அப்பாக்கள் ஏன் அன்பு காட்டுவதில்லை?

ஞானகுரு பதில்

கேள்வி : மனதில் அன்பு இருக்கிறது. ஆனால், மனைவி, பிள்ளைகளிடம் அதை சொல்வதற்கு முடியவில்லை. ஏன்..?

  • எஸ்.பெரியசாமி, மேல்மருவத்தூர்.

ஞானகுரு :

ஆண் என்றால் கம்பீரம், குடும்பத் தலைவர் என்றால் அதிகம் பேசக்கூடாது, அன்பை வெளிப்படுத்துவது பலவீனம் என்று நிறைய ஆண்கள் தங்களைச் சுற்றி காங்கிரீட் சுவர் கட்டிக்கொள்கிறார்கள். அன்பு இருப்பதை வார்த்தையால் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். குடும்பத்திற்கு கஷ்டப்பட்டு உழைப்பதில் என் அன்பு புரிந்துவிடும் என்கிறார்கள்.

வாயைத் திறந்து சொல்லாமல் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே உண்மை. சிப்பிக்குள் முத்து இருப்பது திறந்து காட்டினால் மட்டுமே தெரியும். படித்துப்பார்த்தால் மட்டுமே நல்ல புத்தகம் என்பது தெரியவரும். அதேபோல் அன்பான நபர் என்பதை வார்த்தையாலும், செய்கையாலும் தெரிவிக்க வேண்டியது மிகமிக அவசியம்.

அன்பு என்பது ஒரு விதை போன்றது. அதை மண்ணில் புதைத்து, நீர் ஊற்றி, பாதுகாத்தால் மட்டுமே பலனை அனுபவிக்க முடியும். விதைக்குள் மரம் இருக்கிறது என்று அதை பத்திரமாகப் பாதுகாப்பது வீண் வேலை. எனவே, சின்னச்சின்ன வார்த்தைகள், பரிசுகள், தொட்டுப்பேசுவது மூலமாக அன்பைக் காட்டிக்கொண்டே இருங்கள். அன்பு என்பது அவமானம் அல்ல, பெருமை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment