• Home
  • சர்ச்சை
  • நடிகைகள் ஏன் கவர்ச்சி காட்டுகிறார்கள்..?

நடிகைகள் ஏன் கவர்ச்சி காட்டுகிறார்கள்..?

Image

 – உளவியல் ரகசியம்

சினிமா தொடர்பான விழா மேடைகளில் ஒரு காட்சியை எல்லோரும் பார்க்க முடியும். நடிகைகள் கவர்ச்சியான ஆடையுடன் மேடைக்கு வருவார்கள். குட்டியான கீழாடை அணிந்திருப்பார்கள். அதை மறைப்பதற்கு ரொம்பவே சிரமப்படுவது போன்று தொடையை நெருக்கி உட்கார்ந்தபடி நெளிவார்கள். அதேபோல், சேலை உடுத்திவரும் நடிகைகள், அடிக்கடி மாராப்பை சரி செய்வது போன்று இழுத்துவிட்டு கூடுதல் கவர்ச்சி காட்டுவார்கள்.

அந்த நடிகை சேலை உடுத்தாமல் மாடர்ன் உடையில் வந்திருந்தால் அத்தனை பேரும் அதை கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த பெண் அதையே விரும்புகிறாள். சேலையை அடிக்கடி விலக்குவதும் மூடுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதற்காகவே செய்யப்படுகிறது. இதனை அந்த நடிகை முழு விருப்பத்துடன் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு வகையில், அப்படி கவர்ச்சி காட்டுவதற்காக அவருக்கு கூடுதல் சம்பளம் படத் தயாரிப்பாளர் கொடுத்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு. கவர்ச்சி காட்டுவதன் காரணமாக அவருக்கு மேலும் சில படம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் திட்டமிட்டு ஆடையைக் குறைத்திருக்கலாம். சினிமா, மாடலிங் போன்ற உலகில் பெண்ணுக்கு உடலே மூலதனம் என்பதால் அதை மார்க்கெட்டிங் செய்வதில் எந்த தவறும் இல்லை.

சினிமா நடிகைகள் மட்டுமின்றி சாதாரண பெண்களிடமும் இந்த கவர்ச்சி காட்டும் குணத்தைக் காண முடியும். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக புதிய ஆடை, அணிகலன்கள் அணிந்துவருவார்கள். அதனை சம்பந்தப்பட்ட நபர் கவனித்து பாராட்டு தெரிவிக்கும் வரை வெவ்வேறு வழிகளில் அதை வெவ்வேறு வகையில் உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.  

ஆண், பெண் என இருவரும் எதிர்பாலினத்தைக் கவர்வதற்கு அலங்காரம் செய்வது, ஆடையைக் குறைப்பது, பந்தா காட்டுவது போன்றவை இயல்பு தான், இதில் யார் மீதும் எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால், உயிர்களை அதிக அளவு உற்பத்தி செய்வதற்கு இயற்கையாக ஹார்மோன் சுரப்பதால் வரும் திருவிளையாடல்.  

பொதுவாக எல்லா உயிரினங்களிலும் ஆண் இனமே பெண்களைக் கவர்வதற்கு அதிகம் மெனக்கெடுகிறது. ஆண் மயில் ஆடுகிறது. ஆண் சிங்கம் பிடறியைக் காட்டி கர்ஜிக்கிறது. ஆண் நாய் வீரத்தைக் காட்டுகிறது. மனித இனத்தில் மட்டுமே கொஞ்சம் வித்தியாசம். ஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் அதீத ஆடை அணிகிறார்கள் அல்லது ஆடையைக் குறைக்கிறார்கள்.

ஆடை என்பது பெண்ணின் விருப்பம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ‘நான் எத்தனை குறைவான ஆடை உடுத்திக்கொண்டு வந்தாலும், அதை மற்ற ஆண்கள் பார்க்கக்கூடாது, ஆபாசம் என்று முத்திரை குத்தக்கூடாது..’’ என்று உரிமைக்குரல் எழுப்புவதே சர்ச்சையாகிறது.

‘என் உடல் என் உரிமை என்பது வீட்டுக்குள் இருக்கும் வரை சரி. பொதுஇடங்களில் கண்ணியமாக உடை இருக்க வேண்டும்’ என்பது ஆண்களின் குரலாக இருக்கிறது. ‘ஆடையை ஒழுங்காக உடுத்திக்கொண்டு வந்தால் நாங்கள் ஏன் பார்க்கப்போகிறோம்?’ என்ற கேள்விக்கும், ‘பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும்’ என்ற உத்தரவுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இவை எல்லாமே ஆண்களின் ஆணவத்தைக் காட்டும் வார்த்தைகள்.

நீ இப்படி உடை அணிந்தால் அவன் அப்படித்தான் பார்ப்பான், ஆணை பெண்ணின் ஆடையே தூண்டிவிடுகிறது என்றெல்லாம் கூறுவது ஆண்களை அவமானப்படுத்துவது ஆகும். ஆடை மூலமே பெண்ணை ஆண் பார்க்கிறான் என்றால் அவனுடைய ஆறாவது அறிவு எங்கே போகிறது. அவனது சகோதரி அல்லது தாய், மகள் அப்படி குறைவாக ஆடை உடுத்தியிருந்தாலும் அவன் தூண்டப்படுவானா என்பது முக்கியமான கேள்வி.  

ஒரு பெண்ணை அவள் உடுத்தியிருக்கும் ஆடைக்காக அவமானப்படுத்துவதற்கு, கிண்டல் செய்வதற்கு, தொடுவதற்கு எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. பெண்ணின் அனுமதி இன்றி அவளைத் தொடக்கூடாது என்பதே அறிவு, இதை சிறுவனாக இருக்கும் காலத்தில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டியது அவசியம்.

அதேபோல் பெண், ‘எனக்குப் பிடித்த ஆடையை நான் அணிகிறேன். எனக்குப் பிடித்த வகையில் உடுத்துகிறேன். கவர்ச்சியாக இருப்பதை நான் விரும்புகிறேன். என்னை தொந்தரவு செய்யாமல் ஆண்கள் ரசிப்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை’ எனும் அளவுக்கு தெளிவுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். யார் பார்த்தால் என்னக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் நடக்கும் தைரியம் வேண்டும்.

ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட உலகத்தில் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் ஆணின் விருப்பத்தை மதிக்காத மனைவி, ஆணின் சொல்லைக் கேட்காத மகள் இன்றும் கொலை செய்யப்படுகிறார்கள்.

நிர்வாணமாக போஸ் கொடுப்பதை சில பெண்கள் புரட்சி என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களைப் பார்த்து ஆண்கள் அச்சப்படுகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். உடல் என்பது வெகுமானமும் இல்லை, அவமானமும் இல்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

விரும்பும் உடையை போட்டுக்கொண்டு திரியும் சுதந்திரம் பெண்ணுக்கு வர வேண்டும். இன்னமும் அப்படியொரு சூழ்நிலை வரவில்லை என்பதே உண்மை. இதை உருவாக்கும் கடமை பெண்ணுக்கு உண்டு. ஒவ்வொரு அம்மாவும் தன்னுடைய மகனுக்கு ஆடை சுதந்திரம் பற்றி கற்றுத்தர வேண்டும்.

ஆடையில் எதுவும் தவறு இல்லை, பார்வையில் மட்டுமே தவறு இருக்கிறது என்பதை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படியொரு நிலை வரும்போது பெண்கள் உடையை ஆபாசமாக ஆண்கள் பார்க்க மாட்டார்கள். அது, ஆடையாக மட்டுமே தெரியும்.

Leave a Comment