ஞானகுரு பதில்கள்
கேள்வி : இன்று பூமியில் நடப்பது ஜனநாயகமா… பண நாயகமா..?
- கே.கனகவல்லி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
ஓட்டு போடும் உரிமை இருப்பதால் நாட்டில் ஜனநாயகம் நடப்பதாக மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா..? எவர் ஒருவர் ஜெயித்து வருகிறாரோ, அவர் சர்வாதிகாரியாக இருக்கவே விரும்புகிறார். கவுன்சிலராக இருந்தாலும், பாரதப் பிரதமராக இருந்தாலும் நிரந்தர ஆட்சிக்கு ஆசைப்படுகிறார்கள். எனவே பணத்தை செலவழித்து மீண்டும் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஆக, இங்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து.
கேள்வி : எதனை சமன் செய்தால் வாழ்வில் ஏற்றம் தாழ்வு இருக்காது..?
- பி.பூவரசன், சூலக்கரைமேடு.
ஞானகுரு :
கிரிக்கெட் போட்டி நடக்கும்போது யாருக்கு பூ, யாருக்கு தலை என்று வீரர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், யாருக்கு எது விழுந்தாலும் விளையாட்டு நடக்கத்தான் போகிறது என்று ரசிக்கும் மனப்பான்மையில் அதிக பார்வையாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல விளையாட்டை ரசிக்கும் திருப்தியே முக்கியமாக இருக்கும். யாருடைய வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிதாக கவலை இருக்காது. அப்படிப்பட்ட ரசிகராகவே வாழ்க்கையும் வாழ்தல் வேண்டும்.
கேள்வி : தொழில் செய்பவர்கள் நேர்மை, நியாயத்தை கடைபிடிக்கத் தவறுவது ஏன்..?
- ஏ.ராஜலட்சுமி, ஆர்.ஆர்.நகர்.
ஞானகுரு :
அதிக லாபம் எனப்படும் பேராசையாலே பிறரை ஏமாற்றத் துணிகிறார்கள். தொழிலில் கொஞ்சம் பொய், கொஞ்சம் சீட்டிங் தவறு இல்லை என்ற எண்ணமே பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது. இதனை தொழில் தர்மம் என்று கூறுவது மாபெரும் அயோக்கியத்தனம். நூறு ரூபாய் ஏமாற்றுபவன் ஆயிரம் ரூபாய்க்கு ஏமாறும் நேரத்தில்தான், அந்த வலியை உணர்வான். ஆனால், அதற்குள் காலம் கடந்து போயிருக்கும்.