• Home
  • அரசியல்
  • எடப்பாடி பழனிசாமி தாக்குப் பிடிப்பாரா..?

எடப்பாடி பழனிசாமி தாக்குப் பிடிப்பாரா..?

Image

பா.ஜ.க.வின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!

அண்ணாமலையில் தொடங்கிய பஞ்சாயத்தை அடுத்து பா.ஜ.க.வின் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. இல்லாத கூட்டணியை உறுதி செய்தார். வரும் தேர்தலிலும் அதே நிலையை நீடிக்க விரும்புகிறார். ஆனால், அவரை கூட்டணிக்குள் இழுக்கும் வகையில் பா.ஜ.க. வேலையைத் தொடங்கியிருக்கிறது.

நேற்றைய தினம் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும் எடப்பாடியின் இடது கரமுமான இளங்கோவனின் கல்லூரியில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான 1 ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், 2.அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், 3.ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ஓபிஎஸ் தலைமையின் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்படலாம் என்ற முடிவு எடுத்ததாக தெரிகிறது. இப்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இவர் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டடத்தின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்பு 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்தது தெரியவந்தது. 2016ம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் இன்று வைத்திலிங்கத்துக்கு சொந்தமான உறந்தையான்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு சோதனை நடக்கிறது.

இந்த விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.வின் பாய்ச்சல் அடுத்தடுத்து எடப்பாடியின் ஆட்களை நோக்கி நகர்கையில் அவர் தாக்குப்பிடிப்பாரா என்று பார்க்கலாம்.

Leave a Comment