விஞ்ஞான பார்வை
கனவுகள் ஏன் தோன்றுகின்றன? என்பதற்கு இதுவரை ஒரு தெளிவான பதில் இல்லை என்பதே உண்மை. எதிர்காலத்தில் நிகழப்போகும் செயல்களை முன்மொழிபவையே கனவுகள் என்று சொல்பவர்கள் உண்டு. ஏனென்றால், கிருஷ்ணர், புத்தர், இயேசு போன்றோர் பிறக்கும் முன் அவர்களுடைய தாய்மார்கள் கனவு கண்டதாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
முழுவதுமாக தூங்காத மூளையே கனவுகளின் அடிப்படைக் காரணம் என்று பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். தூங்காத நம்முடைய கண்கள் அசைவதை வைத்து, எந்தெந்த வேளைகளில், எந்தெந்த மாதிரியான கனவுகளைக் காண்கிறோம் என்பதைக் கண்டறிவது சாத்தியம் என்கிறது விஞ்ஞானம்.
ஒருகனவு கண்டபின் விழித்துக் கொள்வதும், அதற்குப் பின் தூங்கும்போது முதல் கனவே தொடர்வதும் கண்டினியூவல் ஆக்டிவேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆலன் ஹாப்சன் என்ற விஞ்ஞானி, ‘கனவு என்பது தீவிரமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அதீதமான அன்போ, வெறியோ, ஆசையோ, கோபமோ அல்லது இது போன்ற ஏதோ ஒரு தீவிரமான உணர்ச்சியின் வெளிப்பாடுதான் கனவுகள்’என்கிறார்.
அதனால்தான், கடவுள் மீது அதீத பக்தி வைத்திருப்பவர்கள் கனவு நிலையில் கடவுளை தரிசிக்கும் நிலை ஏற்படுAறது.
ஏற்கனவே நமது வாழ்வில் நிகழ்ந்த ஆனந்தமான, சோகமான நிகழ்வுகளை மீண்டும் அனுபவிக்கும் விதமாகவும் கனவுகள் நிகழ்வதுண்டு. பெரும்பாலும் ஆழ்மனதில் தேங்கிக் கிடக்கும் ஆசைகளும், நம்முடைய அன்றாட வாழ்வில் நடக்கும் செயல்களும் ஏதோ ஒரு இடத்தில் உரசிக் கொள்ள நேர்ந்தால் உண்மை போலவே தோற்றமளிக்கும் கனவுகள் தோன்றும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
கருவில் இருக்கும் மழலையே கனவு காண ஆரம்பித்து விடுகிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. இந்த கனவுகள் குழந்தைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றனவாம். தாய்மைக் காலத்தில் தாயின் சிந்தனைகளும், செயல்களும் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவது போல இந்த கனவுகளும் கரு வளர்ச்சியில் முக்கிய பணி ஆற்றுகின்றனவாம்.
பிரிட்டனிலுள்ள ராபின் ராய்ஸ்டன் என்னும் மருத்துவ நிபுணர், மனிதனின் கனவுகளுக்கும் அவனை பீடிக்கப் போகும் நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஒரு புது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். உதாரணமாக தலைவலியுடன் படுப்பவர்கள் குகைகளில் தவழ்வது போலவோ, சரியான காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் தூங்கினால் பயமுறுத்தும் கனவுகளோ, சூடான இடத்தில் தூங்குபவர்களுக்கு தீ போன்ற கனவுகளோ வருமாம்.
உலகப் புகழ் ஓவியர் ஸல்வேடர் லெவி தன்னுடைய ஒரு பிரபல ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அது கனவில் கண்ட ஒரு காட்சி என்று சொல்கிறார். சில எழுத்தாளர்கள் தங்களுடைய கதை கனவில் கிடைப்பதாகவும், பல கவிஞர்கள் தங்கள் கவிதைக்கான வரிகள் கனவில் கேட்பதாகவும் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களில் குறிப்பிட்டிருப்பது சுவாரஸ்யமானது.
கனவுகள் நம் உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கனவுகளின் போது நமது உடல் உழைப்பு ஏதும் செலவழியாமலேயே இருக்கிறது. எனினும் கடினமான உழைப்பைச் செலுத்துவது போன்ற கனவு கண்டால் உடல் சோர்வடைந்திருப்பதாக உணர முடியும் என்பது வியப்பு.
கனவுகள் சிலவேளைகளில் நம்முடைய வாழ்வில் நடக்கும் செயல்களின் தொடர்ச்சியான தகவல்களைத் தாங்கி வருவதுண்டு. தேர்வு நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவது போல் வருவது உண்டு. பாலியல் சார்ந்த கனவுகள் பத்து விழுக்காடு வருகின்றன என்றும், ஒரே கனவு சுமார் 65% விழுக்காடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் தெரிகிறது.
யாரோ துரத்துவதாகவும், மிகவும் தாமதமாக செல்வதாகவும், எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும், பாலியல் சார்ந்த செயல்களும், பறப்பது போலவும், தேர்வில் தோல்வியடைவது போலவும் எல்லாம் கனவுகள் காண்பது உலக அளவில் அதிகம் காணப்படும் பொதுவான கனவு.
