மனிதரின் ஆசை தூண்டில்
ஞானகுருவை சந்தித்த மகேந்திரன், ‘’சுவாமி, இமய மலை உச்சியில் நின்று பார்த்தாலும், பனியைத் தவிர எதுவும் தெரியப் போவது இல்லை. அது முழுக்கவே பனி மூடிய பிரதேசம் என்பது தெரிந்தாலும், எதற்காக அதன் மீது ஏறுவதற்கு மனிதன் முயற்சி செய்கிறான்..?’’ என்று சந்தேகம் கேட்டார்.
’’மனிதனால் சும்மா இருக்க முடியாது. எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும், பாராட்ட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். இந்த மண்ணில் பிறந்ததற்கு அர்த்தமாக ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இதற்காக எத்தனை தோல்விகள் வந்தாலும், ஏமாற்றம் கிடைத்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதற்கும் தயாராக இருக்கிறான்.
வெயிலிலிருந்து நிழலுக்குப் போனால் ஒரு சுகம் கிடைக்கும். இருளிலிருந்து ஒளிக்குப் போனால் சுகம். அது போல் தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றியின் சுகத்தை ரொம்பவே ரசிக்கிறான். வெற்றிக்காக ஏங்குகிறான். பிறர் அங்கீகாரத்துக்கு ஆசைப்படுகிறான். அதற்கான என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான்.
அதனால்தான், முதல் முறையிலே இமயமலை உச்சியை அடைந்துவிட முடியாது என்று தெரிந்தாலும், ஆசையுடன் ஏறுகிறார்கள். எத்தனை சிக்கல்கள், சோதனைகள், சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். கடைசியாக உச்சியை அடைந்தவுடன், ஒரு சாதனை படைத்துவிட்ட மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
அந்த மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் கொண்டாட முடியும் என்றால், இமயமலை ஏறுவதில் தவறே இல்லை. வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் மனநிலை இருத்தல் வேண்டும். ஏனென்றால், வெற்றி, தோல்வியைவிட அதை நோக்கிய பயணமே ஆனந்த அனுபவம். அந்த பயணத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், மலையை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதே போதும்…” என்றார் ஞானகுரு.
’’மலையில் ஏறும் முயற்சி தோல்வி அடையும்போது என்ன செய்ய வேண்டும்..?”
‘’தோல்வியை எதிர்பாருங்கள். இதுபோன்ற தோல்விகள் கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரியும் என்று டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதேநேரம், தோல்வியைக் கண்டு பயப்படாமல் மீண்டும் முயற்சி செய்வேன், நிச்சயம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.
முன்கூட்டியே தோல்வியை வரவேற்கத் தயாராக இருப்பவர்களை தோல்வியால் எதுவும் செய்துவிட முடியாது. தோல்வியைப் போன்று உடல் நலத்தில் சிக்கல், ஏமாற்றம், மரணம் போன்ற விளைவுகள் ஏற்பட்டாலும் சந்திக்கும் துணிவுடன் உறுதியுடன் நில்லுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்கும் தோல்வி, ஒருபோதும் துன்பம் தருவதில்லை…’’
’’நீங்கள் ஏன் இமயமலை ஏறவில்லை..?’
‘’இந்த மண்ணும் இமயமலையே…’’ என்று சிரித்தார் ஞானகுரு.