பேசினால் துன்பம் குறையுமா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மன அழுத்தம், விரக்தியில் உள்ளவர்கள் அவற்றிலிருந்து மீள்வது எப்படி..?

  • பி.பிரகாஷ், வத்றாப்.

ஞானகுரு :

நம் கட்டுப்பாட்டுக்குள் வராத விஷயங்கள் குறித்துக் கவலைப்படுவது, கடன், பணிச்சுமை, உடல் நலன், உறவுகளில் சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தமும், விரக்தியும் ஏற்படலாம். பதட்டம், எரிச்சல், அதிகக் களைப்பு, தலை வலி, தூக்கமின்மை. அஜீரணக்கோளாறு, உடல் தசை இறுக்கம் போன்றவை அறிகுறிகளாக காணப்படுகின்றன. எல்லா மனிதரும் மன அழுத்தத்திற்கு ஆளாவது சகஜம்தான். ஆனால், அதிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் வெளிவந்துவிடுவார்கள். அதிலிருந்து வெளிவர முடியாதவர்கள் தற்கொலை எண்ணம் வரை செல்கிறார்கள். மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால், உடனே மற்றவர்களிடம் பேசுவதற்கு முன்வர வேண்டும். தலைவலி, காய்ச்சல் என்றால் எப்படி குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அதேபோல் மன அழுத்தம் குறித்தும் பேசுவதற்கு முன்வர வேண்டும். துன்பத்தை பகிர்வதன் மூலம், மனம் விட்டுப் பேசுவதுமே எளிய தீர்வு. இதற்கு வாய்ப்பில்லை என்றால் மருத்துவரை அணுகுதல் அவசியம்.

கேள்வி : வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நன்மையா… தீமையா..?

  • பி.சூர்யகலா, அருப்புக்கோட்டை.

ஞானகுரு :

நாடகம் வந்த போதும், சினிமா வந்த போதும், தொலைக்காட்சி வந்த போதும், செல்போன் வந்த போதும் தீமை என்றே சொன்னார்கள். அப்படித்தான் சமூகவலைதளங்களும் வந்திருக்கின்றன. நெருப்பு, கத்தி போன்றவை நன்மையும் செய்யும் தீமையும் செய்யும். அப்படித்தான் சமூகவலைதளங்களும். நன்மையும் தீமையும் அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.  

Leave a Comment