வீழ்வது போல கனவு கண்டால் பொருளாதாரம், நட்பு, பதவி என ஏதோ ஒரு இடத்தில் சறுக்கல் நடக்கலாம். யாரோ துரத்துவது போல காணும் கனவுகள் நாம் ஏதோ செய்ய மறந்து போன, அல்லது தவிர்த்த கடமைகளின் துரத்தல். பல் விழுவது போல கனவு கண்டால் அது பல் சம்பந்தப்பட்டதல்ல, சொல் சம்பந்தப்பட்டது. நீங்கள் பேசும் பேச்சைக் கவனித்துக் கொள்ளுங்கள். திரும்பவும் பள்ளிக்கூடம் செல்வது போலக் கனவு கண்டால் அதிக பணி அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் அர்த்தம் சொல்பவர்கள் உண்டு.
வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுவது போல கனவு கண்டால் சம்பந்தப்பட்ட நபர் வேலையிலோ, விளையாட்டிலோ, வேறு தனிப்பட்ட ஏதோ பணிகளில் காட்டும் அக்கறையை வாழ்க்கைத் துணை மீது காட்டவில்லை என்று அர்த்தம் என்றெல்லாம் கனவுகளின் பலன்களைப் பட்டியலிட்டு சுவாரஸ்யத் தகவல்களைத் தருகிறார்கள் பலர்.
காலையில் விழித்ததும் அசையாமல் அதே நிலையில் படுத்திருந்து சிந்தித்தால் நீங்கள் கண்ட கனவுகள் உங்களுக்கு நினைவில் இருக்குமாம், அதற்குப் பிறகு கனவு நினைவுக்கு வராதாம்.
ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக கனவுகள் வருகின்றன. அதிக எடையுள்ளவர்கள், மூச்சு சரியாக செல்லாதபடி நோயுற்றிருப்பவர்கள், அதிக மது அருந்தும் பழக்கமுடையவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், இரவு வேலை பார்ப்பவர்கள், போன்றவர்கள் சரியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் கவலைப்படுவார்கள் என்கின்றன மருத்துவ அறிக்கைகள்.
நல்ல ஆழ்ந்த தூக்கம் பல கனவுகளைத் தவிர்த்து விடும். அதனால் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்தலும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும்புதலும் வேண்டும். தூங்கும் முன் நல்ல இசை கேட்டல், நல்ல நூல் படித்தல் , குளித்தல் என ஏதோ ஒரு மனதை இலகுவாக்கும் செயலில் ஈடுபடுதல் நலம்.
கனவுகள் வண்ணத்தில் வருமா, கருப்பு வெள்ளையில் வருமா என்றும் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதில் பல்வேறு பட்ட முடிவுகள் வந்திருந்தாலும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் 12 விழுக்காடு மக்கள் தங்கள் கனவுகளை கருப்பு வெள்ளையில் மட்டுமே காண்கிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட கனவுகள் காண்கின்றன என்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் விலங்குகள் தான் மனிதர்களை விட சிக்கலான கனவுகளைக் காண்கின்றனவாம்.
கனவு தானாய் வருகிறது என்றால், பகல் கனவை நாம் காண்கிறோம். அடைய விரும்பும் இலட்சியங்களை அடைந்தது போலவும், அதற்கான அங்கீகாரங்கள் கிடைப்பது போலவும், நிகழ்த்த முடியாதவற்றை நிகழ்த்துவது போலவும், நம் இயலாமையின் கோடிட்ட இடங்களை நிரப்புவது போலவும் என பல வகைகளில் பகல் கனவுகள் முகம் காட்டுகின்றன. பகல் கனவுகள் பலிப்பதில்லை என்பதுதான் பெரும்பாலான மனிதர்கள் கூற்று. ஆனால், பகல் கனவுகள் பெரும்பாலும் அப்படியே நினைவில் நிற்கின்றன.
சிலவேளைகளில் நம்முடைய கனவுகள் நிகழும் நேரம் நம்முடைய சுற்றுப் புறத்தில் கேட்கும் தீயணைப்பு வண்டி போன்ற சத்தங்கள் கனவுகளோடு இணைந்து அது சம்பந்தமான கனவுகளையும் தந்து விடுகின்றன. அருகில் எங்கேனும் தீ விபத்து நடந்தால் பக்கத்து வீடுகளிலுள்ள சிலர் தீ விபத்து நடப்பது போல கனவு கண்டிருப்பார்கள்.
யானையைக் கனவில் கண்டால் வளம் கொழிக்கும் என்றும், பூனையைக் கனவில் கண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் வரும் என்றும், பாம்புகளைக் கனவில் கண்டால் பாலியல் சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றும், நாயைக் கனவு காண்பது நாம் மறந்து போன எதையோ நினைவுபடுத்துவதாக இருக்கலாம் என்றும் கனவுகளை வைத்து புத்தகம் எழுதுபவர்கள் எழுதித் தள்ளுகிறார்கள்.
மருத்துவம் கனவை தூக்கத்தில் நிகழும் நரம்புகளின் செயல்பாடாகப் பார்க்கிறது. உளவியல் கனவை ஆழ்மன சிந்தனைகளின் பிரதிபலிப்பாய் பார்க்கிறது. ஆன்மீகம் கடவுளின் முன்னெச்சரிக்கைகள் என்கிறது. எப்படியோ கனவுகள் மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றன, மனிதன் கனவுகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கின்றான்.
கனவுகளை கண்டுகொள்ளாமல் விட்டுத் தள்ளுவதுதான் நாம் செய்யவேண்டிய ஒரே செயல்.