• Home
  • அரசியல்
  • தேர்தல் வந்தால் தான் 1,000 ரூபாய் கொடுப்பீங்களா ஸ்டாலின்..?

தேர்தல் வந்தால் தான் 1,000 ரூபாய் கொடுப்பீங்களா ஸ்டாலின்..?

Image

அடித்து நொறுக்கும் எதிர்க் கட்சிகள்

பண்டிகை என்றாலே அரசு பணம் தரும் என்ற மனநிலையை எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் ஏற்படுத்திவிட்டார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியலைன்னா எதுக்கு முதல்வர் பதவி என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஸ்டாலினை வெளுத்தெடுக்கிறார்கள்.

டிடிவி தினகரன் இது குறித்து, ‘’பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் தருவதாக அறிவித்ததே நீங்கள் தானே. இப்பொழுது நீங்களே பின்வாங்கினால் எப்படி? நிதி நிர்வாக சீர்கேட்டில் மூழ்கி நிற்கிறதா தமிழக அரசு? பொங்கல் சமயத்தில் இதை எதிர்பார்த்து எவ்வளவு தாய்மார்கள் காத்திருந்திருப்பார்கள்? இதேபோல தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிவித்த பொழுது அதிகாரிகள் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்றார்கள். ஆனால் புரட்சித்தலைவர் மக்களிடம் கையேந்தியாவது அந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று உறுதியாக இருந்தார். அந்த உறுதித்தன்மை திமுகவிடம் இல்லை. போலியாக திட்டத்தை அறிவித்துவிட்டு பின் மக்களை ஏமாற்றுகிறீர்கள்’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ், ‘’திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. 2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.

2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.’’ என்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலடியாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார் ஸ்டாலின் என்றெல்லாம் சமாளிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

Leave a Comment