• Home
  • ஞானகுரு
  • வாழ்நாள் முழுவதும் உங்கள் துணை யார்..?

வாழ்நாள் முழுவதும் உங்கள் துணை யார்..?

Image

மிகவும் வருத்தமான மனநிலையில் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவரது கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. என்னவென்று கண்களால் விசாரித்தார்.

‘’நான் என் நண்பன் ஒருவனை மிகவும் நம்பினேன். அவசரம் என்று அவன் கேட்ட நேரத்தில் என் மனைவியின் நகையை விற்று பணம் கொடுத்தேன். இப்போது அவன் திடீரென குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டான். என்னைப் போன்று நிறைய பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறான். நான் அவனை என் வாழ்நாள் முழுக்க எனக்கு துணையாக இருப்பான் என்று நம்பியிருந்தேன். இனி, நான் யாரையும் நம்பமுடியாமல் செய்துவிட்டான்… இப்படியொரு ஏமாளியான நான் வாழவேண்டுமா என்று சிந்திக்கும் அளவுக்குத் துரோகம் செய்துவிட்டான்’’ என்றார் கண்ணீருடன்.

‘’உன் வாழ்க்கையில் ஒரே ஒருவரை மட்டும் தான் நீ நம்ப முடியும். எல்லா நேரமும் உன் பக்கம் நிற்பார்…’’

‘’என் மனைவியா..?’’

‘’இல்லை…;;’’

‘’என் அம்மா அல்லது அப்பாவைச் சொல்கிறீர்களா..?’’

‘’இல்லை…’’

‘’வேறு யார், என் பிள்ளைகளை நம்ப வேண்டுமா..?’’

‘’இல்லவே இல்லை…’’

’’அப்படியென்றால் உடன் பிறந்தவர்களை நம்ப வேண்டுமா… உலகிலேயே உன்னதமான உறவு என்று நட்பைச் சொல்கிறார்கள். அந்த உறவிலே ஏமாற்றுகிறார்கள் எனும் போது வேறு யாரை நம்ப முடியும்..?’’

‘’இப்படியெல்லாம் அவநம்பிக்கை கொள்ளாதே… நீ அவர் ஒருவரைத் தான் நம்ப வேண்டும், நம்ப முடியும். அவர் மட்டுமே கடைசி வரை உன்னுடன் இருப்பார்…’’

‘’யார் கடவுளைச் சொல்கிறீர்களா.. உங்களுக்குத் தான் அவர் மீது நம்பிக்கை இல்லையே…’’

‘’யார் யாரையோ சொல்கிறாய். கண்ணுக்குத் தெரிந்த உன் உடம்பைச் சொல்லத் தெரியவில்லை. இந்த உடம்பு மட்டுமே உன் வாழ்க்கைத் துணை. இது மட்டுமே உன் கடைசி காலம் வரையிலும் உன்னுடன் நிற்கும். இந்த உடம்பை மட்டும் நீ நம்பினால் போதும். வேறு யாரையும் எதற்காகவும் நம்ப வேண்டாம். மற்றவர்கள் எல்லாம் வழித் துணை மட்டுமே. பயணத்தில் யார் யாரோ உன்னுடன் வருவார்கள், அவரவர் நிறுத்தம் வந்ததும் இறங்கிக் கொள்வார்கள். இறப்பு வரை உன்னுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பு தான். இதை மட்டும் பத்திரமாகப் பார்த்துக்கொள். யாருக்காகவும் இந்த உடம்பை விட்டுக்கொடுக்காதே…’’

‘’இந்த உடம்புக்கு நான் என்ன செய்ய வேண்டும்..?’’

‘’உடம்புக்கு அன்பு கொடு. நல்ல உணவு கொடு. போதிய உழைப்பு கொடு. நல்ல ஓய்வு கொடு. அழகான ஆடை கொடு. உடலுக்குள் இருக்கும் மனதுக்கு மகிழ்ச்சி கொடு. ஒட்டுமொத்த உடலுக்கும் அழகு கொடு…’’

‘’அது எப்படி?’’

‘’சினிமா நட்சத்திரங்கள் உடம்புக்கு அத்தனை தூரம் மெனக்கெடுகிறார்கள், அதனாலே அழகாக இருக்கிறார்கள். நீயும் உடம்பு மீது காதல் கொள். இந்த உடம்புக்கு கெடுதல் செய்யும் எந்த செயலையும் செய்யாதே. உன்னைத் தவிர வேறு யாரும் உன் உடலை பாதுகாக்க முடியாது. வேறு ஒரு நபர் ஏமாற்றினார் என்பதற்காக உன் உடலையும் மனதையும் கெடுத்துக்கொள்ளாதே. நண்பர் செய்த தவறுக்கு உன் உடம்புக்கு தண்டன கொடுக்காதே…’’

‘’ஆனால், என்னால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லையே…’’

‘’மன்னிப்பதற்குக் கற்றுக்கொள். நீயே அவருக்குக் கொடுத்ததாக நினைத்துக்கொள். மாற்ற முடியாததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்’’ என்றார் ஞானகுரு.

இப்போது மகேந்திரன் தெளிவுக்கு வந்திருந்தார்.

Leave a Comment