காதல் திருமணம் தோற்பது ஏன்?

Image

பெரியோர் சொல் கேளுங்கள்


கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இது  இரண்டு பேரின் கூட்டணி அல்ல, இரண்டு  குடும்பங்களின் பிணைப்பு.  பெற்றோரின் நம்பிக்கை மற்றும் அன்பின் அடிப்படையில் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் இரண்டு தனி நபர்கள், ஒருவரையொருவர் நம்பிக்கை வைப்பதன் அடிப்படையில் காதல் திருமணம் அமைகிறது.

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் முடிவெடுக்கும் அதிகாரம், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சேர்ந்ததாக இருக்கிறது. ஆனால், காதல் திருமணங்களில் தனி நபரைச் சார்ந்திருக்கிறது.  ‘நான் எடுப்பது சரி’, ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்பது போன்ற தனிப்பட்ட குணாதிசயங்கள் காரணமாக சின்னச்சின்ன பிரச்னைகள் உருவாகி, சட்டென விவகாரத்தின் கதவை தட்டி விடுகிறது. அதனால்தான், நிச்சயக்கப்பட்ட திருமணங்களைவிட, காதல் திருமணங்களில் தோல்வி அதிகம் இருக்கிறது.

வருத்தம், கோபம், ஆதங்கம், சிக்கல், சண்டை இல்லாத வீடு இல்லை. ’ஒருவர் கோபப்படும் நேரத்தில், அடுத்தவர் அடங்கிப் போகவேண்டும்’ என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். ’படிக்கட்டுகளில் ஏறும்போது சிரமம் இருக்கத்தான் செய்யும், ஏறிய பிறகே வெற்றிக்கனியை பறிக்க முடியும்’ என்று வழி காட்டுவார்கள். துன்பம் வரும்போது தோளில் சாய்த்து ஆறுதல் கொடுப்பார்கள். வெற்றி கிடைத்தால் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள்.

ஆனால், இது காதல் திருமணங்களில் நடப்பதில்லை.  காதலில் விழும் இன்றைய இளசுகள், காதலுக்குப் பின்னர் குடும்ப வாழ்க்கை ஒன்று இருப்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. சினிமாவில் வரும் கதாநாயகன், நாயகி மாதிரி தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். கல்வியில், வேலையில் வெற்றி அடைந்தது போன்று திருமண பந்தத்திலும் தங்களால் எளிதில் வெற்றி பெறமுடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் படிப்பு மற்றும் வேலையில் வெற்றி பெறுவதற்கு வேர் போன்று இருந்தது பெற்றோர்கள் என்ற உண்மையை புரிந்துகொள்வதில்லை. தாங்களாகவே முன்னேறியதாக நினைத்து, பெற்றோரை விட காதல் முக்கியம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

சொந்த வீட்டில் சொகுசாகவும், எந்த பொறுப்பும் இல்லாமல் சந்தோஷமாக வளர்ந்த ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பிறகு வீட்டு வேலைகள் செய்வதற்கும், பொறுப்புகளை எடுத்துக்கொள்வதற்கும் அச்சப்படுகிறார்கள். காதலிப்பதற்கும், நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இந்த நிஜ முகத்தை தாங்கமுடியாமல் தவித்து, வெடிக்கிறார்கள். இப்போது தங்கள் தோல்வியைக் கூட வெற்றி என நினைக்கும் முட்டாள்தனமான மனப்பான்மை பலரிடம் பெருகி வருகிறது. ஆம், ‘எங்களுக்கு பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இப்ப பிடிக்கலை, அதனால பிரிஞ்சுட்டோம்..’ என்று திருமண உறவை சாதாரணமாக எண்ணுகிறார்கள்.

திருமணம் என்பது மண் பாத்திரம் போன்றது. ஒருமுறை உடைந்துவிட்டால் அதனை ஒட்டவைப்பது கடினம், அப்படியே ஒட்டிவைத்தாலும், அந்த உடைந்துபோன கீறல் பளீச்சென தெரியும். ஆகவே காதல் செய்யுங்கள். உங்களுக்கு காதல் மீது நம்பிக்கை இருந்தால், அதனை பெற்றோரிடம் சொல்லுங்கள்.

உங்கள் காதலில் உறுதி இருந்தால், உண்மை இருந்தால் நிச்சயம் பெற்றோரின் அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைக்கவே செய்யும். அனுமதிக்கு தாமதம் ஆகும் என்றாலும் காத்திருங்கள், உண்மையான காதல் நிச்சயம் ஜெயிக்கும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment