ஞானகுரு யார், எங்கே இருக்கிறார்?

Image

மகிழ்ச்சிக்கு வழிகாட்டி

குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் கலந்துசெய்த ஒரு மனிதனை சந்திக்க நேர்ந்தது. ஆம், குற்றால மலையில், ஒரு நல்ல மழை நேரத்தில் ஞானகுரு அறிமுகம் கிடைத்தது.

நாக்குக்குப் பதில் கத்தி இருக்கிறதோ என்றுதான் அந்த சந்திப்பில் நினைத்தேன்.  கோபமும் ஏமாற்றமும் அடங்கியபிறகு யோசித்ததில்… உண்மைக்குத்தான் அத்தனை வலிமை என்பது புரிந்தது. மீண்டும் சந்திக்கச் சென்றதில் ஏமாற்றமே…

இரண்டு வருடங்கள் கழித்து திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் தரிசனம். புளகாங்கிதத்துடன் அருகே சென்றதும், மீண்டும் வாயில் இருந்து நெருப்புதான் கொட்டியது. இந்த முறை விலகாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என்னைவிட்டு விலகிச் சென்றாலும் தேடித்தேடிச் சென்றேன். விரட்டியடிக்காத குறைதான். எப்படியோ அடுத்தடுத்த சந்திப்புகளில் புன்னகை வந்தது.

அவர்  இதிகாசம் படித்தோ, மந்திரங்கள் ஜெபித்தோ, தியானம் செய்தோ நான் பார்த்ததே இல்லை. ஆனால், செய்திதாள் படித்து நான் பார்த்ததில்லை, ஆனால் அவர் வார்த்தைகளில் அத்தனை தனித்தன்மை இருந்தது. அவருக்கு தோழனாக, ரசிகனாக இருக்கலாமே தவிர, யாரும் பக்தனாக, சீடனாக இருக்கமுடியாது என்பது விரைவிலே புரிந்துபோனது.

ஏன் அப்படி..? பதிலும் வைத்திருந்தார். ’நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்பவர் எனக்கு தேவையில்லை. அவரது வளர்ச்சியும் தேடலும் அந்த கணமே நின்றுவிடும். உன் பசிக்கு நீதான் சாப்பிட வேண்டும். நான் சாப்பிடுவதைப் பார்ப்பதால் உன் பசி தீராது’ என்றார்.  

வாழ்க்கை என்பது ஒரு மெல்லிய நேர்க்கோடு. அதனை சிக்கலாகுவதும் சின்னாப்பின்னமாக்குவதும்தான் மனிதனே. ஆனால், எந்த ஒரு கட்டத்திலும் அவனால் திரும்பிவந்து நிம்மதியாக வாழமுடியும் என்று கூறிய ஞானகுருவின் வாக்குகளைத்தான் தொடர்ந்து கூறிவருகிறேன்.

அவரது போதனைக் கேட்பதைவிட, ’ஞானகுருவை ஒரே ஒரு முறை தூரத்தில் இருந்து தரிசிக்க மட்டுமாவது வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள்’ என்றுதான்  நிறைய பேர் கேட்கிறார்கள். ஏன்,  நீங்களும் கேட்கலாம்.

அனைவருக்குமான பதில் இதுதான்…

’ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல, காற்றைப் போல் சுழன்று கொண்டு இருப்பவர். அவர் ஒருவர் அல்ல, ஓராயிரம் பேர். எனவே தேடுங்கள். நீங்களும் அவரை கண்டுகொள்ள முடியும். வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் காணத் தொடங்குங்கள். முன்முடிவுகள் இல்லாமல் எல்லாவற்றையும் புதிதாக அணுகுங்கள்.

மனித வாழ்வின் சிக்கல்களுக்குக் காரணங்களைக் கண்டுபிடித்தார் புத்தர். அந்த சிக்கல்கள் இருக்கும் நேரத்திலும் மகிழ்ச்சியாக மனிதர்கள் வாழ முடியும் என்று சொல்பவரே ஞானகுரு. வறுமை, உறவு, அதிகாரம் என்ற எந்தவொன்றும் இல்லாத நிலையிலும் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார்.

ஆரோக்கியமான உடல், நிம்மதியான மனம், போதிய அளவுக்குப் பணம் மற்றும் ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டுபவரே ஞானகுரு. அப்படியொரு நபரை கண்டுபிடித்தால், அவரே ஞானகுரு. அப்படியொரு நபராக மாறிவிட்டால் நீங்களும் ஞானகுரு.

Leave a Comment