• Home
  • காமம்
  • காமத்திற்கு கணவனை ஏன் அலையவிடுகிறார்கள் பெண்கள்..?

காமத்திற்கு கணவனை ஏன் அலையவிடுகிறார்கள் பெண்கள்..?

Image

பாலியல் பாடம்

தலையைத் தொடங்கப்போட்டுக்கொண்டு வந்தார் மகேந்திரன்.

‘’ஒரு குடும்பஸ்தன் என்றாலே ஆயிரத்தெட்டு பிரச்னைகள்…. இப்போது என்ன சிக்கல்?’’ என்று கேட்டார் ஞானகுரு.

‘’காலை முதல் இரவு வரை குடும்பத்துக்காகவே உழைக்கிறேன். இரவில் கொஞ்சநேரம் இன்பமாக இருக்கலாம் என்று மனைவியை நெருங்கினால் ஏதாவது காரணம் சொல்லி தள்ளிப்படுக்கிறாள்…’’ என்று முணுமுணுத்தார்.

‘’நீ அவளையும் அவளது ஆசைகளையும் புறக்கணித்தாய்… அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்…’’

‘’அப்படியெல்லாம் நான் செய்யவில்லையே…?’’

‘’நீ மட்டுமில்லை. எல்லா ஆண்களும் அப்படியே செய்கிறார்கள். முதல் இரவு அறைக்குள் பெண் ஆயிரத்தெட்டு கனவுகளுடன் வருகிறாள். அந்த காலகட்டத்தில் பருவ வயதின் குறுகுறுப்பு மட்டுமே அவளிடம் இருக்கிறது. அப்போது உடல் தேவை பற்றிய புரிதலின்றி பேரார்வத்துடன் இருக்கிறாள். அந்த வயதில் காமத்தின் அருமை, முழுமை அவளுக்குப் புரிவதில்லை.

இந்த காலகட்டத்தில் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியலுக்கு உட்படுத்துவதே ஆண்மை என்று காலம் காலமாக ஆண்கள் மனதில் புதைக்கப்பட்டுள்ளது. ஆகவே, முதல் இரவில் அல்லது அடுத்த சில நாட்களில் பெண்களிடம் காமம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அதிகாரமாக பிரயோகிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பம், ஆசை, நேரம், நிலைகள் போன்ற எந்த கேள்வியையும் ஆண்கள் எதிர்பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்ணின் சம்மதம் கூட தேவையில்லாமல் பாலியல் வன்கொடுமையாகவே தாம்பத்தியம் அரங்கேறுகிறது.

பருவ வயதுகளில் காமத்தின் மீது இருந்த ஆர்வம், எதிர்பார்ப்பு, ஆசை எல்லாமே ஆண்களின் முரட்டுத்தனத்துக்கு முன்பு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுகிறது. கட்டில் உறவு என்பது சுவாரஸ்யமற்ற உப்புச்சப்பற்ற விளையாட்டாக மாறிவிடுகிறது. சமைத்து வைத்த உணவை ஆண் மளமளவென சாப்பிடுவது போலவே உடலையும் வேகவேகமாக பிய்த்துத் தின்னுகிறான்.

எனவே, காமத்தில் பெண்ணுக்கு சுவாரஸ்யம் போய்விடுகிறது. ஆணின் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக தன் உடல் மாறிப்போவதை நினைத்து அசூயை அடைகிறாள். பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் மகிழ்ச்சியான பாலியல் உறவு என்பது கனவிலும் சினிமாவிலும் மட்டுமே சாத்தியம் என்பதாக மாறிவிடுகிறது.

ஆண்களுக்கு மரணம் வரையிலும் சலிப்பே தராத ஒன்றாக இந்த பாலியல் உறவு இருக்கிறது. ஆனால், பெண்ணுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாலியல் அனுபவம் திணிக்கப்பட்டதாகவும் கசப்பாகவும் இருக்கிறது. இந்த அனுபவத்தை மாற்றுவதற்கு எந்த ஆணும் முன்வருவதில்லை. ஏனென்றால் ஆணுக்கு அவன் விருப்பத்தை, அவன் ஆசையை அவசரம் அவசரமாக நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணமே காலம் முழுக்க நீடிக்கிறது.

தன்னுடைய விருப்பத்திற்கு கணவனிடம் ஒரு போதும் மதிப்பும் தீர்வும் கிடைக்காது என்ற உறுதியான முடிவுக்கு திருமணமான சில வருடங்களில் மனைவி வந்துவிடுகிறாள். இந்த தீர்மானத்தை கணவன் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை.

இந்த காலகட்டத்தில் யாரேனும் ஒருவர் பெண்ணின் அழகைப் புகழ்ந்தால், அவரது உடலுக்கு அலைந்தால் பெண் அவர் மீது கவரப்படுகிறாள். அவரிடமாவது தன்னுடைய ஆசை நிறைவேறும் என்று நம்புகிறாள். இந்த காரணத்தாலே பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் உண்டாகின்றன.

ஆனால், ஆண் எல்லா காலத்திலும் ஆணாகவே இருக்கிறான். கள்ளத் தொடர்பு முலம் வரும் ஆணும் ஒருபோதும் பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பு தருவதில்லை. தன்னுடைய ஆசை நிறைவேறியதும் தூங்கிப் போவதற்கே ஆசைப்படுகிறான். அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று பெண்ணிடம் கேட்டு அறிவதற்குக்கூட ஆண் விரும்புவதில்லை.

அதனால், எந்த ஆணாலும் தன் ஆசையை நிறைவேற்ற முடியாது என்ற உண்மையைப் பெண் புரிந்துகொள்கிறாள். அதேநேரம், ஆண் மீது குற்றம் சாட்டுவதில்லை. அதற்குப் பதிலாக ஆண் உடம்பை பட்டினி போடுகிறாள். அவன் ஆசையாக நெருங்கப்போகிறான் என்று தெரிந்தாலே தள்ளிப் போகிறாள்.

கணவன் விருப்பப்படுகிறான் என்று தெரிந்தாலும் தெரியாதவள் போன்று நடிக்கிறாள். வாய் விட்டு சொன்னாலும், ‘பூஜை, விரதம், பிள்ளைங்க இருக்காங்க’ என்று காரணம் சொல்லி விலகிச்செல்கிறாள். ஒரு வகையில் இது பழி வாங்குதல். பெண்ணை புரிந்துகொள்ளாத ஆணை அவள் காலம் முழுவதும் அலையவிட்டுக்கொண்டே இருப்பாள்…’’ என்றார் ஞானகுரு.

‘’இதை எப்படி மாற்றுவது..?’’

‘’உன் ஆசையை மறந்துவிட்டு அவளுடைய ஆசையை தீர்த்துவைக்க முயற்சி செய். உன் ஆசை தானாக நிறைவேறும்’’ என்றார் ஞானகுரு.

தெளிவாகக் கிளம்பினார் மகேந்திரன்.

Leave a Comment