என்ன செய்தார் சைதை துரைசாமி – 434
டிசம்பர் மாதம் என்றால் சென்னைவாசிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை விட, 2015 பெருவெள்ளமே நினைவுக்கு வரும். ஏனென்றால், சென்னையின் ஒவ்வொரு நபரும் இந்த வெள்ளத்தில் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர். சென்னை எப்படி பாதிக்கப்பட்டது என்பதை மேலோட்டமாகப் பார்த்தால் மட்டும் போதாது. ஆழமாகப் பார்க்க வேண்டும்.
பொதுவாக மழையைத் தெய்வமாக வணங்குவது தமிழர்களின் மரபு. மாரியம்மன் என்பது மழைக் கடவுள்தான். அதனால் தண்ணீருக்கு மதிப்பு, மரியாதை கொடுப்பதுடன் நில்லாமல், அதனை சிக்கனமாக சேமிக்கவும் வழிவகை செய்திருந்தனர்.
மழை நீர் மூலம் ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக அடுத்த ஏரிக்கு தண்ணீர் போகும். அதுவும் நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் பாயும். இவை தவிர ஆறு, குளம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர் தேக்கங்கள் இருந்தன. முன்பு சென்னையிலும் புறநகரிலும் கிட்டத்தட்ட 400 நீர்நிலைகள் இருந்ததாக அறியப்படுகிறது.
ஆனால் நாகரிக வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. குளம், குட்டையிலும் குடியிருப்புகள் முளைத்தன. சென்னையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் மனிதன் செய்த தவறுகளை தட்டிக் கேட்கும் வகையில், சென்னையில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மக்கள் ஒவ்வொரு நபருக்கும் நீர்நிலை விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் பாடம் கற்பித்துச்சென்றது. ஆனால் நாம் இன்னமும் நீர்நிலை பாதுகாப்பில் அசட்டையாக இருக்கிறோம் என்பதுதான் வேதனை.
அடையாறு, சத்யா ஸ்டுடியோ அருகில் இருக்கும் திரு.வி.க மேம்பாலத்தை ஒட்டி 485 மீட்டராகவும், மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் 222 மீட்டராகவும் அகலம் கொண்ட அடையாறு, நந்தம்பாக்கத்தில் 59 மீட்டராகவும், சைதாப்பேட்டை மேம்பாலம் பகுதியில் 83 மீட்டராகவும், கோட்டூர்புரம் பகுதியில் 125 மீட்டராகவும் சுருங்கி ஓடுகிறது. இந்த சுருக்கம் காரணமாகத்தான் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
அடையாறு சுருங்கியதற்குக் காரணம் ஆக்கிரமிப்பு என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், இந்த ஆக்கிரமிப்புகள் எப்போது தொடங்கியது என்று தேடிப் பார்த்தால், ஆச்சர்யமான விடை கிடைக்கும்.
- நாளை பார்க்கலாம்.
