எங்கே இருந்தார் தெரியுமா?
உலக அளவில் சுதந்திரப் போராட்டம் என்றாலே இந்தியப் போராட்டமே தனித்தன்மை வாய்ந்தது. அமெரிக்க சுதந்திரம், பிரெஞ்சு புரட்சி, ரஷ்யப் புரட்சி போன்றவை மிகப்பெரும் வரலாற்று மாற்றம் உருவாக்கியது என்றாலும், நமது இந்திய நாட்டின் சுதந்திரப் புரட்சியே உண்மையான் மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆகும்.
மற்ற நாடுகளில் சுதந்திரப் போராட்டத்துக்காக ஏராளமான வீரர்கள் உயிரை பறிகொடுத்து ரத்தம் சிந்தினார்கள். அதோடு மாற்றத்திற்கான போராட்டத்தை ஒரு குழுவினரே முன்னின்று நடத்தி வெற்றி கண்டார்கள். அவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள். ஆனால், நம் இந்தியாவில் மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமில்லாமல் குடும்பத்தோடு பங்கெடுத்தனர். கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் ஒரு யுத்தத்தை நடத்தி வெற்றிபெற்று அஹிம்சை எனும் புதிய புரட்சியை உருவாக்கிக் காட்டினார் மகாத்மா காந்தியடிகள்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்குப் பின்னர் வெள்ளையர்கள் வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். அதேநேரம், இந்தியாவைச் சுதந்திர நாடாக அறிவிக்க ஆகஸ்ட், செப்டம்பருக்குள் ஒரு தேதியை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் இந்தியவுக்கான கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன்.
ஏதோ ஒரு நாளைச் சொல்லாமல், காரணத்தோடு அந்த நாள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளிடம் 1945, ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் சரணடைந்தது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதியை, சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார் மவுன்ட் பேட்டன்.
மவுன்ட் பேட்டன் முடிவு செய்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உகந்த நாளாக இருக்காது என்று இந்திய சோதிடர்களும் சில தலைவர்களும் கருதினார்கள். அதனால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அடுத்த நாள் தொடங்குவதால் மவுன்ட் பேட்டனுக்கும் சோதிடர்களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் நள்ளிரவில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது
டெல்லி செங்கோட்டை, கல்கத்தாவின் வில்லியம் கோட்டை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உட்பட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் யூனியன் ஜாக் கொடிகள் மாலையில் இறக்கப்பட்டன.
அன்றைய இரவு ஜவஹர்லால் நேரு, வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். ‘’நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கிறது” என தெரிவித்தார்.
இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுண்ட்பேட்டன் பிரபு இரவு 11:58க்கு, ‘இந்தியா விடுதலை அடைகிறது’ என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இரவு 12 மணிக்கு இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்றதும் சிறையில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டனர். பலரின் மரண தண்டனைகள் குறைக்கப்பட்டன. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். ஆனால், இந்த கொண்டாட்டங்களில் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை.
ஏனென்றால், நமது செல்வ வளங்களை எல்லாம் சுரண்டிச்சென்ற ஆங்கிலேயார்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் தருணத்தில் ஒரு மிகப்பெரும் வரலாற்றுப் பிழையும் செய்துவிட்டுச் சென்றார்கள்.
அதாவது ஒரே நாட்டில் வசித்த மக்களை இந்துக்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் பிரித்து பாகிஸ்தான் என்று ஒரு புதிய நாட்டை அறிவித்தனர். அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி எல்லைப் பகுதிகளில் பெரும் வன்முறை வெடித்தது. அதுவரை சுதந்திரத்திற்காகப் போராடிய காந்தியடிகள் ஆகஸ்ட் 15ம் தேதி எல்லைப் பகுதியில் நடந்த வன்முறையை அடக்குவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தார். எல்லையில் சிந்திய ரத்தத்தைத் துடைக்கும் பணியில் இருந்தார்.
அதனாலே நம் தேசத்தந்தையாக இன்னும் எல்லோர் மனதிலும் நிற்கிறார் மகாத்மா காந்தி.