சிற்றின்ப பாவம் கங்கையில் கரையுமா..?

Image

ஞானகுரு அத்தியாயம் – 5

காற்றில் மிதந்துவந்த கதம்ப பாஷைகள் காதுகளைத் துளைக்க, ‘ஜானெக்ஷா’ உபயத்தால் சிவந்திருந்த கண்களுடன் புண்ணிய பூமியாம் காசி மண்ணை மீண்டும் ஒரு முறை மிதித்தேன்.

எப்போதும் போல் அன்றாடம் வந்து குவியும் பலதரப்பட்ட மக்களின் வருகையால், காசி நகரம் சுவாசிக்க திணறிக் கொண்டிருப்பதை முதல் பார்வையிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. நகரின் சுகாதாரம் பற்றி எந்த ஜனமும் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. சுமந்த வந்த பாவத்தை எல்லாம் கங்கையில் கரைக்கும் பேராவல் மட்டுமே அந்த முகங்களில் தட்டுப்பட்டது.

‘இப்படி நாள்தோறும் தங்கள் மீது கொட்டப்படும் பாவங்களின் பாரத்தைக் காசியும் கங்கையும் எங்கே போய் போக்கிக் கொள்ளும்…’ என நினைத்தபோது, எனக்குள் சிரிப்பு குமிழியிட்டது.

பத்மநாபன் அழைத்துவந்த வாடகை வாகனத்தில் ஏறிக்கொண்டேன். நகரத்தின் உயர்தர ஹோட்டல் நோக்கி வாகனம் விரைந்தது. காசியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். விதவிதமான கெட்டப்புகளில் சாமியார்கள், மண்டையோட்டு மாலை அணிந்த கபாலிகள் என எங்கெங்கும் காவி நீக்கமற நிறைந்து கிடந்தது. வாகனம் அந்த உயர்தர ஹோட்டல் முன் நின்றது. சில நிமிடங்களில் குளிரூட்டப்பட்ட விஸ்தாரமான அறை எங்களை வாரியணைத்துக் கொண்டது.

கட்டிலில் கிடந்த விலை உயர்ந்த மெத்தையில் கட்டையைக் கிடத்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தேன். பத்மநாபன் குடும்பத்தினர் சிரம பரிகார வேலைகளில் இறங்க, அங்கே கிடந்து அவர்களுக்கு அசௌகரியம் தரவேண்டாம் என்றெண்ணி, பத்மநாபனைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பாவ தரிசனம்

பழகாத ஊர், புரியாத பாஷை என்றாலும் ஏனோ எதுவும் எனக்குப் புதிதாகத் தெரியவில்லை. கால்போன போக்கில் நடந்தோம். பத்மநாபன் வாய் திறக்காமல் என்னைப் பின்தொடர்ந்து வந்தார். சிறிது தூரம் வந்ததும், சிதலமடைந்த சிறிய காளி கோயில் ஒன்று கண்ணில் பட்டது. பெயர் தெரியாத மரமொன்று தன் அடர்ந்த கிளைகளால் பெரிய நிழல் பந்தலைப் பின்னியிருந்தது. தண்ணென்று குளிர் காற்று உடலை வருட… அந்த மரத்தின் அடியில் கிடந்த கல்லில் அமர்ந்தேன்.

மந்தரித்த ஆட்டுக் குட்டி போன்று பின் தொடர்ந்து வந்த பத்மநாபனை கீழே அமரச் செய்து, கையை நீட்டச் சொன்னேன். சில நொடிகள் அவரது நாடி பிடித்துப் பார்த்தேன், கை ரேகைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். பத்மநாபன் முகத்தில் இனம் தெரியாத கவலையும் பயமும் படரத் தொடங்கியது.

‘‘மகாபாவம்…’’ என்றேன் சத்தமாக.

பத்மநாபன் பதறியபடி எழுந்து நின்றான்.

’’ஏதோ… புத்தி கெட்டுப் போச்சு, உடம்பும் சொன்னபடி கேட்கலை…’’

’’மகனே… மேல் உலகத்தில் இருபத்தி எட்டு வகையான நரகங்கள் இருக்கின்றன. நம்பிக்கைத் துரோகம் செய்பவனும், பிறர்மனை கவர்பவனும் தாமிஸ்ரம், வஜ்ரகண்டம், சான்மலி ஆகிய மூன்று நரகத்திலும் உழல வேண்டியிருக்கும். உனக்கும் அங்கே ஒரு இடம் தயாராகி விட்டது…’’ என்றோ, எங்கேயே படித்ததை சமயம் பார்த்து எடுத்துவிட்டேன். மிரண்டுபோய் பதிலற்று விழித்தார் பத்மநாபன்.

