• Home
  • ஞானகுரு
  • பிடிவாத குணம் பெண்ணுக்கு அதிகம் ஏன்..?

பிடிவாத குணம் பெண்ணுக்கு அதிகம் ஏன்..?

Image

உறவுகள் பிரிவுகள்

பிடிவாத குணம் பற்றி உரை நிகழ்த்திக்கொண்டு இருந்தார் ஞானகுரு. அவரை தொந்தரவு செய்யாமல் அருகில் அமர்ந்து கேட்டார் மகேந்திரன்.

’’தான் நினைப்பது மட்டுமே சரி என்ற பிடிவாத குணம் கொண்டவர்கள் காலம்காலமாக இருக்கிறார்கள். இவர்களை திருத்திவிடலாம், மாற்றிவிடலாம் என்று மல்லுக்கட்டுவது பொதுவாக நல்ல பலன் தருவதில்லை.

பிடிவாதம் என்பது ஒரு நெருப்புத் துண்டு. சிறிதாக இருக்கும்போது எளிதாக ஊதி அணைத்துவிடலாம். பெருநெருப்பாக மாறிவிட்டால், அது ஊரையே கொளுத்திவிடும். ஒருவரது பிடிவாதத்தால் ஒரு நாடு அழிந்துபோன விபரீதம் நடந்திருக்கிறது.

அறியாமையில் மட்டுமே பிடிவாதம் பிடிப்பார்கள் என்று அர்த்தமில்லை. உலகப்பெரும் விஞ்ஞானி என்று கருதப்படும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த பிடிவாதம் காரணமாக அறிவியல் உலகில் அவமானம் சந்தித்தார்.

டைரக்ட் கரன்ட் எனப்படும் டிசி பயன்படுத்துவதே பாதுகாப்பானது என்று எடிசன் நம்பினார். நிகோலா டெஸ்லா உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆல்டர்நேடிங் கரன்ட் எனப்படும் ஏசி முறையே பாதுகாப்பானது என்று நிரூபித்துக் காட்டினார்கள். அதன் பிறகும் எடிசன் டிசி முறையை ஆதரித்து விளம்பரம் கொடுத்தது மட்டுமின்றி, தான் சொன்னதை சரி என்று நிரூபிக்க அநாகரிகமாகவும் எதிரிகளை தாக்கத் தொடங்கினார். அவரது பிடிவாதமே அவருடைய அறிவியல் அறிவை கேலிக்குரியதாக மாற்றியது.

அதேபோல், மன உறுதியுடன் வீரர்கள் போர் செய்தால் எந்த போரையும் வென்று விடலாம் என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்தார் ஹிட்லர். ஒரு சில இடங்களில் பின்வாங்குவது போர்த்தந்திரம் என்று அவரது படைத்தளபதிகள், சொன்னதை ஹிட்லர் ஏற்கவே இல்லை. அதனால் மாபெரும் தோல்வியைத் தழுவினார். அவரது பிடிவாதம் ஒரு நாட்டின் தோல்விக்கும் ஏராளமான உயிர்கள் இழப்புக்கும் காரணமாகிப் போனது.

பிடிவாத எண்ணம் கொண்டவர்கள் அத்தனை சீக்கிரம் தங்கள் எண்ணத்தை, நம்பிக்கையை அல்லது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அவர் சொல்வது தவறு என்று ஆதாரம் காட்டினாலும், தரவுகள் கொடுத்தாலும் அதை நம்ப மாட்டார்கள்’’ என்றார்.

‘’பிடிவாத குணம் ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?’’ மகேந்திரன் கேள்வி கேட்டார்.

‘’பொதுவாக மிகவும் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவர்களும், அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்படுபவர்களும் பிடிவாத குணத்துடன் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் தனித்துவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் பிடிவாத குணத்தைப் பிடித்துக்கொள்கிறார்கள்.

இதில் ஆண்களின் பிடிவாதம் வெளிப்படையாகத் தெரிகிறது. பெண்களுடைய பிடிவாதம் அமைதியான எதிர்ப்பாக அமைகிறது.

அதேநேரம் ஆண்களின் பிடிவாதம் ஒரு வகையில் அவரது குணத்தைக் காட்டுவதாகவும், அவர் அப்படித்தான் என்றும், நேர்மையான குணம் என்றும் கருதப்படுகிறது. அதேநேரம், ஒரு பெண் பிடிவாதம் காட்டினால், அது திமிர் என்றும் இரக்கமில்லாத குணம் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. அதனாலே தங்கள் பிடிவாதத்தைப் பெண்கள் அமைதிப் போராட்டமாக நடத்துகிறார்கள். பேசாமல் இருப்பார்கள். கண்ணீர் வடிப்பார்கள். சத்தமில்லாமல் யுத்தம் நடத்துவார்கள். இது, ஆணின் பிடிவாதத்தை விட மோசமானது.

நிறைய பேர் தங்கள் வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் சில முடிவுகளில் பிடிவாதம் காட்டுவார்கள். எங்காவது ஒரு பஸ் ஸ்டாண்ட் உணவகத்தில் அதிக விலை கொடுத்து, மோசமான உணவு சாப்பிட்டு ஏமாற்றம் அடைந்திருப்பார். ஆன்லைன் பொருள் வாங்கி ஏமாந்திருப்பார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், பஸ் ஸ்டாண்டில் உள்ள அத்தனை உணவகமும் மோசம், ஆன்லைன் சேல்ஸ் எல்லாமே சீட்டிங் என்று உறுதியாக இருப்பார். இந்த விஷயத்தில் யார், என்ன கருத்து சொன்னாலும் அவரது எண்ணத்தை எளிதில் மாற்றிக்கொள்ளவே மாட்டார்…’’ என்றார் ஞானகுரு.

