அம்மாவுக்கு எதுக்கு கக்கூஸ்..?

காமராஜர் நினைவலைகள் – 4

காமராஜர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான காலத்திலிருந்தே அம்மா சிவகாமிக்கு மாதம் 120 ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார். காமராஜர் முதல்வரான பிறகும் செலவுக்கு அதே 120 ரூபாயே அனுப்பினார்.

காமராஜரின் நண்பர் முருக தனுஷ்கோடியிடம் அவரது அம்மா, ‘’இப்போது அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது” என்று கேட்டுக் கொண்டார்.

முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார்.

“யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று கிளம்பி விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. இப்போது கொடுக்கும் 120 ரூபாயே போதும்” என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், காமராஜரின் சகோதரி நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் விற்பனைக்கு வருகிறது என்று 3000 ரூபாய் வாங்கிவருமாறு முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

அவரும் ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

உடனே காமராஜர், ’’நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாகச் சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில் எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ” என்று கோபமாக பேசி அனுப்பினார்.

தாயை மதித்தவர் என்றாலும் தன் மீது எந்த ஒரு புகாரும் வந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தவர் காமராஜர்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment