தப்பு செய்தால் சாமி தண்டிக்குமா?

Image

கதை சொன்னா நம்புறாங்க… உண்மை சொன்னா சந்தேகப்படுறாங்க

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கதை கேட்பதற்குப் பிடிக்கும். கதை சொல்வதற்கும் பிடிக்கும். கதை இல்லாத மனிதர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

ஒரு லட்ச ரூபாயில் கிடைக்காத சந்தோஷத்தை ஒரு சின்ன கதை கொடுத்துவிடும். அதனால்தான் இந்த உலகில் ஜோசியருக்கும் சாமியாருக்கும் ஏகப்பட்ட மரியாதை. ஜோசியன் மிகப்பிரமாதமாக, உனக்குப் பிடித்தமாதிரி கதை சொல்லுவான். இன்னும் மூன்றே மாதங்களில் உன்னுடைய நிலைமை தலைகீழாக மாறிவிடும். உன்னுடைய வீட்டில் செல்வம் நிறையும், உனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்று என்னென்னவோ கதை சொல்வான். அடுத்த மூன்று மாதங்களில் ஜோசியன் சொன்னது பலிக்காவிட்டாலும் நீ சந்தோஷமாக இருப்பாய். எல்லா துன்பங்களும் விரைவில் விலகிவிடும் என்றபடி கதையுலகில் காத்திருப்பாய். துன்பங்கள் விலகுவதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் சந்தோஷமாக செய்துமுடிப்பாய்.

அதேபோன்று சாமியாரும் உனக்கு நிறையவே கதை சொல்வான். முற்பிறவியில் நீ செய்த பாவத்தால் இப்போது துன்பப்படுகிறாய் என்பான். முக்தியும் மோட்சமும் கிடைப்பதற்கு வழி காட்டுகிறேன் என்பான். அவனுடைய உண்டியலில் காசு போடுபவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்லமுடியும் என்று நைச்சியமாகப் பேசுவான். அவன் சொல்வது எல்லாம் கதை என்றுகூட தெரியாமல் கேட்டு ரசிப்பாய்.

தப்பு செய்தால் சாமி தண்டிக்கும் என்பது தொடங்கி, சாதி, மதம், மொழி, பந்தம் எல்லாமே கதை மட்டுமே. கதை கேட்பதற்கு மனிதன் ஆசைப்படுவதால், எல்லாவகையான கதைகளையும் ஏற்றுக்கொள்கிறான். கதை என்று தெரியாமல் கதைக்குள்ளேயே வாழ்கிறான்.

ஒரு ரயில் பயணத்தில் நடந்த சம்பவம் இது. முன்பதிவு செய்யப்பட்ட அந்த ரயில் பெட்டியில் புத்தகம் படிப்பது, சாப்பிடுவது, செல்போன் இணையத்தில் மூழ்குவது, பாட்டு கேட்பது, வெளி அழகை வேடிக்கை பார்ப்பது என அனைவரும் அவரவர் வேலையில் இருந்தார்கள். ஒரு சிறிய ஊரில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு கிளம்பியது ரயில். அப்போது ஒரு நடுத்தர வயது மனிதரும், எட்டு வயது சிறுவனும் அந்த பெட்டியில் ஏறினார்கள்.

ரயிலில் ஏறிய நொடியில் அந்தப் பையன் முகத்தில் ஏகப்பட்ட பிரகாசம். நிதானமாக அந்த ரயில் பெட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுற்றிப்பார்த்தான் சிறுவன். அவனுக்கு சந்தோஷம் அதிகரித்தது. அந்தப் பெட்டிக்குள் ஓடி விளையாடத் தொடங்கினான். சத்தம் போட்டு கத்தினான், குதித்தான், கும்மாளம் போட்டான். தரையில் விழுந்து புரண்டான். ஒவ்வொரு நபரையும் தொட்டுப்பிடித்து விளையாடினான். அவன் குறுக்கேநெடுக்கே ஓடிப்போனதில், ஒருவர் சாப்பிட்ட உணவு கீழே விழுந்தது. தூக்கத்தில் இருந்த சிலர் முறைத்துப் பார்த்தார்கள். ஆனால் அந்த சிறுவன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவன் இஷ்டத்துக்கு சுற்றிக்கொண்டு இருந்தான்.

அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரும், தங்கள் சுதந்திரமும் சந்தோஷமும் பறிப்போனதாக உணர்ந்தார்கள். சிறுவனை தடுக்கவேண்டிய மனிதனோ, ஜன்னலுக்கு வெளியே எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். கொஞ்சநேரத்தில் சிறுவனின் சேட்டை குறைந்துவிடும் என்று நினைத்தார்கள், ஆனால் அவன் விளையாட்டு அதிகரிக்கத்தான் செய்தது. படித்துக்கொண்டிருந்த ஒருவரின் புத்தகத்தை தட்டிவிட்டு சிரித்தான். ஒரு குழந்தை கையில் இருந்த பிஸ்கெட்டை பிடுங்கி சாப்பிட்டான். ரயில் பெட்டியில் இருந்த அத்தனை பேருக்கும் சிறுவன் மீது வன்மம் வளர்ந்தது.

ஒருவர் மட்டும் கோபத்தை அடக்கமுடியாமல் அந்த மனிதனிடம் வந்து உரத்த குரலில் கத்தினார். உங்கள் பையனால் எங்கள் அனைவருக்கும் இடைஞ்சலாக இருக்கிறது, அவனை இருக்கையில் இருக்கச்செய்யவில்லை என்றால் போலீஸை அழைப்பேன் என்று அதட்டலாகப் பேசினார். ஜன்னலில் இருந்து பார்வையை எடுத்த மனிதன், உடனே பதட்டப்பட்டான். சிறுவனுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் கைகூப்பி மன்னிப்பு கேட்டபடி பேசத் தொடங்கினான்.

