பெண்கள் ஏன் துறவி ஆவதில்லை..?

அதிசய உளவியல்

குடும்பத்தில் மனைவியுடன் சண்டை போடும் ஆண்கள், ‘இப்படி நச்சரிச்சிக்கிட்டே இருந்தால் நான் சந்நியாசியாப் போயிடுவேன்…’ என்று மிரட்டுவதுண்டு. அப்படி பேசும் ஆண்கள் யாரும் சாமியாராவதில்லை. ஏனென்றால், குடும்பஸ்தனாக இருப்பதை விட சாமியாராக இருப்பது ரொம்பவே கடினம். பசி, மழை, வெயில், நோய் போன்ற தொந்தரவுகளை தனியே சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதால் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறும் ஒருசில ஆண்களும் விரைவில் திரும்பிவிடுகிறார்கள்.

ஆனால், வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் துறவு மனப்பான்மையை அடைந்துவிட்டால் அதன் பிறகு வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்பதே உண்மை. ரிடயர்மெண்ட் வயதுக்குப் பிறகு துறவு மனப்பான்மைக்கு ஆசைப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால், அந்த துறவு மனப்பான்மை கட்டாயத்தினால் ஏற்பட்டுவிடும். எனவே, அதற்கு முன்னதாக குறிப்பாக 50 வயதில் துறவு மனப்பான்மைக்குத் தயாராவது நல்லது

துறவு வாழ்க்கை என்றால் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை வீட்டுக்குள் இருந்த படி வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது ஆகும். 20 வயதில் இந்த உலகமே நம் கையில் இருப்பது போல் தோன்றும். 40 வயதில் உலகத்தின் கையில் நாம் இருப்பதாகத் தோன்றும். 50 வயதில் ஓரளவு நிதானம் வரும். நாம் இல்லை என்றாலும் வீடு, அலுவலகம் தனியே இயங்கும் என்ற உண்மை புரியத் தொடங்கும். எனவே 50 வயதில் துறவு வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம்.

இதன் அர்த்தம் தனக்காக மட்டும் வாழ்வது ஆகும். உங்களுக்கு விருப்பமானதை செய்யலாம். பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கவலை தேவையில்லை. யாரையும் எதற்கும் குறை சொல்ல வேண்டாம். யாருக்கும் ஆலோசனை, அறிவுரை சொல்ல வேண்டாம். நாளை என்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போடாமல், இன்று மரணத்துக்குத் தயார் என்று வரவேற்பதே துறவு நிலை.

ஆண்களுக்கு மட்டுமே இந்த துறவு மனப்பான்மை வேண்டும். பெண்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால் கணவன் வீட்டுக்கு வந்ததுமே அவளுடைய ஆசை, பாசங்களை எல்லாம் கட்டிப் போட்டி கிட்டத்தட்ட துறவியாகிவிடுகிறாள். அதனால் தான் கடைசி காலத்தில் கிடைத்ததை குடித்துக்கொண்டு பெண்களால் நிம்மதியாக வாழக்கையைத் தள்ளமுடிகிறது.

\மனைவி இல்லாத கணவன் சீக்கிரம் மரணம் அடைவதற்கும், கணவன் இல்லாத மனைவி நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் அடிப்படை காரணம், பெண்ணின் துறவு மனப்பான்மைதான். எனவே, எத்தனை சீக்கிரம் ஆண்கள் துறவியாக மாறுகிறார்களோ, அத்தனை சீக்கிரம் நிம்மதி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment