என்னை விரும்பியரே இன்று வெறுப்பது ஏன்..?

ஞானகுரு பதில்

கேள்வி : விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைக் கடப்பது எப்படி..?

  • எஸ்.பால்ராஜ், பாண்டியன் நகர்.

ஞானகுரு :

பிடிக்கும், பிடிக்காது – விருப்பம், வெறுப்பு போன்ற எல்லாமே நேரத்திற்கேற்ப, வயதிற்கேற்ப, காலத்திற்கேற்ப,  ஆட்களுக்கு ஏற்ப, இடங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.  சின்ன வயதில் மழையைக் கண்டதும் ரோட்டில் இறங்கி மகிழ்ச்சியுடன் நனைந்து விளையாடியவர்கள், வயதான பிறகு சின்ன தூறல் விழுந்தாலே வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள்.

ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக லவ் செய்பவரே, ஏன் இந்தப் பெண்ணை ஏன் மேரேஜ் செய்துகொண்டேன் என்று திருமணத்திற்குப் பிறகு வருந்துவது உண்டு. பிடிக்காத மாப்பிள்ளையை கட்டிக்கொண்டவரே, அவரைப் போன்று நல்லவர் யாரும் இல்லை என்று வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக வாழ்வதும் உண்டு.

ஊர் விட்டு ஊருக்குச் சென்று பிரியாணி சாப்பிடும் நபரே, பிரியாணி ஹெல்த்துக்கு நல்லதில்லை என்று ஒதுங்குவதுண்டு. அதேபோன்று பிடிக்காத உடை, பிடிக்காத இடம், பிடிக்காத வேலை போன்றவை மிகவும் பிடித்தவையாக மாறிவிடுவதும் சகஜமே.

பொதுவாக விருப்பு, வெறுப்பு போன்றவை பழைய அனுபவங்கள் அல்லது குடும்ப தாக்கத்தினால் உருவாகின்றன. இவை மாறிக்கொண்டே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொண்டவர், விருப்பத்தைத் தேடி அலைய மாட்டார். பிடிக்காத ஒன்றை வெறுக்க மாட்டார்.

ஹோட்டலில் நமக்குப் பிடித்த இட்லி இல்லை என்றால் சப்பாத்தி சாப்பிட்டுத் திரும்புவது போன்று எல்லாவற்றையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளுங்கள். விருப்பமும் வெறுப்பும் பெரிய பாதிப்பு தராது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment