டாக்டர் பாலகோபால் ஆலோசனை
மரபணு குறைபாடு, உணவு, அலட்சியம் போன்ற பல்வேறு காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேர்கிறது. குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் பாலகோபால் அவர்களிடம் பேசினோம்.
குழந்தைகளுக்கு அறுவைச்சிகிச்சை நோய்களை, தவிர்க்க ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா? குழந்தைகளின் ஆரோக்கியத்தில் செய்யப்பட வேண்டியது என்ன?
ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதது, வயது கடந்து செய்யப்படும் திருமணம், உறவு முறை திருமணம் ஆகியவற்றை தவிர்த்தால் மரபுவழி நோய்கள் குறையும். மேலும் கருவுற்ற சமயத்தில் தாய்மார்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை முறையாக சாப்பிட்டு உடலைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் ஸ்கேன் வசதி செய்து அதற்கான வித்தியாசங்களைக் கண்டுபிடித்து மருத்துவ வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முறையான பிரசவ மருத்துவமனைகளுக்குச் சென்று பிரசவம் பார்ப்பது நல்லது. பிரசவ விஷயத்தில் கை வைத்தியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இன்று விஞ்ஞானம் நிறைய வளர்ந்திருக்கிறது. அதற்கான வசதிகளும் நிறைய இருக்கின்றன. அரசாங்கமும் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் நிறைய வசதிகள் உள்ளன. தவிர, குழந்தைகள் வளரும்போது மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் வளர்க்கப்பட வேண்டியது அவசியம். பெற்றோரும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இவற்றையெல்லாம் சரிசெய்யும்போது எந்தவித பிரச்சினைகளும் இருக்காது.
குழந்தைகளுக்கான அறுவைச்சிகிச்சைகளிலேயே மிகவும் சிக்கலானது எது? கரு அறுவைச்சிகிச்சை என்றால் என்ன?
பொதுவாக, குழந்தைகளுக்கான அறுவைச்சிகிச்சை என்பதே சிக்கலானதுதான். அதில் சில நுண்ணிய அறுவைச்சிகிச்சைகள் மேலும் சிக்கலைத் தரலாம். ரீ காஸ்டபிள் சர்ஜரி மற்றும் உறுப்புகளில் இருக்கிற நார்மல் வித்தியாசங்களை கொண்டுவந்து கொடுப்பது ஆகியன அறுவைச்சிகிச்சைகளிலேயே மிகவும் சிக்கலானது. இதுதவிர, இன்னும் பொதுவான அறுவைச்சிகிச்சைகளும் சிக்கலைத் தரக்கூடியதாகும்.
கரு அறுவை சிகிச்சை என்பது என்ன..?
கரு அறுவைச் சிகிச்சை என்பது நிறைய இடங்களில் பேசப்படுகிறது. ஆனால், குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்த அறுவைச்சிகிச்சை ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதாவது, தனிப்பட்ட முறையில் கரு மட்டும் இருந்து, மற்ற நோய்கள் கருவுக்குள் இல்லை என தெரிந்தால் அந்த நோயை மட்டும் அகற்றினால், மற்ற கருக்கள் நன்றாக இருக்கும், தவிர செல்களும் நன்றாக இருக்கும். பல வருஷங்கள் குழந்தைகள் இல்லாமல் இருந்து குழந்தை பெறுபவர்களுக்கு இதுபோன்ற கரு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. ஆனால், இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது.
