என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 110
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் சேவையைப் பிரதானப்படுத்திய பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வந்த சைதை துரைசாமிக்கு, 2011 மேயர் தேர்தலில் வரலாற்று சாதனை எனும் அளவுக்கு 5.19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை மக்கள் பரிசாகக் கொடுத்தார்கள். மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் கண்டு நெகிழ்ந்துபோனார் சைதை துரைசாமி.
இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்திருக்கும் சாதனை வெற்றி என்று, முழுமையான தரவுகளையும் ஆய்வு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்ததும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்.
இத்தனை ஆண்டுகள் பிரதிபலன் பாராது செய்த சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும், இன்னமும் அதிகமாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் மேயர் பதவியைப் பயன்படுத்திக் கொண்டார். மக்களுக்காகவும், பெருநகர சென்னை வளர்ச்சிக்காகவும் முழுநேரப் பணியாளராக இரவும் பகலும் உழைக்கத் தொடங்கினார்.
பொதுவாக மேயர் பதவிக்கு வருபவர்கள் இதனை அலங்காரப் பதவியாகவே கருதுவார்கள். அதனால் பகுதி நேரம் மட்டுமே மேயராக செயல்படுவது வழக்கம். வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களிடம் மனு பெறுவது, வாரத்தில் ஒரு நாள் ஆய்வு மேற்கொள்வது, அதை ஊடகங்களில் தெரிவித்து தங்களைப் பற்றி செய்தி வரவழைப்பது, மீட்டிங்கில் அதிகாரிகள் கூறும் இடத்தில் கையெழுத்துப் போடுவது போன்றவை மட்டுமே அவர்களின் பணியாக இருக்கும். ஆனால், இவர்களில் இருந்து மாறுபட்டு ஒரு முழு நேர சேவையாளராக மக்கள் முன்னேற்றத்திற்காகவும் பெருநகர சென்னையின் வளர்ச்சிக்காகவும் செயல்படத் தொடங்கினார்.
பதவியேற்றதும், ‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை தன்னுடைய மேஜையிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் எழுதி வைத்து, நேர்மையும் தூய்மையும் நிரம்பிய நிர்வாகத்திற்கு மேயர் சைதை துரைசாமி உறுதி கொடுத்தார்.
அதோடு முழு நேரப் பணியாளராக தினமும் கிட்டத்தட்ட 19 மணி நேரம் மக்களுக்காகவும் பெருநகர சென்னையின் வளர்ச்சிக்காகவும் உழைக்கத் தொடங்கினார். தூங்குவதற்கு ஒதுக்கிய 5 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் பொதுமக்களுடனும் அதிகாரிகளுடனும் இருந்தார். இதனால் அதிகாலை 5 மணிக்கே மேயர் சைதை துரைசாமியின் வீட்டுக்கு பொதுமக்களும் தொண்டர்களும் வந்து நின்ற காட்சிகள் அரங்கேறின.
தினமும் 19 மணி நேரம் உழைத்த காரணத்தினால் தான், சென்னை மாநகராட்சியில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை செய்து காட்டினார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.