‘’பிடிவாதம் உறவுகளுக்குள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது…’’

‘’வெளியே பிக்னிக் போனாலும் ஹோட்டலில் உணவு சாப்பிடக்கூடாது, இரவு 10 மணிக்கு படுத்து தூங்கவேண்டும் என்று சிலர் கட்டுப்பாடுடன் இருப்பார்கள். ஆரோக்கியத்திற்கும் கட்டப்பாடான வாழ்க்கைக்கும் இது ரொம்பவே நல்லது.  அதேநேரம், இந்த விஷயத்தில் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் பிடிவாதம் பிடிப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்திவிடும். ஒரு சில நேரங்களில், ஒரு சில நபர்களிடம் இதை மாற்றிக்கொள்வதே சரியான செயல்.

அதேநேரம் அன்பு, பாசம், அக்கறை, ஆரோக்கியம் என்று ஏதேனும் காரணம் சொல்லி பிடிவாதம் பிடிக்கும் ஆண்களின் கட்டளைகளை பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பிடிவாதம் பிடிக்கும் பெண்ணை ஆண்களால் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

தலைமுடியை விரித்துப் போட்டு வருவேன், ரெடிமேட் ஆடை உடுத்துவேன் என்றெல்லாம் பெண் பேசுவதை அவளுடைய தனிப்பட்ட விருப்பமாக ஆண் மதிப்பதில்லை. தலையை விரித்துப்போடுவது அபசகுனம், ரெடிமேட் ஆடைகள் தரமில்லாதவை என்பது போன்ற கருத்துத் திணிப்புகளால் சண்டை அதிகரிக்கிறது.

சின்னச்சின்ன விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளத் தயாரில்லாத பெண் தன் கருத்தில் விடாப்பிடியாக இருக்கிறாள். இப்படி பிடிவாதம் பிடிக்கும் பெண், எல்லாவற்றையும் விட்டு கொடுக்கத் தயாரில்லாத பெண் வாழ்க்கை முழுவதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாள். அதனாலே, பெரும்பாலான வீடுகளில் தினமும் சண்டை நடந்துகொண்டே இருக்கின்றன…’’ என்றார் ஞானகுரு

’’பிடிவாதத்தைப் போக்கும் வழிகள் என்ன..?’’

‘’தன்னுடைய விருப்பம், தன்னுடைய செயல் மீது ஒருவர் பிடிவாதம் பிடிப்பது தவறு இல்லை. அடுத்தவர் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதே சிக்கலாகிறது. குடும்பத்தில் எல்லோரும் தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று ஆணித்தரமாக நிற்பது சிக்கலாகிறது.

தனது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ விரும்பும் பெண்ணும் ஆணும்  தங்கள் பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து, தங்கள் தனித்தன்மையுடன் வாழ சரியான வழியை கண்டறிய வேண்டும். சமரசம் செய்யாத பெண்களும் ஆண்களும் வாழ்க்கையில் சரிவையே சந்திப்பார்கள்…’’ என்றார் ஞானகுரு.

‘’பிடிவாத குணத்தை எப்படி மாற்றுவது..?’’

‘’பிடிவாத குணத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட லட்சியம் அடைவதற்கு பிடிவாதம் பிடிக்கலாம். இந்த விஷயத்தில் தோல்வி கிடைத்தாலும் கடைசி வரை முயற்சித்த திருப்தி கிடைக்கும். பொதுவாக பிறர் விஷயத்திலும் பிடிவாதம் காட்டுவதே விமர்சனத்துக்கு உள்ளாகிறது.

இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் பிடிவாதம் என்பது ஒரு மாற்றிக்கொள்ள வேண்டிய குணம் என்பதை ஏற்க வேண்டும். எனவே, பிடிவாதக்காரர் என்று யாராவது சொன்னால், என்ன விஷயத்திற்கு பிடிவாதம் பிடிக்கிறேன், என்ன காரணத்திற்காக பிடிவாதம் பிடிக்கிறேன், இதனால் என்ன நிகழ்கிறது, யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.

சக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் முக்கியம். எனவே, பிடிவாதத்தால் பிறர் உணர்வுகள் பாதிக்கப்படுகிறதா என்பதை யோசிக்க வேண்டும்.

எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது சரி என்ற எண்ணம் தவறு. நாம் நினைப்பதும் தவறாக இருக்கலாம் என்ற எண்ணம் வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும், எல்லோரும் ஒரே வழியில் நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒவ்வொரு நபரும் அவருக்குப் பிடித்த வழியில் நடக்கலாம். எனவே, கருத்தை சொல்லலாமே தவிர, கட்டாயப்படுத்துவது சரியல்ல…’’

‘’நிறைய பேர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் உறுதியாக இருக்கிறார்களே..?’’

‘’அப்படிப்பட்ட நபர்களை திருத்த நினைப்பது எளிதல்ல. பெரும்பாலோர் அவர்களே அடிபட்டு அதன்பிறகே புரிந்துகொள்வார்கள். பிடிவாதம் பிடிப்பவர்களுக்கு நேரடியாக உண்மையைச் சொன்னால் புரியவே புரியாது. எனவே, அவருக்குப் புரியும் வகையில் கதையாக அல்லது மூன்றாம் மனிதர்கள் மூலம் புரிய வைக்க முயற்சி செய்யலாம். அவ்வளவுதான். பிடிவாதக்கார மனிதர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள், அந்த குணம் உங்களுக்கும் வந்துவிடலாம்..’’ என்று சிரித்தார் ஞானகுரு.

Leave a Comment