சொட்டு மருந்து இருக்க கண்ணாடி எதுக்கு..?

Image

டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

மூக்குக் கண்ணாடிக்குப் பதில் கண் சொட்டு மருந்து வந்துவிட்டது என்று பலரும் கண்ணாடியைத் தூக்கிப் போடத் துடிக்கிறார்கள். இதன் உண்மைத் தன்மை குறித்துப் பேசுகிறார் மருத்துவர்.

பொதுவாக மனிதர்களுக்கு 40 வயதுக்கு மேல் வயது மூப்பின் காரணமாக வெள்ளெழுத்து நோய் ஏற்படுகிறது. வெள்ளெழுத்து என்பது வெள்ளை + எழுத்து. அதாவது மிக அருகில் இருக்கும் விஷயங்கள் தெளிவாகத் தெரியாமல் போகும். குறிப்பாகப் புத்தகம் படிக்கும் போது எழுத்துகள் தெளிவாகத் தெரியாமல் போவது, கம்யூட்டர் அல்லது மொபைலில் இருக்கும் சிறிய ஃபாண்ட்கள் தெரியாமல் போவது, ஊசியில் நூல் கோர்க்க இயலாமல் போவது உள்ளிட்ட பிரச்சனைகள் எழும். இதனை மருத்துவத்தில், “ப்ரெஸ்பயோபியா” (Presbyopia) என்று அழைக்கிறோம்.

இந்த நோய் ஏன் ஏற்படுகிறது? நமது கண்களுக்குள் லென்ஸ் இருக்கிறது. தூரமான பொருட்களை பார்க்கும் போது அந்த லென்ஸ் நீளமாகவும், அருகில் இருப்பதைக் காணும்போது நீளம் குறைந்து சற்று குண்டாகும் தன்மைக்கு மாறி தெளிவான பார்வை தருகிறது. இந்த லென்சைத் தேவைக்கு ஏற்ப நீட்டிக் கொள்வதற்கும் குறைத்துக் கொள்வதற்கும் நமக்கு பிரத்யேக தசைகள் இருக்கின்றன.

அதே போன்று அதிக ஒளி இருக்கும் பகல் நேரங்களில் நமது கண்ணின் பாப்பா (Pupil) தானாகவே சுருங்கிக் கொள்ளும். இது மிக அதிக ஒளி கண்ணுக்குள் ஊடுருவி சேதம் விளைவிப்பதை தடுப்பதற்கு உடல் ஏற்படுத்திக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை. குறைவான ஒளி இருக்கும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நமது பாப்பா விரிந்து கொள்ளும். அதனால் குறைவான ஒளியில் கூட ஓரளவு நல்ல பார்வைத்திறன் கிடைக்க வழி உண்டாகிறது..

இவ்வாறு தூரத்தில் அல்லது அருகில் உள்ள விஷயங்கள் அதிக ஒளி மற்றும் குறைவான ஒளி இருக்கும் நேரங்களுக்கு ஏற்ற படி நமது லென்ஸ் மற்றும் பாப்பா தன்னை தகவமைத்துக் கொள்வதை அகாமடேசன் என்று அழைக்கிறோம். வெள்ளெழுத்து குறை ஏற்படும் நேரத்தில் லென்ஸ் தனது நீண்டு, குறையும் ஆற்றலை இழந்து விடுகிறது. இதனால் முதியோர்களால் புத்தகம் படிக்க முடிவதில்லை. இதை சரிசெய்து படிப்பதற்கு மூக்குக் கண்ணாடியில் இருக்கும் லென்ஸ் உதவுகின்றன. அதன் வழி கிட்டப் பார்வையை உறுதி செய்ய முடிகின்றது.

இப்போது மூக்குக் கண்ணாடிக்குப் பதிலாக சொட்டு மருந்து போதும் என்கிறார்கள். இந்தியாவில் “ப்ரெஸ்வு” (PresVu) எனும் கண் சொட்டு மருந்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மருந்து எப்படி வெள்ளெழுத்தில் வேலை செய்கிறது?

வெள்ளெழுத்துக் குறை இருக்கும் நபர்களிடம் ஒரு செய்தித் தாளைக் கொடுத்து கண்ணாடி இல்லாமல் படிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? கண்களைச் சுருக்கி சுருக்கி படிப்பார்கள் தானே? அவ்வாறு கண்களைச் சுருக்கும் போது அவர்களது பாப்பா சுருங்கும். அதனால் “குண்டூசி ஓட்டை விளைவு” (Pin Hole Effect) மூலம் சற்று பார்வைத் திறன் கூடும். அதே விளைவைப் பயன்படுத்தி, பைலோகார்பின் எனும் மருந்து செயலாற்றுகிறது.

இந்த மருந்தை கண்களில் சொட்டு மருந்தாக விடும் போது, நமது கண்களின் பாப்பாவை சுருங்கச் செய்து அதன் வழி கிட்டப் பார்வையை தெளிவுறச் செய்கிறது. இந்த பைலோகார்பின் கண் சொட்டு மருந்து – கண் நோய் சிகிச்சைலில் புதிய வரவு என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நீண்ட காலமாகவே க்ளாகோமா எனும் கண் அழுத்த நோய்க்கு இந்த சொட்டு மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதை விட நவீன மருந்துகள் க்ளாகோமாவுக்கு கண்டறியப்பட்டு விட்டதால், இது மூன்றாம் நிலை மருந்தாக இருக்கிறது.

