ஞானகுரு பதில்
கேள்வி ; 75 வயது ஆன பிறகும் ரஜினிகாந்த் எதற்கு நடித்துக்கொண்டே இருக்கிறார். நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாமே..?
- என்.விஷால், பொள்ளாச்சி.
ஞானகுரு :
வயது அதிகரித்தவுடன் உடலுக்கு ஓய்வு தேவைப்படலாம். ஆனால் மனதுக்கு எப்போதும் ஓய்வு தேவையில்லை. வேலை செய்வது என்றால் கஷ்டப்படுவது என்றும் ஓய்வு எடுப்பதை மகிழ்ச்சி என்றும் நினைக்கத் தேவையில்லை.
சிலருக்கு பயணம் மகிழ்ச்சி. சிலருக்கு புத்தகம் படிப்பது மகிழ்ச்சி. தோட்ட வேலையில், குடும்பத்தினருடன் இருப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி இருக்கலாம். இந்த வகையில் சிலருக்கு வேலை செய்வதே மகிழ்ச்சியாக இருக்கும்.
ரஜினிக்கு நடிப்பு என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. அவரது தனித்தன்மையின் அடையாளம். வயதான காலத்திலும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள நடிப்பு அவருக்கு உதவலாம்.
ஒருவர் ஓய்வு பெறும் வயதை வேறு ஒருவர் தீர்மானிக்கக்கூடாது. 75 வயதில் ஒருவர் வேலை செய்வதும், 75 வயதில் ஒருவர் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.
வாழ்க்கையின் கடைசி கட்டத்திலும், பணம் சம்பாதிப்பதைவிட வாழ்வதற்குரிய ஆர்வத்தை இழக்காமல் இருப்பது முக்கியம். ரஜினிக்கு நடிக்கத் தெரியும் நடிக்கிறார். அவரை நம்பி 100 கோடி ரூபாய் முதலீடு போடவும் தயாராக இருக்கிறார்கள். அவரை திரையில் பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை சூப்பர்ஸ்டார் என்று இந்தியாவே கொண்டாடுகிறது.
வயது என்பது ஒரு எண் மட்டும்தான். அவர் நிறைய ஆபரேஷன் செய்திருக்கிறார். ஆனாலும், 75 வயதில் தள்ளாடாமல் நடக்கிறார் என்றால், மற்ற அனைவருக்கும் அவர் ஒரு ஆரோக்கிய வழிகாட்டி. எனவே, ரஜினியை ஓய்வெடுக்கச் சொல்லாதீர்கள். அவரை பார்த்து முதியவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ரஜினி எதில் மகிழ்ச்சியைக் காண்கிறாரோ, அதில் அவர் தொடரட்டும். நூறு வயதிலும் இளமையாக வாழட்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
