மரு அகற்றினாலும் மீண்டும் வருமா…?

Image

டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி


சருமத்தின் அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது, மரு. இதைக் கண்டு அஞ்சாத பெண்கள் இல்லை. மரு குறித்து  விவரிக்கிறார், பிரபல தோல் மருத்துவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி.

மரு என்பது என்ன?  எப்படி பரவுகிறது?
மருவில், இரு வகைகள் உள்ளன. சொரசொரப்பாக, வியர்க்குருபோல இருப்பதை, மரு என்று சொல்வோம். இது, வைரஸ் தொற்று; பரவக்கூடியது. மருவை தொட்டுவிட்டு, உடம்பின் மற்றோர் இடத்தைத் தொட்டால், அந்த இடத்திலும் மரு வந்துவிடும். இன்னொன்று, கழுத்தைச் சுற்றி கறுப்பாக, குட்டிகுட்டி உருண்டையாக, தோலில் இருந்து வரக்கூடிய வளர்ச்சி. இது, தொற்று கிடையாது என்பதால் பரவாது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்குமே தவிர, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

பொதுவாக இரண்டு வகையான வைரஸ்கள்  மருவை உண்டாக்கும். ஒன்று, தோலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது. கால்களில் செருப்பு இல்லாமல் நடக்கும்போது, தரையில் இருக்கும்  வைரஸ் கிருமிகள், கால்களில் ஒட்டிக்கொள்ளலாம். தொற்று பாதிப்பு உள்ளவர்களை தொட்டுப் பேசும்போது, கைகளில் வரலாம். தாம்பத்திய உறவின் வாயிலாகவும் பரவலாம்.


மருவுக்கான சிகிச்சை முறைகள் என்ன? ஒருமுறை நீக்கிய மரு, மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா?
மருந்தோ, மாத்திரைகளோ கொடுத்து, மருவை சரி செய்ய முடியாது. பிறப்புறுப்பில் இருந்தால், ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில், களிம்பு மருந்துகளை பயன்படுத்தி சரிசெய்யலாம். வெளிப்புறத்தில் தடவும் மருந்துகளால், இரண்டு வாரத்தில் மரு உதிராவிட்டால், லேசர் சிகிச்சை மூலம், மருவை அகற்ற வேண்டியிருக்கும். திரவ நைட்ரஜனை தெளிப்பதால், சிறு மருக்கள் தானாகவே விழுந்துவிடும். அளவில் பெரியதாக இருந்தால், அறுவைசிகிச்சை செய்வது ஒன்றே வழி.
திரும்ப வருவதற்கான வாய்ப்புகள், 10 – 15 சதவீதம் உள்ளது. லேசர் சிகிச்சை முடிந்து, புண் ஆறிய பின்னும், தொடர்ந்து மருந்துகள் தடவ வேண்டி இருக்கும்.
அதேநேரத்தில் மருக்களை அகற்றினாலும், அது திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போதைய மருத்துவ வளர்ச்சியால் மருவை அகற்றுவதற்கு என சில ஊசிகள் இருக்கின்றன. அவற்றின்மூலம் சிகிச்சையளிக்கும்போது மருக்களே சில தினங்களில் கொட்டிவிடும். ஊசி மூலம் மருக்களை அகற்றும்போது, அவைகள் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அத்துடன் ஓரல் ஜிங்க் மாத்திரைகளையும் விழுங்குவதன் மூலம் மரு சீக்கிரம் கொட்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

Leave a Comment