டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி
சருமத்தின் நிறம் அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியது. இதைக் கண்டு அஞ்சாத பெண்கள் இல்லை. சரும ஆரோக்கியம் குறித்து விவரிக்கிறார், பிரபல தோல் மருத்துவர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி.
அழகு தோற்றத்தில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் இருக்க வேண்டியது அவசியம். மனதில் உற்சாகம் இருந்தால் முகம் அழகுடன் திகழும். மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகள் இன்றி, தினசரி குறைந்தது 6 மணிநேர தூக்கம் போன்றவை நம்மை புத்துணர்ச்சியுடனும், அழகுடனும் இருக்க வைக்கும்.
உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதும், முழு தானியங்கள், விட்டமின் இ சத்து போன்றவை முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், முகச்சுருக்கத்தையும் போக்கும்.
தோலின் நிறம் மாறுவது எதனால்? நிறமி குறைபாட்டிற்கு என்ன காரணம்?
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், செல்களில் ஏற்படுத்தும் பாதிப்பால், நிறமிகள் அதிகமாகிவிடுகின்றன. இதற்கு, ‘ஹைபர் பிக்மென்டேஷன்’ என்று பெயர். இதனால்தான், தோலின் நிறம் மாறுகிறது.
இதைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை, தினம் நாம் பயன்படுத்தும், லேப் – டாப், கம்ப்யூட்டர், பிரகாசமான விளக்கு ஒளியிலிருந்து வரும் கதிர்கள். தோலின் பாதிப்பிற்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனையுடன், இரவு வேலை செய்பவர்களும் தவறாமல், ‘சன் ஸ்கிரீன்’ பயன்படுத்த வேண்டும்.தோலின் நிறம் மாறி உள்ளது என அழகு நிலையங்களுக்குச் சென்று, ‘டீ டான், பிளீச்’ செய்வது தவறான பழக்கம். கடினமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி, தோலின் அடி ஆழம்வரை அழுத்தம் கொடுக்கும்போது, இயற்கையாக தோலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையே பாதித்துவிடும்.
ஹார்மோன் சருமத்தைப் பாதிக்குமா..?
ஹார்மோன் மாறுபாடுகளால்தான், பெரும்பாலும் பெண்களுக்கு, நிறமி குறைபாடு வரும். நீர்க்கட்டிகள் இருக்கும் பெண்களுக்கு, தோலின் நிறம் கறுப்பாக மாறும்; தேவையற்ற ரோமங்கள் முளைக்கலாம்; தலைமுடி கொட்டும். ஆண்களுக்கு, பொடுகு தலையில் இருந்தாலும், முகம், கழுத்துப் பகுதியில் உள்ள தோல் தடித்து, கறுத்து போகும். உடலில் ஏற்படும் சில வகை கோளாறுகளாலும், தோல் கறுப்பாக மாறும். முறையாக கவனித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், தோலில் பிரச்னைகள் இன்றி வாழ முடியும்.












