சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 3
டாக்டர் பதூர் மொய்தீன்
திருமணம் என்ற பந்தத்தில் பெண்கள் எத்தனை திருப்பங்களையும் கொடுமைகளையும் சகித்து வந்திருக்கிறார்கள் என்பதை திரும்பிப்பார்க்கவைக்கும் தொடர்.
முந்தைய காலகட்டங்களில் திருமணம் என்பதை யார் எல்லாம் முடிவு செய்தார்கள் என்பதை கூர்ந்து பார்த்தால் ஒரு உண்மை நமக்கு தெரிய வரும்.
அதாவது ஊர் பெரியவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், மணமகனின் பெற்றோர், மனமகளின் பெற்றோர், ஜோதிடர், புரோகிதர் மற்றும் மணமகனால் மட்டுமே காலம்காலமாக திருமணம் என்கிற நிகழ்வு தீர்மானிக்கப்பட்டு வந்தது. இன்றைக்கும் கூட, இந்த நிலை ஆங்காங்கு நடமுறையில் இருப்பது கண்கூடாகப் பார்க்க முடியும்.

இந்த விஷயத்தில் விசித்திரமான ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா… இந்தத் திருமண விஷயத்தில் தாலிக் கட்டிக்கொள்ளப் போகிற, மாப்பிள்ளையின் கையைப் பிடிக்கப்போகும் மணமகளின் விருப்பம் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. முடிவெடுக்கும் இடத்திலும் அவள் இல்லை. தனது திருமணத்தை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் பெண்ணுக்கு முக்கியமானதாகக் கருதப்படவே இல்லை என்பது உங்களுக்குப் புரிந்துபோயிருக்கும்.
தனது திருமணத்தை, தனக்கான கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு எப்போது கொடுக்கப்பட்டது?
தனக்கு வரும் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்த ஆணின் கொக்கரிப்பை, திமிரை, ஆணவத்தை காலம் காலமாக பெண்ணினம் பார்த்துக்கொண்டேதான் இருந்தது. ஆண்கள் ஒன்று கூட நடத்திவைத்த திருமணத்தைப் பெண்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை. பொறுத்துக்கொண்டார்களே தவிர, ஏற்றுக்கொள்ளவில்லை.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று காலத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்தது பெண்ணினம். அப்படி எண்ணிக்கொண்டிருந்த பெண்ணினத்துக்கு காலம் ஒரு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பு பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வந்துசேர்ந்தது.
பொருளீட்டும் வாய்ப்பு பெண்ணினத்துக்குக் கிடைக்கப்பெற்றது. அத்தகைய வாய்ப்பை பெண்ணினத்துக்கு கல்வியால் மட்டும்தான் கொடுக்க முடிந்தது. அவர்களுக்கும் அவர்கள் படித்த படிப்புக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. அதனால், ஒரு பெண் தனக்கேற்ற ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றதுடன், தனக்கு ஒத்துவராத ஆணை புறந்தள்ளும், நிராகரிக்கும் உரிமையும் பெண்ணின் கைக்கு வந்து சேர்ந்தது. இது, பெண்ணுக்குக் கல்வியால் கிடைத்த பெரும் உரிமை.
இந்த உரிமை பெண் இனத்துக்கு கிடைப்பதற்கு முன் அவள் எப்படி இருந்தாள் என்றால், குடும்பத்துக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, கெளரவத்துக்காக, சமூகத்துக்காக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சகித்துக்கொண்டு இருந்தாள்.
பெண்ணைப் பற்றி ஆண் கேவலமாகப் பேசுவதுபோல், தானும் பேசினால் என்னாகும் என்று பல காலமாக பெண்ணினம் யோசித்துக்கொண்டேதான் இருந்தது. அதற்கென்று காலம் கனிந்து வந்தபோது பெண்ணும் வாய் திறந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில், நாம் பேசாமல் இருக்கக் கூடாது. பேசாமல் இருப்பதுதான் நமக்கு தடையாக இருக்கிறது என்று அறிந்துகொண்டதும், பெண்கள் தைரியமாகப் பேசத் தொடங்கினார்கள்.
பெண்களின் கையில் முடிவெடுக்கும் அதிகாரம், நிச்சயத்தன்மை வந்தபோது குடும்பம் என்கிற அமைப்பில் நிறைய மாற்றங்கள் நடைபெற ஆரம்பித்தது. அதாவது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போக ஆரம்பித்தது. தனிக்குடித்தனம் என்கிற அமைப்பு பெருவாரியாக உருவாகியது. குடும்பங்கள் சிறுத்துப்போக தொடங்கியது.
சமூக அழுத்தத்தின் காரணமாகவும், அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களாலும், குடும்பக்கட்டுபாடு என்கிற நிலை மக்களிடத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. ’நாம் இருவர் நம்க்கு இருவர்’ என்கிற நிலையும், அதைத் தொடர்ந்து ’நாம் இருவர் நமக்கொருவர்’ என்கிற நிலையும் எட்டிப்பார்த்தது. ஒரு பெண் குழந்தை இருக்கும் வீட்டில், ஒரு ஆண் குழந்தை இருக்கும் வீட்டில் சம்பந்தம் பேசுவது வசதியாகவும், பிரச்னையின்றியும் இருப்பதாக பெற்றோர்கள் கருதினார்கள். இந்த நிலை பாரமாக இல்லாதது போன்ற கருத்துருவாக்கத்தை சமூகத்தில் தோற்றுவித்திருந்தது.
