• Home
  • ஞானகுரு
  • கடன் வாங்கும் கலாச்சாரம் கை கொடுக்குமா..?

கடன் வாங்கும் கலாச்சாரம் கை கொடுக்குமா..?

Image

கேள்வி : கடன் வாங்காமல் வாழமுடியுமா..?

  • ஏ.பாக்கியலட்சுமி, லட்சுமி நகர்.

ஞானகுரு :

தொழில் செய்வதற்கு வாங்குவது தவிர, மற்ற எல்லா கடன்களும் தாங்களே விரும்பி அணிந்துகொள்ளும் கை விலங்கு. அதேநேரம் வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவை எதிர்கால முன்னேற்றத்துக்கான கடன் என்றே சொல்ல வேண்டும். கடன் என்பது கடலில் நீச்சல் அடிப்பது போன்றது. தப்பிக்கவும் செய்யலாம்.. சில நேரம் மூழ்கவும் செய்யலாம். ஆகவே, அச்சம் இருந்தால் கரையில் நின்று வேடிக்கை பாருங்கள்.  தைரியம் இருந்தால் கடலுக்குள் இறங்குங்கள்.

கேள்வி : வருங்காலத்தை எதிர்பார்த்தே வாழ்கிறோம், நிகழ்காலத்திற்கு வாழ என்ன செய்ய வேண்டும்..?

  • கே.கதிரேசன், ஆமத்தூர்.

ஞானகுரு :

கடந்த காலத்தில் சந்தோஷமாக இருந்த தருணங்களை யாரும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழ்வதில்லை. ஆனால், கடந்துபோன வாழ்க்கையின் பாதிப்புகள், சுமைகள், சோகங்கள், ஏமாற்றங்களை ஞாபகத்தில் வைத்திருந்து எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். இந்த சுமைகளை தலையில் வைத்துக்கொண்டே நிகழ்காலத்தை ரசிக்க முடியாது, எதிர்காலத்தையும் வாழ முடியாது.

எனவே, முதலில் கடந்த காலத்தில் இருந்து விடுபடுங்கள். முடிந்தது முடிந்து போனதுதான். எதிர்காலத்திற்கு நல்லபடியாக வாழ முடியும் என்ற நேர்மறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அடுத்து நிகழ் காலத்தில் வாழ்வதற்கான தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக அக்கம்பக்கத்தினரை பார்க்காமல் நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை மட்டும் வாழுங்கள்.

 நாளைய அச்சம் இல்லையெனில் இன்றைய வாழ்க்கையை எளிதாக வாழ முடியும். நாளை பறக்கப்போகும் திசையில் உணவு கிடைக்குமா என்று எந்த பறவையும் உறக்கமின்றி கவலைப்படுவதில்லை. அந்த பறவை போல வாழுங்கள்.

Leave a Comment