• Home
  • ஞானகுரு
  • தங்க நகையை பார்த்தாலே ஆசை வருகிறதே ஏன்..?

தங்க நகையை பார்த்தாலே ஆசை வருகிறதே ஏன்..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : தங்கத்தில் புது டிசைன் நகையைப் பார்த்தாலே வாங்கும் ஆசை வருகிறது. இந்த ஆசையை எப்படி குறைப்பது..?

  • பரிமளம். காங்கேயம்.

ஞானகுரு :

மனிதரின் காலுக்குக் கீழே, அதாவது பூமிக்குள் பிரித்தெடுக்கப்படாத தங்கம் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் செல்வந்தர் வீடுகளிலும் தங்கம் கட்டி கட்டியாகக் குவிந்து கிடக்கிறது. தங்கம் மட்டுமே அத்தனை நாடுகளிலும் செல்லுபடியாகும் ஒரே பணம். எனவே தங்கத்துக்காக கொலைகள், கொள்ளைகள் காலம்காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. தங்கத்தை வைத்திருக்கும் மனிதர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தங்கம் மட்டும் அப்படியே இருக்கிறது.  

தங்கம் மனிதர்களை வசீகரிப்பதற்கு ஒரு ருசிகரமான கற்பனைக் கதை இருக்கிறது. அதாவது கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடந்த சண்டையில் சாத்தான் தோற்றுப் போகிறது. பாதாள லோகத்தில் பதுங்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களை மட்டும் பூமியில் விட்டுச்செல்வதற்கு கடவுளிடம் சாத்தான் அனுமதி கேட்கிறது. கடவுளும் அனுமதிக்கிறார். உடனே தங்கத்தையும் பொறாமை குணத்தையும் பூமியில் விதைத்துவிட்டுச் சென்றன சாத்தான் என்று அந்த கதை முடியும்.

இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் உங்கள் ஆசைக்கு இதில் பதில் இருக்கிறது. தங்கமும், பொறாமைக் குணமும் ஒருபோதும் அமைதி தராது. எனவே, தங்கத்தை ஏளனமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே, தங்கத்திலிருந்து விடுதலை தரும்.

கேள்வி : கும்பாபிஷேகம் எதற்காக நடத்தப்படுகிறது..?

  • பி.சுசிலா, மாயூரம்.

ஞானகுரு ;

புதிய கோயில் கட்டப்படும் நேரத்திலும், பழைய கோயில் புதுப்பிக்கப்படும் நேரத்திலும் கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். ஹோமங்கள், விசேஷ பூஜைகள், கலச ஸ்தாபனம் செய்து மூர்த்தியை புனித நீரால் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த சடங்குகளை அனைத்து ஆன்மிகவாதிகளும் முக்கியம் என்று கருதுவது ஆச்சர்யம். ஏனென்றால் குறிப்பிட்ட காலத்தில் கடவுளுக்கும் கோயிலுக்கும் சக்தி குறைந்துவிடுகிறது என்பதாலே பழைய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்கிறார்கள். கடவுளுக்கு சக்தி குறையுமா..? மந்திரத்தால் கடவுளுக்கு சக்தி வந்துவிடுமா..? கோயிலுக்கும் கடவுளுக்கும் சக்தி வந்துவிட்டது என்பதை எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத வியாபார ரகசியம்.

Leave a Comment