ஊழலுக்கு அடுத்து ஓர் ஆதாரம்
நான்காவது நாளாக நாடாளுமன்றத்தின் நான்கு அவைகளும் முடங்கினாலும் பரவாயில்லை, அதானி விவகாரத்தில் பேசவே மாட்டோம் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார் மோடி. அதானியின் ஊழல், மணிப்பூர் கலவரம் ஆகிய விசயங்களை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இன்று 4 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடங்கியுள்ளது பாஜக அரசு.
அதானியை சந்தித்து என்ன பேசினார் ஸ்டாலின் என்ற கேள்விக்கும் இதுவரை ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் அதானி குழுமத்திற்கும், 5 மாநில மின்வாரியங்களுக்கும் இடையே நடைபெற்ற பேரங்கள் தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் வழங்கும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனம் அதிக விலை நிர்ணயித்திருந்த நிலையில், சந்தைவிலையை விட அதிகமாக உள்ள அந்த விலைக்கு மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்சார வாரியங்களும் முதலில் தயங்கின. அதானி குழுமத்தின் சார்பில் கையூட்டு பேரம் இறுதி செய்யப்பட்ட பிறகு தான் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில மின்வாரியங்களும் ஒப்புக் கொண்டன என்று தி வயர் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக அரசு அதானி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ள சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.7.01 என்ற விலையில் 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதைக் கண்டித்து அந்த ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அடுத்த சில நாட்களில் அது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அன்றைய திமுக தலைவர் கலைஞர், அடுத்து வரும் ஆண்டுகளில் சூரிய ஒளி மின்சார விலை குறையும் எனும் போது அதானியுடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்? என வினா எழுப்பினார். அந்த வினா இப்போதும் பொருந்தும்.
அப்போது 25 ஆண்டு கால ஒப்பந்தத்தை விமர்சித்த திமுக, இப்போது அதே அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்?
வாயைத் திறங்க ஆட்சியாளர்களே…