தமிழ்த்தாய் சர்ச்சை
நமது தேசிய கீதம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் பாடலாக அறியப்படுவதோடு, அதற்குரிய மரியாதையை அனைத்து இந்திய குடிமக்களும் தர வேண்டும் என்பதை அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது. இதனை பாடுவதில் திட்டமிட்டு தவறு செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் முதலான அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு கவர்னர் மன்னிப்பும் கேட்காமல் சரியென்றும் வாதாடாமல் வளவள அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும்போது, இந்த சர்ச்சையைத் தொடர விரும்புகிறார் என்றே தெரிகிறது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற உன்னதமான வரிகளை மறந்துவிட்டனர் என்று டிடி சொல்வது பெரும் அபத்தம். குழுவிலே பாடிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் அந்த ஒரு வரி மட்டும் மறந்துபோனது என்று நம்புவதற்கு எட்டு கோடி தமிழர்களும் இளிச்சவாயர்களல்ல. தமிழ்த்தாய் வாழ்த்தை ‘ரசித்துப்’ பாடுவேன் என்று புளங்காகிதம் அடையும் ரவி தவறு நடந்தவுடனே தவறைத் திருத்தி மீண்டும் சரியாக பாடவைத்திருக்க வேண்டும்.
ஒரு தவறு நடக்கும்போது ,நடப்பது தவறென்று தெரிந்தபின்னரும் அந்த தவறை கண்டும் காணாததுபோல நடந்துகொள்வது கயமை நிறைந்த பாசாங்குத்தனம். இந்த நேரத்தில் மனோன்மணியம் சுந்தரனாருகும் சுவாமி விவேகானந்தருகும் இடையில் நடந்த உரையாடல் வைரலாகிவருகிறது.
திருவனந்தபுரத்தில் சுந்தரனார் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் வருகிறார். உணவருந்தியபின் உரையாடிக்கொண்டிருந்தபோது விவேகானந்தர், சுந்தரனாரிடம், “தாங்கள் என்ன கோத்திரம்?”என்று கேட்க சுந்தரனார் சொன்ன பதிலை தனது நாட்க்குறிப்பில் பதிவு செய்துள்ளார். “வேறு ஒரு தினமாகில் வினாவினைக்கேட்டவுடன் நான் வெகுண்டிருப்பேன்.உறவின் விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்துக்கும் சம்பந்தம் கிடையாது.தன் மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என ஆத்திரமின்றி கோத்திர கேள்விக்கு விடையளித்தேன்” என்று தனது நாட்க்குறிப்பில் எழுதியுள்ளார்.
திராவிடம் என்பதில் அத்தனை பெருமை கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வை சேர்ந்த கவர்னருக்கு திராவிடம் என்ற சொல் மீது வெறுப்பு இல்லை என்றால் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு என்பது தான் கேள்வி. இதே போன்று தேசிய கீதத்தில் இருக்கும் திராவிடத்தை நீக்கும் சர்ச்சையைச் செய்வாரா ரவி..? தேவையில்லாமல் பிரச்னையை பெரிதாக்கவே கவர்னர் ஆசைப்படுகிறாரா..?