ஞானகுரு பார்வை
மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அது, நெரிசலில் சிக்கி மரணம் அடைவது மன்னிக்க முடியாத குற்றம்.
கல்வி அறிவு, சமூகநீதி, காவல்துறை கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்று பெருமைப்படுகிறோம்.
ஆனால், ஒரு சினிமா நடிகரை நேரில் பார்ப்பதற்கு உயிர் கொடுக்கும் ரசிகர் கூட்டம் தமிழகத்தில் தான் அதிகம் என்ற சிறுமை இப்போது கிடைத்திருக்கிறது.
காலை 9 மணிக்கு நாமக்கல்லில் மக்களை சந்திக்க வேண்டிய விஜய், பொறுப்பே இல்லாமல் அந்த நேரத்தில்தான் சென்னையில் இருந்தே கிளம்புகிறார். இதை கண்டிக்காதவர்கள் அரசு மீது பழி போடுகிறார்கள்.
உணவு, தண்ணீர் இல்லாமல் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் எட்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கும் ரசிகர்கள் உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்து பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இதில் அரசியல் செய்கிறார்கள்.
புத்தகத்தில் படிப்பது அறிவு அல்ல. இத்தனை பெரிய கூட்டத்தில் கலந்துகொள்வது ஆபத்து என்பதைப் புரிவதே அறிவு. இத்தகைய நெரிசல் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை புரிவதே அறிவு. அதோடு பஸ் பின்னே போகும் ஆட்டு மந்தையாக இருக்க வேண்டாம் என்று ரசிகர்களை எச்சரிக்காத பெற்றோர்களும், அப்படி எச்சரித்தும் கேட்காத பிள்ளைகளுமே இந்த துயரத்துக்குப் பொறுப்பு.
சுய அறிவு மட்டுமே மனிதருக்கு அழகு. நடிகர் என்றால் திரையில் ரசியுங்கள். தலைவர் என்றால் தேர்தலில் ஓட்டு போடுங்கள். உயிரை வேறு ஒரு நபருக்குக் கொடுத்துவிட்டு பிறர் மீது பழி போடாதீர்கள். வாழ்க்கை இனிமையானது. வாழும் வரை போராட வேண்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.