மிரட்டும் ஆய்வு முடிவுகள்
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள், இன்றைய உலக மக்கள் தொகையில் 25% ஆகும். உலக அளவில் இதய நோய்களில் 60% வரை தெற்காசியர்களிடம் மட்டுமே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடித்தல், அதிக உடல் பருமன் போன்ற பொதுவான ஆபத்துக் காரணிகள் இல்லாமலும் நம் மக்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. இதற்கு மரபணுக்கள் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இவை தவிர, சமூகப் பொருளாதார காரணிகள், உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் இதய நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
நம் இந்தியாவில் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட 1990க்குப் பிறகே இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. இதற்கு, கலோரி நிறைந்த உணவுகள் அதிகரித்ததும், தொழில் மயமாக்கலால் உடற்பயிற்சி குறைந்ததும் முக்கியக் காரணமாகும். அதோடு அதிக பரிசோதனைகள் நடப்பதன் காரணமாகவும் நோய்கள்கண்டறியப்படுகின்றன.
அதேபோல், மற்ற நாட்டினரை விட தெற்காசியப் பெண்கள் கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்ட காரணத்தாலும் அதிக கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்வதாலும் நீரிழிவு நோய் வேகமாக வளர்கிறது.
நீரிழிவு நோயைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உணவு முறை மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்தியர்களுக்கு என்று பிரத்யேகமாக ஆய்வுகள் செய்யப்படுவதே இல்லை. மேலை நாடுகளின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலே இங்கே சிகிச்சை அளிக்கப்படுவதால் போதுமான அளவுக்குத் தீர்வுகள் இல்லை என்கிறது ஆய்வு.