துறவியாகும் ஆசை நிறைவேறுமா?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : துறவு வாழ்க்கை நல்லதா குடும்ப வாழ்க்கை நல்லதா..?

  • எஸ்.ராஜேஷ், ஸ்ரீரங்கம்.

ஞானகுரு :

எது நல்லது என்பதைக் கண்டுபிடிக்க அதிக சிரமம் எடுக்கத் தேவையில்லை. இயற்கையை உற்றுப் பார்த்தாலே உண்மையை அறிந்துகொள்ள முடியும். மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், பூச்சியினங்கள் என பெரும்பாலான உயிரினங்கள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் பறவைகள் கூட்டம் கூட்டமாக குடிபெயர்ந்து வருகின்றன, சந்ததியைப் பெருக்குகின்றன, மீண்டும் திரும்பிப் போகிறன. ஆகவே, மனிதனும் கூட்டமாக வாழும் விலங்கினத்தைச் சேர்ந்தவன்.

அதனால் துறவு மேற்கொண்டு தனி மனிதனாக வாழ்வது அவசியம் இல்லை. காசியில் வாழும் துறவிகள் எல்லாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நினைக்காதீர்கள். அவர்கள் போதையிலும் பசியிலும் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் ஆன்மிகத்தைக் கடைப்பிடிப்பது இல்லை. மனிதன் மட்டுமே கடந்த காலம், எதிர்காலம் பற்றி சிந்திக்கிறான். அந்த சிந்தனையில் விடை கிடைக்கவில்லை என்றதும் அஞ்சுகிறான். அந்த பயத்தில் உருவானதுதான் ஆன்மிகம். குடும்பத்தில் நிம்மதி இல்லை என்று துறவு வாழ்க்கை மேற்கொள்ள நினைத்தால் அதைவிட அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருந்துகொண்டே, பிறருடன் அதிகம் ஒட்டாமல் ஒதுங்கி வாழுங்கள். இதுவே, எளிமையான துறவு வாழ்க்கை. இதுவே, நிம்மதியான துறவு.

கேள்வி : உண்மையான மகிழ்ச்சி எங்கு இருக்கிறது?

  • பி.பார்வதி, திருமங்கலம்.

ஞானகுரு :

வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று பணக்காரன் ஒருவன் ஞானியிடம் வந்து முறையிட்டான். அவனை பார்த்த ஞானி, சட்டென்று பணக்காரனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்தார். இவனை இந்த மரத்தோடு சேர்த்து எரித்துவிடுங்கள் என்று தன் சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்கள் அதற்கான ஆயத்தங்களை சீடர்கள் செய்யத் தொடங்கியதும் அலறினான், கதறினான். ஆனால், ஞானி அதனை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினார்,

அவனை சுற்றி மரக் கட்டைகளை அடுக்கி தீ மூட்டுவதற்கு சீடன் முயன்ற நேரத்தில் மீண்டும் வந்து தடுத்து நிறுத்தினார் ஞானி. பணக்காரனின் கட்டுக்களை அவிழ்த்துவிடச் சொன்னார்.

‘’ஒரு நிமிஷம் நிஜமாவே செத்துப்போயிட்டேன். இப்போத்தான் எனக்கு உசுரே வந்திச்சு..’’ என்று பணக்காரன் தழுதழுத்தான்.

‘’உயிர் போகவும் இல்லை, வரவும் இல்லை. அது உன்னிடம்தான் இருக்கிறது. உனக்குள் உயிர் இருக்கிறது என்பதை உணர்த்தவே இப்படி செய்தேன். அதே போன்று மகிழ்ச்சியும் உனக்குள் இருக்கிறது. அதனை வீட்டிலோ வெளியிலோ தேடாதே, உனக்குள் தேடு’’ என்று அனுப்பிவைத்தார். பணக்காரனுக்கு எல்லாமே தெளிவாக விளங்கியது, உங்களுக்கும் புரிந்துவிட்டதா..?

Leave a Comment