• Home
  • யாக்கை
  • பெண்கள் ஆன்லைனில் என்ன தேடுகிறார்கள்..?

பெண்கள் ஆன்லைனில் என்ன தேடுகிறார்கள்..?

Image

மருத்துவ சுவாரஸ்யங்கள்.

உடல் நலம் குறித்து ஏதேனும் சந்தேகம் வரும் நேரத்தில் மருத்துவரை நாடுவதை விட ஆன்லைனில் தேடுவதே இன்றைய தலைமுறைக்கு வரப்பிரசாதமாகத் தெரிகிறது. இதில் ஆண்களை விட பெண்களே மருத்துவம் குறித்து அதிகம் தேடுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் ஆன்லைன் மருத்துவத்தை நாடுபவர்கள் எண்ணிக்கை 67 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தெரிவிக்கிறது மருத்து சுகாதார அறிக்கை. அதேநேரத்தில் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதியில் ஆலோசனை பெறுபவர்கள் வளர்ச்சி 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பம் போன்றவை குறித்துதான் பெண்கள் அதிக அளவில் ஆலோசனை கேட்கிறார்கள். ஆன்லைன் ஆலோசனை பெறும் பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கேற்ப மாலை 6 மணி முதல் 8 மணிவரை மகளிர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள். 

மகளிர் மருத்துவத்திற்கு அடுத்தபடியாக சரும நோய் சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. சரும ஒப்பனை, கூந்தல் பராமரிப்பு குறித்த தகவல்களை நிறைய பேர் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். பாலியல் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்வது பற்றிய விழிப்புணர்வும் 130 சதவீதம் உயர்ந்துள்ளது. 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை நலன், பராமரிப்பு பற்றி அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

குழந்தை மருத்துவம் குறித்து ஆன்லைன் மருத்துவர்களை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சளி, இருமல் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்த விஷயங்களுக்காக நாடியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில்தான் நோய்த் தொற்றுகளின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மருத்துவ ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை 93 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் 76 சதவீதம் பேர் மூட்டுவலி பாதிப்பு குறித்து ஆலோசனை பெறுகிறார்கள். மூட்டுவலி, எலும்பு முறிவு, கீல்வாதம், முதுகுதண்டுவட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து எலும்பியல் நிபுணர்களை நாடுபவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆன்லைனில் ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் வீடு தேடி வந்து சிகிச்சையும் அழிப்பதால் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை நாடுபவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஆண்கள் மருத்துவ ரீதியில் தேடுவது என்றாலே ஆண்மைக் குறைவு, உடலுறவு குறை போன்றைவைகளே அதிகம். ஆண்கள் ஒரு போதும் மாறவே மாட்டாங்கப்பா.

Leave a Comment