சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் நலனை முன்னிட்டே கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளி தவிர வேறு எந்த அரசு அலுவலகங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதில்லை.
மருத்துவமனை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் போன்ற பல்வேறு துறையினர் சனி, ஞாயிறு விடுமுறை கூட இல்லாமல் செயலாற்றி வருகிறார்கள். இந்த சூழலில் நீதிமன்றங்களுக்கு மட்டும் கோடை விடுமுறை வழங்கப்படுவது எதற்காக..?
காலகாலமாக நடைமுறையில் இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி இப்படி விடுமுறை அறிவிக்கலாமா..? தினமும் புதுப்புது வழக்குகள் குவிந்து வருகின்றன. இரவு பகலாக வேலை பார்த்தாலே இத்தனை வழக்குகளையும் தீர்த்துவைக்க முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
நீதிபதிகளுக்கு ஓய்வு வேண்டும் என்றால் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொள்ளலாமே தவிர, நீதிமன்றத்திற்கே விடுப்பு போட்டு மூடிவிட்டுப் போவோம் என்பது ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்குப் பூட்டுப் போடுவதை இனியாவது நிறுத்துவதற்கு நீதியரசர்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் துறையாக நீதிமன்றத்தின் கதவுகள் என்றென்றும் திறந்திருக்க வேண்டும்.