ஞானகுரு பதில்கள்
கேள்வி : புனிதமான ஆசிரியர் பணியிலும் சிலர் தவறு செய்கிறார்களே… அரசு பள்ளி ஆசிரியர்களை விட தனியார் பள்ளி ஆசிரியர்கள் நன்றாக சொல்லித்தருவது எப்படி?
- பி.சுந்தரேசன், கள்ளக்குறிச்சி.
ஞானகுரு :
ஆசிரியர் பணி என்பது ஒரு வேலை மட்டுமே. போலீஸில் திருடர்கள் இருப்பது போன்று, நீதிபதிகளில் ஊழல்வாதிகள் இருப்பது போன்று ஆசிரியப்பணியிலும் அயோக்கியர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அரசு பள்ளியில் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரே, அவரது பிள்ளையை தனியார் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்க்கும் ஆசிரியரை நம்பியே ஒப்படைக்கிறார். ஏனென்றால், தனியார் பள்ளி ஆசிரியர் தலைக்கு மீது எப்போதும் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது.
கேள்வி : உண்மையாக பிறர் மீது அன்பு செலுத்தும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா..?
- எம்.ரதி, மீனாட்சி நகர்.
ஞானகுரு :
மற்றவர்களுக்கு எப்படியோ, ஒவ்வொரு தாயும், தந்தையும் அவர்களுடைய பிள்ளைகள் மீது உண்மையான அன்பு செலுத்துகிறார்கள். இப்படி வீட்டுக்கு இருவர் நிச்சயம் இருக்கிறார்கள். எனவே, உலகம் முழுக்க கோடிக்கான மனிதர்கள் அன்பாகவே வாழ்கிறார்கள், அன்புக்காகவே வாழ்கின்றனர். அன்பு என்பது கொடுப்பது மட்டுமே தவிர, பிறரிடம் எதிர்பார்ப்பது அல்ல.
கேள்வி : எழுத்தாளன், கவிஞன் எப்படி உருவாகிறார்கள்..?
- டி.கண்ணன், காரியாபட்டி.
ஞானகுரு :
எல்லா மனிதர்களிடமும் மிகச்சிறந்த கதை உண்டு. எல்லா மனிதர்களிடமும் கவிதை மனசு உண்டு. ஆனால் எல்லோரும் இதனை வெளிப்படுத்துவதில்லை. ஒரு சிலரை மட்டும் எழுத்துக்கள் தொந்தரவு செய்கின்றன. அவர்களே கவிஞர்களாக, கதாசிரியர்களாக மாறுகிறார்கள். பாரதி போல் பிறவியில் கவியாற்றல் என்பது அரிதிலும் அரிது. பெரும்பாலோர் நிறையப் படித்து, தங்கள் அறிவை வளர்த்து, பேனாவை கையில் எடுக்கிறார்கள்.