ஆயிரம் நோய் தீர்க்கும் அற்புதம்
கசப்பானவை எல்லாமே மருந்து என்று சொல்லப்படுவது உண்டு. அதில் ஒன்றுதான் பாகற்காய். இதை, நாம் உட்கொள்வதால் பல நோய்களிலிருந்து விடுபடலாம் என்கின்றன, சித்த மருத்துவக் குறிப்புகள்.
இந்தப் பாகற்காய், கொடி வகையைச் சேர்ந்ததாகும். இதன் தாயகம், இந்தியா ஆகும். சீனாவில் 14-ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது. தற்போது தைவான், வியட்நாம், தாய்லாந்து, பிலிபைன்ஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் பாகல் பயிர் செய்யப்படுகிறது. ஆசிய நாடுகள் பலவற்றில் இந்தக் காய் பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. இது, வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் நன்கு செழித்து வளருகிறது. பாகற்காயில் மிதிபாகல், பழுபாகல், நாய்ப்பாகல், கொம்புபாகல், நரிப்பாகல், பேய்ப்பாகல் எனப் பல வகைகள் உண்டு. எனினும், நம்நாட்டில் மிதிபாகல், கொம்புபாகல் என இரு வகைகள் மட்டுமே பயிர் செய்யப்படுகின்றன. கொம்புபாகல் 20 செமீ நீளத்துடன் நீள்வட்ட வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். மிதிபாகல் 10 செமீ நீளத்துடன் நீள்வட்ட வடிவத்தில் அடர் பச்சை நிறத்தில் காணப்படும்.
இந்தப் பாகற்காயில், ஏ மற்றும் சி, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டோதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) உள்ளிட்ட வைட்டமின்களும், ஃபோலேட்களும் அதிகளவு காணப்படுகின்றன. மேலும், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன. குறைந்த அளவு எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, பைட்டோ நியூட்ரியன்களான ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின், லுடீன் ஸீக்ஸாத்தைன் முதலியனவும் பாகற்காயில் உள்ளன. பாகற்காயில் பீனாலிக் சேர்மங்களான கேலிச் அமிலம், கேட்சீன் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் ஆகியவையும் காணப்படுகின்றன. இவை சிறந்த ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகளாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகின்றன.
மேலும், பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்குத் தாய்ப்பால் சுரக்க உதவும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்றுக்கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கும்.
பாகற்காய், கண் சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வாக உள்ளது. பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். அதேநேரத்தில் பாகற்காய், உடலுக்குப் பயன் தரக்கூடியது என்றாலும் தினமும் அதனைக் குறைத்தே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். அவர்கள், மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று, பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதேபோல், பாகற்காய் சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், பாகற்காய் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, பாகற்காயையும் அளவுடன் சாப்பிடுவதே நல்லது.
* மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பாகற்காயைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
* உடலில் கட்டிகள், புண்கள், பருக்கள், கறுப்புத் தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் இருந்தால் பாகற்காய் சூப்புடன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால், மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகும். சருமக் கோளாறுகளும் நீங்கும்.
* வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுவேளை பாகற்காய் சாப்பிட்டால், கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகும்.
* ஒரு பிடி கொடிப்பாகல் இலையுடன், ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து, கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
* பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி, ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. இதுபோன்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குச் செய்ய வேண்டும். அதுபோல், பூஞ்சை தொற்றினால் தோலின் பாதிக்கப்பட்ட இடத்தில் பாகல் இலையினை அரைத்துப் பூசி நிவாரணம் பெறலாம்.
* பாகற்கொடியின் வேரினை அரைத்து மூலநோயால் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச எரிச்சல், வலி, ரத்தக்கசிவு ஆகியவை தீரும். பாகற்காய் சாற்றினை அருந்தினாலும் மூலநோய் குணமாகும் (தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்).
* பாகற்காய் இலைச் சாறுடன், சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை என இரண்டுவேளை உட்கொள்ள விஷ சுரம் நின்றுவிடும்.