இந்த பைலோகார்பின் மருந்து க்ளாகோமாவுக்கு 2% எனும் நீர்ப்பு பதத்தில் வழங்கப்படும். அந்த பதத்தில் வழங்கப்படும் போது – ரெடினா எனும் விழிப்படலப் பெயர்ந்து கொள்ளுதல் (RETINAL DETACHMENT) போன்ற சில விரும்பத்தகாத ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. எனவே ப்ரெஸ்பயோபியா சிகிச்சையில் நீர்ப்பு பதத்தை 1.25% ஆகக் குறைத்து பைலோகார்பின் வழங்கப்படுகிறது.

இந்த ப்ரெஸ்வு நிறுவனம் தனது ஆய்வின் அறிக்கையை இன்னும் பொதுவான தளத்தில் பதிவு செய்யாமல் இருப்பதால், பக்கவிளைவுகள் குறித்து விரிவான கருத்து கூற இயலவில்லை. எனினும் அமெரிக்காவில் இதே மருந்து இதே பதத்தில் வுய்ட்டி எனும் பெயரில் சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதில் தலைவலி, சொட்டு மருந்து போட்ட சில நிமிடங்கள் கண் லேசான எரிச்சல், கண்ணீர் சற்று அதிகமாக சுரத்தல், சில நிமிடங்கள் கண் பார்வை மங்குதல் போன்ற அளவில் குறைவான பக்கவிளைவுகள் தோன்றுவதை அறிய முடிகிறது.

அமெரிக்காவில் 2023ல் க்ளோசி எனும் பெயரில் இதே பைலோகார்பின் சொட்டு மருந்தை இன்னும் நீர்மப்படுத்தி 0.4% என்ற அளவில் தயாரித்து சந்தைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்தின் விலை 400 ரூபாய்க்கு சற்று குறைவு. ஒரு நாளைக்கு ஓரிரு முறை இரு கண்களிலும் தலா ஒரு சொட்டு விட்டுக்கொள்ள வேண்டும். சொட்டு மருந்து விடப்பட்ட பதினைந்து முதல் இருபது நிமிடங்களில் செயலாற்றத் துவங்கி ஆறு முதல் எட்டு மணிநேரங்கள் வரை தொடர்ந்து செயலாற்றும் தன்மை கொண்டது.

இந்த மருந்தைக் கொண்டு 40 முதல் 55 வயதினருக்கு மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த மருந்து எவ்வாறு வேலை செய்யும் என்பது ஆய்வுகளுக்குப் பின்பே தெரியவரும். மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இந்த சொட்டு மருந்து விநியோகிக்கப்படும்.

ரெடினா சார்ந்த பக்கவிளைவுகள் மிக அரிதாக ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கட்டாயம் இந்த மருந்தை உபயோகிக்கும் முன் கண் நல மருத்துவர்கள் உங்களின் ரெடினாவின் (விழிப்படலத்தின்) நலனை உறுதி செய்த பின்னரே இந்த சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இந்த சொட்டு மருந்தை கண்களில் விட்ட சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை கண் பார்வை சற்று மங்கலாகத் தெரியலாம். மேலும் குறைவான ஒளி நிலவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த மருந்தைப் போட்டுக்கொண்டு வாகனம் இயக்குவது அல்லது நுட்பமான இயந்திரங்கள் இயக்குவதை இன்னும் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கும்.

இந்த சொட்டு மருந்தை உபயோகிக்கும் போது திடீரென கண்களில் ஒளி பீய்ச்சி அடிப்பது போலவோ பார்வையில் ஏதோ பொருட்களை மிதந்து கொண்டிருப்பது போலவோ அல்லது பார்வை இழப்பு போன்ற பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே, சிறிய பிரச்னை தெரியவந்ததுமே மருத்துவரை அணுக வேண்டும். இது ரெடினா பெயர்ந்து கொண்டதன் காரணமாக இருக்கலாம்.

கண்களில் உள்ள கருவிழியில் அழற்சி இருப்பவர்கள் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது. கான்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் அதை கழட்டி வைத்து விட்டு பத்து நிமிடங்கள் கழித்தே இந்த சொட்டு மருந்தை உபயோகிக்க வேண்டும்.

மேற்கத்திய உலகத்தில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் சொட்டு மருந்து தற்போது இந்தியாவில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. எனினும் இந்த மருந்தை விநியோகித்த பிறகு ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து நான்காம் கட்ட மருத்துவ ஆய்வை உற்பத்தி செய்யும் நிறுவனம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண் நல மருத்துவர்கள் இனி வரும் காலங்களில் நோயரை பரிசோதித்து விட்டு இந்த மருந்தின் சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து தேவையானவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்.

Leave a Comment