என்று கவலைப்படுகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்கள், ‘வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ’ என்று கவலைப்படுகிறார்கள். ஒருசிலர் எனக்கு ஒரு கவலையும் இல்லையே என்றுகூட கவலைப்படுவார்கள்.

கவலை என்பது மேகங்களைப் போன்றது. மேகத்துக்குப் பின்னே சூரியனோ, நிலவோ பெரும் வெளிச்சத்துடன் இருக்கிறது என்பது உண்மை. காற்றடித்தால் மேகம் விலகிவிடும் என்பதால், மேகத்துக்காக அதிகம் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.

கவலை என்பது நாம் உண்ணும் உணவிற்குச் சமமானது. சில சமயம் உணவில் உப்பு அதிகமாக அல்லது காரம் அதிகமாக இருக்கலாம். அதற்காக உணவு சாப்பிடுவதை  நாம் கைவிட முடியாது. அவ்வாறே, வாழ்க்கையில் கவலை என்பது வரத்தான் செய்யும், அதனை தாங்கிக்கொள்ளும் அல்லது தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் வேண்டும்.

கவலையைப் பற்றி நாகேஷ் திரைப்படத்தில் சொல்லும் வசனம் நூற்றுக்கு நூறு உண்மை. கவலை என்பது சிறிய கல்லைப் போன்றது. அதனை கண்ணுக்கு அருகே வைத்து பார்த்தால் ஆகாயத்தையே மறைத்துவிடும். கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்த்தால், அந்த கல் ஆகாயத்தை ஒப்பிடும்போது எத்தனை சிறியது என்பது தெரியும். ஆகவே, கவலையை நாம் மனதிற்குள் போட்டு சுமந்துகொண்டே இருக்கத் தேவையில்லை.

கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. குடும்பத் தலைவன் இறந்துவிட்டாரே என்று கவலைப்படுவதால், அவர் திரும்பிவரப் போவதில்லை. அதேபோன்று நடக்காத ஒன்றுக்காக கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை. விபத்து நடக்குமோ, தொழில் நஷ்டம் அடைந்துவிடுமோ, தேர்வில் தோல்வி கிடைக்குமோ என்றெல்லாம் நடக்காத விஷயங்களுக்கு கவலைப்படுவதிலும் அர்த்தமே இல்லை என்ற உண்மை புரிய வேண்டும்.

தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் கவலைக்கான முக்கிய காரணிகள். ஆகவே, கிடைக்காத ஒன்றுக்காக கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை.

தாங்கமுடியாத கவலையா..? உங்களுக்கு நெருக்கமான நட்பு, உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கவலைகளைப் பகிர்ந்துகொண்டால், நிச்சயம் சுமை குறையும்.  பகிரப்படாத கவலை மன அழுத்தத்தை உருவாக்கும். அந்த மன அழுத்தம் உடல் நலத்தையும் மன அழுத்தத்தையும் பாதித்துவிடும். ஆகவே, நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் கவலை காணாமல் போய்விடும்.

Leave a Comment