இதோ அவரது 12 கோரிக்கைகள்
சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்பதற்காக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் உயிர் நீத்த தினம் இன்று. 1956 ஜூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவரை காமராஜர் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கிறது.
தியாகி சங்கரலிங்கனார் 12 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
1. மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும்.
2. சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும்.
3. ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும்.
6. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும். ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது.
7. தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
8. தொழிற்கல்வி அளிக்கவேண்டும்.
9. நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.
10. விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்கவேண்டும்.
11. மத்திய அரசு அலுவல் மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும்.
காமராஜர் நினைத்திருந்தால் இவரது போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பலரும் குற்றச்சாட்டு வைப்பதுண்டு. உண்ணாவிரதத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காமராஜர் கடிதம் எழுதினார். அதே நேரம் இந்திய தேசியப் பார்வையில் இருந்த காமராஜருக்கு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளில் உடன்பாடு இல்லை. அவை எல்லாமே உடனடியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று வெளிப்படையாகப் பேசினார்.
பொதுவுடமைக் கட்சியினர் தூண்டுதலால் நடைபெற்ற இந்த போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர காமராஜர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே, கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டார். மருத்துவத்திற்கு சங்கரலிங்கனார் ஒத்துழைக்காத நிலையில் மூன்று நாட்களில் அவரது உயிர் பிரிந்தது. ஆகவே, அவர் 79 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் என்றும் கூறுவார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக காமராஜரை அவமானபடுத்த வேண்டும் என்பதற்காக பொதுவுடமைக் கட்சியினரும் திராவிடக் கழகமும் சங்கரலிங்கனாரை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. எப்படியிருந்தாலும் சங்கரலிங்கனாரின் மரணம் காமராஜர் மீது விழுந்த கரும் புள்ளி என்பது உண்மையே.