இவன் என்னுடைய சகோதரியின் மகன். போன வாரம் ஒரு விபத்தில் இந்தப் பையனின் அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். அவனை நான் என்னுடைய வீட்டுக்கு அழைத்துச்செல்கிறேன். முதன்முறையாக இவன் ரயிலில் பயணம் செய்கிறான், அதனால் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விட்டான். நான் என் சகோதரி குறித்த கவலையில் இருந்ததால், இவனை கவனிக்கவில்லை. இனி, இவனை அடக்கிவைக்கிறேன் என்று மீண்டும் ஒரு முறை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டான்.

அடுத்த நொடி அந்த ரயில் பெட்டியின் சூழல் முற்றிலும் மாறிப்போனது. கோபத்துடன் பேசிய மனிதர் உடனே அந்த சிறுவனை கைகளில் அள்ளிக்கொண்டார். நீ நன்றாக விளையாடு, இது உன்னுடைய ரயில் என்று சொன்னார். தன்னுடைய ஹேன்ட்பேக்கில் இருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள் ஒரு பெண். மீண்டும் சிறுவன் விளையாடத் தொடங்கினான். ஜன்னல் வழியே மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கிய மனிதன், தனக்குள் சிரித்துக்கொண்டான். ஏனென்றால் அவன் சொன்னது ஒரு கதை. 

  • அப்படியென்றால் கதை மோசமானதா?

கதை நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை. ஆனால் இன்று கதை சொல்வது வியாபாரமாகிவிட்டது. நீ உயரமாக வளரவேண்டும் என்றால் குறிப்பிட்ட பானத்தைக் குடிக்கவேண்டும் என்று சொல்கிறான். நீ அழகாக வேண்டும் என்றால் குறிப்பிட்ட க்ரீம் தடவு என்கிறான். அவன் சொல்வது பொய் என்பதுகூட புரியாமல், விளம்பரங்களில் சொல்வதை எல்லாம் வாங்கி பயன்படுத்துவது முட்டாள்தனமல்லவா? ஒரு பானம் உயரத்தை அதிகப்படுத்தும் என்றால், ஜப்பானில் அனைவரும் உயரமாகத்தான் இருப்பார்கள். ஒரு க்ரீம் வெள்ளையாக்கும் என்றால் ஆப்பிரிக்காவில் கருப்பர்களே இருக்க மாட்டார்கள். அதனால் எது கதை, எது உண்மை என்று புரிந்துகொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு இருக்கவேண்டும். ஆனால்  கதை என்பதை நீ புரிந்துகொள்ளக் கூடாது என்பதுதான் அரசியல்வாதிகள், வியாபாரிகளின் ஆசை.

  • இதில் எங்கே அரசியல் வருகிறது?

எனக்கு ஓட்டு போட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்கிறான். எல்லோருக்கும் நீதி, நியாயம் கிடைக்கும், நாடு அமைதியாக இருக்கும் என்கிறான். சேவை செய்வதற்காக உன் வீட்டு வாசலில் நாய் போன்று காத்துக்கிடப்பேன் என்பான். இதில் எதுவுமே நடக்கப்போவதில்லை என்றாலும், கதைகளில் மயங்கி ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.

எத்தனை நாடுகள் கிரிக்கெட் விளையாண்டாலும், இந்தியாவும் பாகிஸ்தான் மோதினால் மிகவும் ஆர்வத்துடன் பார்ப்பாய். போட்டி நடப்பதற்கு முன்பு, யார் ஜெயிப்பார்கள் என்று பார்க்கும் நபர்களிடம் எல்லாம் வாக்குவாதம் செய்வாய். போட்டி முடிந்தபிறகும் பேசிப்பேசி மாய்வாய். ஏன் பாகிஸ்தான் மேட்ச் மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்று யோசித்துப்பார்த்தால், கதைதான் காரணம். பாகிஸ்தானும் இந்தியாவும் எதிரிகள் போன்று கதை சித்தரித்திருக்கிறார்கள். போர் நடப்பது போன்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அதனால் மக்கள் அனைவரும் ஆவலுடன் பரபரப்புடன் காத்திருக்க… அவர்களோ கல்லா கட்டிக்கொள்கிறார்கள்.

  • அப்படியென்றால் குழந்தகளுக்குக்கூட கதை சொல்லக்கூடாதா?

சின்ன வயதில் குழந்தைகளுக்கு கதை சொல்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அவர்கள் அறிவு விரித்தியடையும். கண்ணில் காணாததையும் மூளையால் கண்டறிவார்கள். குழந்தைகள் கற்பனை உலகில் வாழவேண்டியது அவசியம். தன்னை ஒரு ராஜாவாக, மந்திரியாக, போர் வீரனாக, சிங்கமாக நினைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேநேரம் கதைக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தையும் சொல்லித்தர வேண்டும். ஏதாவது ஒரு கதையைக் கேட்டு ஏமாறக்கூடாது என்பதையும் கற்றுத்தர வேண்டும். படுக்கையில் கதை கேட்கலாம். கனவில் கதை கேட்கலாம். சினிமா தியேட்டரில் கதை கேட்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கதை தேவையில்லை. யாராவது கதை சொல்வது தெரிந்தால், சிரித்துவிட்டு நகரத் தெரியவேண்டும்.

  • சரி, பலரும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கதை எது?

கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.