சிற்றின்ப துரோகம்

’’காமம் என்பது இயற்கையான ஹார்மோன் விளையாட்டு. அதனை நீ அடக்கினால் மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்திற்கு சென்று இறைவனின் பாதத்தைக் அடையமுடியும் என்று சொல்லி உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. எந்த ஒரு உறவும் குற்ற உணர்வின்றி இருத்தல் அவசியம். காமத்தில் இருந்து யாருமே தப்பியோட முடியாது. ஆனால் வரம்பற்ற காமம், வாழ்வை நாசப்படுத்தும்.  சிற்றின்பத்தைப் புனிதமாக நினைத்து, கோயிலுக்குச் செல்வது போல் பவித்ரமாக அணுக வேண்டும், அனுபவிக்க வேண்டும். திருட்டுத்தனமாக அனுபவிப்பவது மகா பாவம். மனைவியையே தாயாக நினைக்க வேண்டிய வயதில், உன்னிடம் அடைக்கலம் வந்தவளை நீ அசிங்கப்படுத்தி இருக்கிறாய்…’’ தடதடவென்று நான் சொல்லி முடிக்க, ஹீனமான குரலில் பதில் சொன்னார் பத்மநாபன்.

’’ஏதோ சூழ்நிலைக் கோளாறுல தப்பா ஆசைப்பட்டு, தப்பு செஞ்சிட்டேன். ஏதாவது பரிகாரம் செய்ங்க சாமி…’’  அவர் கண்களில் நரகத்தைப் பற்றிய பயமே அதிகம் தென்பட்டது.

’’உன் தாயார் செத்து எத்தனை வருஷமாச்சு?’’

’’ஏழெட்டு வருஷமாச்சு சாமி…’’

தாயுமானவள்

’’இத்தனை வருடங்களான பிறகும் உன்னுடைய பாவம் காரணமாக, அந்த துரதிஷ்ட ஆத்மா, சாந்தி பெறாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஆத்மாவை நான் சாந்தியடைய விடப்போவதில்லை. தவிக்கும் ஆத்மாவை, உன் மருமகள் உடலில் காவலுக்கு வைக்கிறேன். இனி உன் மருமகளைப் பார்க்கும் போதெல்லாம், உனக்கு உன் தாயின் நினைவுதான் வரும்… வரவேண்டும். காசி விசாலாட்சி சந்நிதியில் வைத்து உன் மனைவியிடம் நீ செய்த தவறுகளுக்கு எல்லாம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேள். இனி மனம் அலைபாயாது, தவறு நடக்காது என்று சத்தியம் செய்து கொடு”  என்று கையை நீட்டினேன்.

’’சத்தியமா சாமி… இனிமே இப்படி ஒரு ஈனத்தனமான நினைப்பு எனக்கு வரவே வராது சாமி… கனவுலகூட தப்பு செய்ய மாட்டேன். ஆனா… என் இதுவரைக்கும் நான் செஞ்ச பாவத்தை எப்படித் தீர்ப்பேன் சாமி… நரகத்தில இருந்து எனக்கு மீட்சி கிடைக்குமா..?’’ என்று தவிப்புடன் கேட்டார் பத்மநாபன்.

’’மனம் திருந்தியவனை ஆண்டவன் கைவிடுவது இல்லை. உன்னைக் காப்பாற்றுவதற்கான பரிகார பூஜைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்கான் பணத்தை மட்டும் கொடு…’’ என்று காரியத்தில் கவனமாக இருந்தேன்.

உடனே பர்ஸை உருவிய பத்மநாபன், ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் நாலைந்தை எண்ணிவிட்டு ஜாடையாக என்னைப் பார்த்தார். நான் புன்சிரிப்போடு மௌனமாக இருந்தேன். என் மௌனம் அவரை பயமுறுத்தியதோ என்னவோ, இன்னும் கூடுதலாக சில நோட்டுகளை உருவி, அப்படியே என் கைகளில் திணித்தார்.

அதை வாங்கி அப்படியே பைக்குள் திணித்துக் கொண்டு, ‘‘இனி எனக்காக காத்திருக்காதே… உனக்காக நான் செய்யும் பரிகார பூஜையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் மட்டுமே நான் வருவேன்…’’ என்று எழுந்தேன்.

’’சாமி.. பஞ்சவர்ணத்திடம் நான் என்ன சொல்ல…’’ தயங்கித் தயங்கி கேட்டான்.

’’உன்னுடைய பாவமூட்டையை நான் புடுங்கி எறிந்ததாகச் சொல்… அவளுக்கு என் ஆசிர்வாதத்தைச் சொல்… திரும்பிப் பார்க்காமல் நட…’’ என்றபடி எதிரே குறுகலாகத் தெரிந்த ஒரு சந்துக்குள் நுழைந்தேன்.

Leave a Comment