• Home
  • பணம்
  • குபேரனைக் கும்பிட்டால் பணம் தருவாரா..?

குபேரனைக் கும்பிட்டால் பணம் தருவாரா..?

Image
  • கடவுளை விட பணம் பெரிது..!

படுத்துக்கிடந்த ஞானகுருவுக்கு அருகே வந்த மகேந்திரன், ‘பணம் பெரிதா… கடவுள் பெரிதா?’ என்ற கேள்வியைக் கேட்டபடி அமர்ந்தார்.

சிரித்தபடி பேசத் தொடங்கினார் ஞானகுரு. ‘’இதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக பணம்தான் பெரிது. ஏனென்றால் இந்த உலகில் கடவுளால் முடியாததை பணம் சாதிக்கிறது. ஆயிரங்களுக்கு மயங்காத அதிகாரி லட்சங்களில் விழுந்துவிடுகிறான். தங்கத்திற்கு மயங்காத பெண் வைரங்களுக்கு அடிமையாகிறாள். பணத்துக்காக கொலை நடக்கிறது.

ஏன், ஓர் உயிரை பிழைக்கவைக்கவும் மருத்துவனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த உலகில் மனிதர்கள் யாரும் கடவுளைத் தேடுவதில்லை, பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். பணத்தை அடைந்தவனுக்குத்தான் கடவுளின் அருமை தெரியவரும். அதுவரை பணத்தை தேடு.

இரவு முழுவதும் வேலை செய்தால் பணம் கிடைக்கும் என்று சொல். கடுமையாக உழைப்பான். இரவு முழுவதும் வேலை செய், காலையில் கடவுள் கண்ணுக்குத் தெரிவார் என்று சொல், ஒருவரும் நம்ப மாட்டார்கள்’’ என்றார் ஞானகுரு.

‘’அப்படியென்றால் குபேரனைக் கும்பிட்டால் பணம் வருமா?’’

‘’குபேரனைக் கும்பிட்டதும் பணம் வரும் என்றால் ரிசர்வ் வங்கி எதற்கு, அதனை இழுத்து மூடிவிட்டு குபேரன் கோயிலைக் கட்டிவிடலாமே. குபேரனை நீ கும்பிடுவதற்குப் போக வேண்டும் என்றாலும் பணம் இருந்தால் தான் பக்கத்தில் விடுவார்கள்.. இல்லையென்றால் தூர தரிசனம் தான்’’

‘’பணம் முக்கியம் என்றாலும் இப்போது விஞ்ஞானமும் மெய்ஞானமும் தானே உலகை ஆள்கிறது..?’’

’’அப்படி யார் சொல்வது..? இரண்டுமே இரண்டுக்கும் எல்லா இடங்களிலும் மதிப்பு கிடையாது. ஆனால், பணத்துக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.  முன்பு வீரத்தால் உலகை அடக்கப் பார்த்தனர். இப்போது பணத்தால் உலகை மடக்கிவருகின்றனர். அதனாலே எல்லோரும் பணத்தைத் தேடி ஓடுகிறார்கள்’’

‘’என் கைக்கு எப்போது வரும்?’’

‘’தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்’’ என்பதை செயல்படுத்து பணம் வந்து சேரும்’’ என்றபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினார் ஞானகுரு.

Leave a Comment