நிறைய குழந்தைகள் இருக்கும் ஒரு வீட்டில் பெண் கொடுப்பதை மக்கள் விரும்பாத நிலையும் ஏற்பட்டது. ஒரு பெண் மருமகளாக இருக்கும் வீட்டில் அந்த மணமகனுக்கு தாத்தாவோ, பாட்டியோ இருந்தால் அது எக்ஸ்ட்ரா லக்கேஜாக கருதப்பட்டது.
உலகமயமாதல், பொருளாதாரமய மாதல், நகரமயமாதல் போன்ற மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ ஆரம்பித்தன. பணவீக்கம், சந்தை மதிப்பு போன்ற பதங்கள் சகஜமாகிப்போயின.
தனி வீடுகள் என்பது மாறிப்போய், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொகுப்பு வீடுகள் எழத் தொடங்கின. வீட்டின் பரப்பளவும் சுருங்கிப்போனது. ஒரு சில சதுர அடிகளுக்குள் மனித வாழ்க்கை அடங்கிப்போனது. அண்டை அயலாரிடம் மனிதர்களுக்கு இருந்த அந்நியோன்யம் மிகவும் குறைந்துபோனது. சுயநலம் மனிதர்களை தனது சுருக்குப் பைக்குள் போட்டு முடிந்துகொண்டது. அவர்கள் அதனை சிறு எதிர்ப்புணர்ச்சி இன்றி… சகஜமென்றும் , இயல்பென்றும் ஏற்றுக்கொண்டார்கள். அப்படி வாழ்வதற்கு மனிதர்கள் அனைவரும் பழக்கப்பட்டுப் போனார்கள். அல்லது பழக்கப்படுத்தப்பட்டார்கள்.
கொக்கோ கோலாவின் கடைசி சொட்டுக்குக் கொடுக்கிற மரியாதையைக்கூட ஒரு மனிதன் சக மனிதனுக்கு கொடுக்கத் தயாராக இல்லாத நிலை வியாபிக்கத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஊர்கள் விசாலமாகின. நகரங்கள் விரிவடைந்தன. நகர்புறங் களில் இட நெருக்கடி ஏற்பட்டது. பொருளீட்ட முனைந்த குடும்பத் தலைவனின் வீடு ஓரிடத்தில் இருந்தது. அவன் பணிபுரியும் அலுவலகமோ, தொழிற்சாலையோ, நிறுவனமோ அது வேறு எங்கோ இருந்தது. மனைவி பணிபுரிபவளாக இருந்தால் அவளது பணியிடம் வேறு ஒரு இடத்திலிருந்தது. அவர்களின் குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவங்களோ வேறிடத்தில் இருந்தன. எனவே, வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தினமும் நிறைய நேரங்களை பயணத்திற்கு செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அவனது பெரும்பான்மையான நேரங்களை போக்குவரத்து நெரிசல் அபகரித்துக்கொணடது. அவனுக்கான நேரங்கள் குறைந்துபோயின. எல்லாவற்றிலும் வேகம் உருவெடுத்தது.
முன்பெல்லாம் யாரையாவது பார்த்து, ’’வாழ்க்கை எப்படி இருக்கு?’’ என்று கேள்வி எழுப்பினால், அவர் ‘’என்னமோ வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்று சொல்லக் லேட்டிருப்போம். உண்மையில் நகர்ப்புற வாழ்க்கையில் எவரும் நின்று நிதானித்து, ஆர அமர யோசித்து, அமைதியாக இருந்து உரையாடி, ரசித்து ருசித்து புசிப்பது என்பதெல்லாம் கனவாய் போனது. ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டார்கள்.
குடும்பத்தில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒரு ஸ்பேஸ் இருக்குமல்லவா? அது இல்லாமல் போனது. குடும்பத்தில் வீட்டை ஆரோக்கியமாகப் பராமரிப்பது, சுத்தப்படுத்துவது, கோலம் போட்டு வாசலைஅழகுப்படுத்துவது, பண்டிகைகளை ரசித்து, மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவது போன்றவையும் மிகவும் குறைந்துபோனது.
தாராளமயமாதல், உலகமயமாதல் என்கிற காரணிகளால் உலகமே சிறுத்துப்போனது. திருவிழாக்களையும், கோலாகலங்களையும் பணிடிகைகளையும், கேளிக்கைகளையும் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நிலை உருவானது.
வெளி நாட்டவர்களின் வெளி மாநிலத்தவர்களின் கலாச்சாரங்கள் எல்லாம் தனித்துவமிக்கதாக இருந்த கலாச்சாரத்துடன் கலந்து சமூகம் கலங்கியும் குழம்பியும் போனது.
பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலால் அதில் பணிபுரிவோரின் உறங்கும் நேரம் பனிபுரியும் நேரம் என்பதெல்லாம் தலைகீழாக மாறிப்போயின. 24 மணி நேரமும் நாடும் நகரமும் விழித்திருக்கத் தொடங்கின. அரசாங்க உத்தியோகங்கள் தனது கவர்ச்சியை இழந்தன.
தனியார் நிறுவனப் பணிகள் எல்லோரையும் கவர்ந்திழுத்தன. அந்த அமைப்பினர் கூடுதல் சலுகைகளையும், ஊதியத்தையும் அள்ளிக்கொடுக்க முன் வந்தனர்.
இந்நிலையில் திருமணம் என்கிற முறை எப்படியான நிலையை பெற்றிருந்தது என்பதை அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக, விளக்கமாகப் பார்ப்போம்.
- தொடரும்…